13 வயதில் சேவை; 17 வயதில் ஃபோர்ப்ஸ் கவுரவம் - பெங்களூரு மாணவியின் உலகளாவிய சாதனை!

04:59 PM Jun 03, 2026 | muthu kumar

பெங்களூருவைச் சேர்ந்த 17 வயது மாணவி திவா உத்கர்ஷா, சமூக தாக்கம் (Social Impact) பிரிவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியா பட்டியலில் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் பிரிவில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் மிகவும் இளைய வயதுடையவராகவும் அவர் திகழ்கிறார்.

பஸ்வேஸ்வர நகர் பகுதியில் உள்ள நேஷனல் அகாடமி ஃபார் லெர்னிங் பள்ளியில் 12-ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள திவா, விரைவில் அமெரிக்காவில் தொழில்துறை பொறியியல் (Industrial Engineering) படிப்பைத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.

தனது சாதனைக்கான காரணத்தை விளக்கி திவா கூறியபோது,

“ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 பட்டியலில் நான் இடம்பெற்றதற்குக் காரணம் ‘ப்ராஜெக்ட் சூர்யா’ என்ற எனது இலாப நோக்கமற்ற அமைப்புதான். 2021-ஆம் ஆண்டு, எனக்கு 13 வயது இருக்கும்போது, எனது தம்பி சூர்யாவுக்கு டைப்-1 நீரிழிவு நோய் கண்டறியப்பட்டது. அந்த நோயின் சிகிச்சைக்காக எங்கள் குடும்பம் சந்தித்த பொருளாதார மற்றும் மனரீதியான சவால்களை பார்த்தபோது, இந்தியாவில் இதே நிலையை எதிர்கொள்ளும் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்தேன்.”

திவா உத்கர்ஷா

திவா தனது பெற்றோர்களான உத்கர்ஷா லோகேஷ் மற்றும் பல்லவி உத்கர்ஷாவுடன் இணைந்து டைப்-1 நீரிழிவு நோய் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகே ‘ப்ராஜெக்ட் சூர்யா’வை தொடங்கினார்.

“டைப்-1 நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் தினசரி இன்சுலின் ஊசிகளைத் தேவைப்படுத்தும் நோயாகும். இந்தியாவில் நடுத்தர வருமானம் கொண்ட ஒரு குடும்பத்தின் வருமானத்தில் சுமார் 18 சதவீதம் இந்த நோயை நிர்வகிப்பதற்கே செலவாகிறது. மேலும், 80 சதவீத குடும்பங்களுக்கு அரசு மானியம் அல்லது மருத்துவக் காப்பீட்டு வசதி கிடைப்பதில்லை. 2022-ஆம் ஆண்டில் மட்டும் 35,860-க்கும் மேற்பட்டோர் டைப்-1 நீரிழிவு நோய் இருப்பதே கண்டறியப்படாமல் உயிரிழந்துள்ளனர். இந்த இடைவெளியை நிரப்புவதில் ’ப்ராஜெக்ட் சூர்யா’ முக்கிய பங்கு வகித்துள்ளது.”

2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரின் முன்னெடுப்பு அமைப்பு இதுவரை 4.02 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், டைப்-1 நீரிழிவு நோயுடன் வாழும் 3,190 குழந்தைகளுக்கு நேரடி உதவிகளை வழங்கியுள்ளது. மானியங்கள், நிறுவனங்களின் கூட்டாண்மை மற்றும் மக்கள் பங்களிப்பு மூலம் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான நிதியும் திரட்டப்பட்டுள்ளது.

’ப்ராஜெக்ட் சூர்யா’ சாதனைகள்

இதுவரை 4,500 இன்சுலின் குப்பிகள், 2,500 குளுக்கோஸ் கண்காணிப்பு ஸ்ட்ரிப்கள் மற்றும் 1,000 இன்சுலின் சிரிஞ்சுகளை சிகிச்சை செலவை ஏற்க முடியாத குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர்.

”மேலும், 200-க்கும் மேற்பட்ட ஆஷா சுகாதாரப் பணியாளர்களுக்கு நீரிழிவு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் 49,500 பேரை சென்றடைந்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 1,020-க்கும் மேற்பட்ட இலவச குளுக்கோஸ் பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன,” என்கிறா திவா.

திவா மற்றும் அவரது குழுவினர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட சர்வதேச மேடைகளில் தங்களது பணிகளை விளக்கியுள்ளனர்.

தற்போது ’ப்ராஜெக்ட் சூர்யா’, பெங்களூரு, புதுடெல்லி, வாரணாசி, மும்பை, காசியாபாத் உள்ளிட்ட இந்திய நகரங்களுடன் அமெரிக்கா, கனடா, மொராக்கோ, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் கிளைகளை அமைத்துள்ளது. 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், 35 அர்ப்பணிப்புள்ள பள்ளி மாணவர் தன்னார்வலர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச அங்கீகாரங்கள்

திவா உத்த்கர்ஷா, 2023-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க ‘டயானா விருது’ பெற்றார். மேலும், 140 நாடுகளிலிருந்து 11,000 விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்பட்ட செக்.ஆர்க் (Chegg.org) உலக மாணவர் பரிசின் (Global Student Prize) முதல் 10 இறுதிப்போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.

அதேபோல், 2024-ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற உலக நிலைத்தன்மை விருதில் (World Sustainability Award), இளைஞர் சமூகப் பிரிவில் கவுரவிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

13 வயதில் தொடங்கிய ஒரு சமூகப் பயணம், இன்று உலகின் மிக முக்கியமான இளம் தலைவர்களின் பட்டியலான ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியாவில் இடம்பிடிக்கச் செய்துள்ளது. சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும், உறுதியான நோக்கமும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை திவா உத்கர்ஷா மீண்டும் நிரூபித்துள்ளார்.