டிஜிட்டல்மயமாக்கல் வருவதற்கு முன்பு வரை இந்தியாவில் மருந்து விநியோகம் என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இன்று நவீனத்தின் உதவியால் மருத்துவத் துறையின் முக்கியமான அம்சமான மருந்து விநியோகம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இன்று வீட்டில் இருந்தே மருந்துகளைப் பெற முடியும். ஏன், மருத்துவர்கள் உடன் கலந்தாலோசிக்க முடியும். இத்தகைய அபார வளர்ச்சியை நடத்தி காட்டிய முதன்மையான நிறுவனம்தான் இன்றைய யூனிகார்ன் அத்தியாயத்தில் நாம் பார்க்கப் போகிறோம்.
அந்த நிறுவனம்தான் ‘ஃபார்ம்ஈஸி’ (PharmEasy). மருந்துவத் துறையில் மருந்து சப்ளை செயினை மேம்படுத்தி மலிவு விலையில் மருந்துகளை வழங்க வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்டதுதான் இந்த ‘ஃபார்ம்ஈஸி’.
‘ஃபார்ம்ஈஸி’ நிறுவனத்தின் கதை என்பது வெறும் ஊக்கமளிப்பதோடு அல்லாமல், கூட்டு முயற்சியின் மகத்துவத்தையும், விடாமுயற்சி செய்ய வேண்டிய வெறியையும், தவறுகளில் இருந்து பெற வேண்டிய படிப்பினைகளையும் நமக்குத் தரும் என்பது நிச்சயம்.
கல்லூரியில் போட்ட விதை...
தர்மில் ஷெத், தவல் ஷா, ஹர்ஷ் பரேக், சித்தார்த் ஷா மற்றும் ஹார்திக் தேதியா ஆகிய 5 பால்ய கால நண்பர்களில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது. மும்பையின் காட்கோபரின் புறநகர் பகுதிகளில் பிறந்து, வளர்ந்து, வசித்து வந்தவர்கள்தான் இந்த ஐந்து பேரும். சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்த அவர்களின் நட்பு பின்னாளில் ஸ்டார்ட்அப் வணிகத்தை நடத்தும் அளவுக்கு வளரும் என்பதை அப்போது அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அது நடந்தது.
சிறு வயது நண்பர்கள் வளர்ந்து பல இடங்களில் படிக்கச் சென்றனர். இதில் தவல் ஷா எம்பிபிஎஸ் படிக்க, மற்ற நால்வரும் பொறியியல் முடித்து பின்னர் எம்பிஏ படித்து வந்தனர். கல்லூரிகளில் படிக்கும்போதே இவர்கள் தங்கள் தலைமைப் பண்பை நிரூபித்தவர்கள். அதற்கு உதாரணம் தான் சித்தார்த் ஷா செய்தது.
கல்லூரிகளில் படித்து முடிக்கும்போது மற்றவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை பற்றி சிந்தித்து பிளேஸ்மென்ட்களை அட்டென்ட் செய்துகொண்டிருக்க, மாற்றி யோசித்த சித்தார்த் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார். அதாவது, ஒரு வேலைக்கு செல்லக் கூடாது. மாறாக, சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என நினைத்தார். அதற்கு விதையாக அமைந்தது எம்பிஏ இறுதி ஆண்டின் ப்ராஜெக்ட்.
அகமதாபாத் ஐஐஎம்-மில் படித்துக் கொண்டிருந்த சித்தார்த் இறுதி ஆண்டின் ப்ராஜெக்ட் வாயிலாக இந்தியாவின் முதல் ஆன்லைன் மருந்தகத்தைத் தொடங்குவதை தனது திட்டமாக கொண்டிருந்தார். அப்படி தொடங்கியதுதான் Dialhealth.com என்ற நிறுவனம்.
எந்தவொரு மருந்து, மருத்துவம் குறித்த தகவல் அல்லது ஆலோசனை வேண்டும் என்றால், டயல் ஹெல்த்தின் '40005000' என்ற எண்ணை அழைத்தால் போதும். ஆன்லைன் மூலமாக அந்த சேவை வழங்கப்படும். இதுதான் டயல் ஹெல்த்தின் ஐடியா. முன்பு சொன்னது போல் சித்தார்த்தின் தலைமைப் பண்புக்கான எடுத்துக்காட்டு இது.
அதுமட்டுமில்லை, அந்த 5 நண்பர்களின் வாழ்க்கையை மாற்றிய மொமண்ட்டும் இதுவே. இந்திய மருத்துவத் துறையை மாற்றியமைக்க வித்திட்ட தொடக்கப் புள்ளியும் இதுதான். அதாவது, சொந்த தொழில் தொடங்க நினைத்து சித்தார்த் ஷா செயல்படுத்திய இந்த திட்டத்தை பற்றி அறிந்த ஐந்து நண்பர்களின் ஒருவரான ஹார்திக் தேதியா, இதில் தானும் பங்குகொள்ள விரும்பினார். உடனடியாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவும் திரும்பினார். அவரும் சித்தார்த்தும் சேர்ந்து ஏர்டெல்லில் பணிபுரிந்து கொண்டிருந்த ஹர்ஷ் பரேக்குடன் பேசி அவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்கின்றனர். 2012-ல் இவை அனைத்தும் நடக்கிறது.
2013-ல் தர்மில் ஷெத்தும் படிப்பை முடிக்கிறார். 2014-ல் தவல் ஷா எம்பிபிஎஸ் முடிக்கிறார். இப்போது அனைத்து நண்பர்களும் பிசினஸில் ஒன்றிணைகின்றனர். ஆர்வமும் உழைப்பும் இருந்தாலும் ‘டயல்ஹெல்த்’ திட்டமிட்டபடி செயல்படவில்லை. இதனால் ஆன்லைனில் இருந்த வணிகத்தை ஆஃப்லைனுக்கு மாற்றுகின்றனர்.
‘டயல் ஹெல்த் மெடிக்கல்’ என்ற சில்லறை விற்பனைக் கடை வருகிறது. மருந்து சந்தையில் 1.5 - 2 லட்சம் பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது ஒரு சராசரி சில்லறை விற்பனைக் கடையில் 3,000 - 4,000 தயாரிப்புகளை மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, ஒரு சாதாரண மெடிக்கல் மூலம் மக்களுக்கு தேவையான மருந்துகளை கொடுக்க முடியாது என்பதை உணர்ந்து, அனைத்து தயாரிப்புகளையும் வைத்திருப்பதற்கான வழிகளை ஆராய தொடங்கினர்.
ஒன்று, கடையை பெரிதாக்க வேண்டும் அல்லது சப்ளை செயினில் ஒரு எகோ சிஸ்டமை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதற்கான வழி என்பதை உணர்ந்த அவர்கள், அதன் பிறகு, ‘அசென்ட் ஹெல்த்’ (Ascent Health) என்ற பெயரில் மருந்து விநியோக வணிகத்தை தொடங்கினர். 2014-ல் தொடங்கிய இது ஹிட் அடித்தது. பூஜ்ஜியத்தில் தொடங்கி 12 மாதங்களில், மாதம் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை வருவாய் ஈட்டியது ‘அசென்ட் ஹெல்த்’. இந்த நேரத்தில், தர்மில் ஷெத் 91streets என்கிற மற்றொரு பிசினஸை தனிப்பட்ட முறையில் நடத்திவந்தார்.
அதேநேரம், சுகாதாரத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த தவல் ஷா, நோயாளிகள் குறிப்பாக முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், அத்தியாவசிய மருந்துகளை தொடர்ந்து பெறுவதில் எவ்வளவு சிரமம் உள்ளது என்பதை நேரில் கண்டு அறிந்துக் கொண்டிருந்தார். மேலும், மருந்து பற்றாக்குறை, அதை வாங்க மெடிக்கல் வரும்போது உண்டாகும் உடல் ரீதியான சிரமம் ஆகியவை மருந்து விற்பனை துறையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை உணரவைத்தது.
இந்த பிரச்சினைகளை தொழில்நுட்ப உதவியுடன் தீர்க்க வேண்டும் என்று எண்ணிய தவல் ஷா, அப்படி செய்தால் அது மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதையும் தீர்க்கமாக நம்பினார். இதில் பிசினஸுக்கான வாய்ப்பு இருப்பதையும் அறிந்து ஐடியாவை நண்பர்களிடம் கூறுகிறார்.
‘ஃபார்ம்ஈஸி’ உதயம்
ஏற்கெனவே ‘அசென்ட் ஹெல்த்’ மூலம் வலுவான பேக்கிரவுண்டை கொண்டிருந்த நண்பர்கள், மேலும் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர். 2015-ல் ‘ஃபார்ம்ஈஸி’ பிறந்தது.
இந்திய சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ‘ஃபார்ம்ஈஸி’ நுழைந்தபோது, சந்தை துண்டு துண்டாக சிதறி இருந்தது. இந்தியாவின் 8,50,000 மருந்தகங்கள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை ஆஃப்லைனில் இயங்கின. டிஜிட்டல் மயமாக்கம் என்பது ஹைப்பர்சிட்டிகளில், அதுவும் குறைந்த அளவிலேயே இருந்தன. மேலும், தொழில்நுட்பத்தை புகுத்துவதில் அரசின் சட்டங்களும் கடுமையாக இருந்தன. இவற்றை விட பெரிய சவால், மக்களின் நம்பிக்கை!
மக்கள் ஆன்லைன் ஸ்டார்களை நம்பாமல், தங்கள் உள்ளூர் மெடிக்கலுக்கு நேரடியாக சென்று மருந்துகளை வாங்குவதிலேயே நம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்கு ஆன்லைன் மூலம் போலி மருந்துகள் வந்துவிடுமோ என்கிற அச்சம் ஒருபுறம் என்றாலும், பேக்கேஜிங் பிரச்சினை, ஆன் டைம் சப்ளை ஆகியவை மற்றொரு பக்கம் இருந்தன. இவற்றை எல்லாம் தங்களுக்கான சவாலாக எடுத்துக் கொண்டது ‘ஃபார்ம்ஈஸி’.
சரிபார்க்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற மெடிக்கல் மற்றும் சப்ளையர்கள் மட்டுமே கூட்டு சேர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு உறுதிசெய்ய சேதம் ஏற்படாத பேக்கேஜிங் செய்து கொடுத்து பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கத் தொடங்கியது.
இந்த செயல்முறைகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவந்தது. இப்படியான சேவை மக்களின் பார்வையை சந்தேகத்தில் இருந்து நம்பிக்கைக்கு படிப்படியாக மாற்ற உதவியது. 2018-19 வாக்கில், API (இந்தியாவில் Ascent PharmEasy என்பதன் சுருக்கம்) ஹோல்டிங்ஸ் என்பதை உருவாக்கி தங்களின் இரண்டு நிறுவனத்தை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தனர்.
இது அவர்கள் 2013-ல், தொடங்க விரும்பிய ஒன்றுதான். ஆனால், அந்த நேரத்தில் அவர்களை ஆதரிக்க யாரும் தயாராக இல்லை. எனவே தான் ஒருகட்டத்தில் ஐந்து பேரின் குடும்பமும் அவர்களுக்கு உதவ வந்தது. வீடுகளை அடமானம் வைத்து நிதியுதவி செய்தனர். அதுவும் ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்ய முன்வந்து பின்னர் முடிவில் இருந்து பின்வாங்கியதால் குடும்பத்தினர் முதலீடு செய்தனர். சுமார் 21 கோடி ரூபாய் திரட்டி கொடுத்தனர்.
அவர்களின் நல்ல நேரம், ஆறு மாதங்களில் 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒரு நிறுவனம் முன்வந்தது. இடைப்பட்ட காலத்தில் போட்டியாளர்களில் ஒருவரால் போலீஸ் எப்ஐஆர், தலைமறைவு என சிக்கலையும் எதிர்கொண்டது ‘ஃபார்ம்ஈஸி’. அனைத்தையும் கடந்து வந்தனர்.
ஒரு சாதாரண மருந்து விநியோக செயலியாக தொடங்கிய ஃபார்ம்ஈஸி விரைவில் இந்தியாவின் மிகப் பெரிய இ-மருந்தக தளமாக உருவெடுத்தது.
மே 2021-ல் ‘ஃபார்ம்ஈஸி’ மற்றொரு முக்கிய இ-மருந்தக நிறுவனமான Medlife-ஐ கையகப்படுத்தியது. ஜூன் 2021-ல், தமிழகத்தின் ஆரோக்கியசாமி வேலுமணியின் ‘தைரோகேர்’ நிறுவனத்தின் 66.1% பங்குகளை ரூ.4,546 கோடிக்கு வாங்கியது. இதுபோன்ற கையகப்படுத்துதல் மூலம் முதலீடுகளும் குவிந்தன.
Temasek, TPG Growth மற்றும் Prosus போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவுடன் ஐபிஓ ரிலீஸில் குவிந்த முதலீடுகள் மூலமாக யூனிகார்ன் அந்தஸ்த்தை எட்டியது. யூனிகார்ன் மதிப்பை எட்டிய இந்தியாவின் முதல் இ-மருந்தக நிறுவனம் ‘ஃபார்ம்ஈஸி’ தான்.
அடுத்தக்கட்ட பாய்ச்சலாக, இந்தியாவில் 16,000 அஞ்சல் குறியீடுகளில் 60,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மற்றும் 4,000 மருத்துவர்களை இணைத்து, 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை என்கிற கட்டத்தை அடைந்தது.
ரோலர்கோஸ்டர் சவாரி!
2021-ஆம் ஆண்டில் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்து, மதிப்பு 5.6 பில்லியன் டாலராக உயர்ந்த ‘ஃபார்ம்ஈஸி’, 2023-ஆம் ஆண்டில் கடுமையான சரிவைச் சந்தித்தது. சரிவுக்கு மிக முக்கிய காரணம், அவற்றின் சில கையகப்படுத்துதல்தான். குறிப்பாக ‘தைரோகேர்’ பங்குகளை ரூ.4,546 கோடிக்கு கைப்பற்ற, வாங்கிய கடன் ‘ஃபார்ம்ஈஸி’யை நெருங்கியது. ஒருகட்டத்தில் ஒரே வருடத்தில் 1,000 கோடி ரூபாயை திரட்டி கடனை அடைக்க வேண்டும் என்கிற நிலை உண்டானது.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ஆன்லைன் மருந்தகத் துறையில் ஏற்பட்ட சரிவும் ஆட்டிப்படைக்க விட்டுவைக்கவில்லை. 2024 நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் 14.7 சதவீதம் குறைந்து 5,664 கோடி ரூபாயாகக் குறைந்தது.
இந்த காரணங்களால் நண்பர்கள் தங்களுக்காகவே பின்வாங்கினர். எப்படி ஒவ்வொருவராக சேர்ந்து ‘ஃபார்ம்ஈஸி’யை கட்டமைத்தனரோ, அதே வேகத்தில் ஒவ்வொருவராக நிறுவனத்தில் வெளியேற ஆரம்பித்தனர். தர்மில் ஷெத், தவல் ஷா மற்றும் ஹார்திக் தேதியா ஆகியோர் ‘ஃபார்ம்ஈஸி’யில் இருந்து விலகி புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர். ‘ஆல் ஹோம்’ என்ற இன்டீரியர் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் அவர்கள்.
எனினும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த யூனிகார்ன் நிறுவனத்துக்கு தொடக்கப் புள்ளியை வைத்த சித்தார்த் ஷா தற்போது ‘ஃபார்ம்ஈஸி’யை தலைமையேற்று நடத்தி வருகிறார்.
அடுத்தடுத்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு பரப்பில் ‘ஃபார்ம்ஈஸி’யின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது. சுகாதார சேவைகளை தொழில்நுட்பத்தை கொண்டு தீர்க்கும் புதுமையான அணுகுமுறை, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் எதிர்கால ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
ஒருமுறை தர்மில் ஷெத் இப்படிக் கூறினார்:
“ஃபார்ம்ஈஸி மருந்துகளை ஆன்லைனில் விற்க மட்டும் முயற்சிக்கவில்லை. இந்திய சுகாதாரப் பராமரிப்பில் மருத்துக்கான அணுகலை எளிமைப்படுத்துவது, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை தீர்க்க முயற்சிக்கிறோம்.”
உண்மைதான். ஆரம்பம் முதல் இன்றுவரை ‘ஃபார்ம்ஈஸி’ இந்த நோக்கத்தை முன்னிறுத்தி பல ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பயணித்து பலருக்கு உத்வேகம் அளித்து வருகிறது/
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 47: CRED - குணால் ஷா கட்டி எழுப்பிய தனித்துவக் கோட்டை!
Edited by Induja Raghunathan