+

'இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு கோடீஸ்வரர் உருவாகிறார்' - ஹுருன் அறிக்கையில் தகவல்

மெர்சிடிஸ்-பென்ஸ் ஹுருன் இந்தியா வெல்த் அறிக்கை 2025ன் படி, வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக, இந்தியாவின் மொத்த குடும்பங்களில், கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 0.31% ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது மேலும் உயரும் என இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார செழிப்பு வேகம் எடுத்துள்ளதாக, மெர்சிடிஸ்-பென்ஸ் ஹுருன் இந்தியா வெல்த் அறிக்கை 2025 தெரிவித்துள்ளது. இது மக்களிடையே செல்வ உருவாக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுவதுடன், அதன் வேகமும் முந்தைய காலங்களைவிட அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

Mercedes-Benz Hurun India Wealth Report 2025-ன் படி, கடந்த 2021ம் ஆண்டு, இந்தியாவில் சுமார் ரூ.8.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிகர சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 4.58 லட்சமாக இருந்ததாகவும், இது 2025-ல் 8.71 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

இந்த வளர்ச்சி, நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. ஏனென்றால், இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு கோடீஸ்வரர் குடும்பம் உருவாகிறது.

millionaire

கோடீஸ்வரக் குடும்பங்கள்

மெர்சிடிஸ்-பென்ஸ் ஹுருன் இந்தியா வெல்த் அறிக்கை 2025-ன் படி, இந்தியாவின் மொத்த குடும்பங்களில், கோடீஸ்வரர் குடும்பங்கள் சுமார் 0.31% ஆக உள்ளன. வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், மகாராஷ்டிரா, 1,78,600 கோடீஸ்வரர் குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2021ல் இருந்து அம்மாநில வளர்ச்சி, 194%-ஆக உயர்ந்துள்ளது. இதில், மும்பையில் மட்டும் சுமார் 1,42,000 கோடீஸ்வரர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 55% வளர்ச்சி அடைந்து ரூ.40.5 லட்சம் கோடியாக ($480 பில்லியன்) உயர்ந்துள்ளது.

பங்குகளின் மதிப்பு உயர்வு, நுகர்வோர் சந்தைகளின் விரிவாக்கம் மற்றும் முதலீடுகளின் அதிக வருவாய் ஆகியவை இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளதாக ஹுருன் அறிக்கை குறிப்பிடுகின்றது.

இது குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சந்தோஷ் ஐயர் கூறுகையில்,

“இந்தியாவின் வளர்ச்சிக் கதை, ஒரு வளர்ந்து வரும் உள்நாட்டு சந்தை மற்றும் இன்றைய இளைஞர்களின் உயர்ந்த லட்சியங்களால் உந்தப்பட்டு, பொருளாதாரத்தின் மீள்தன்மையையும் மாற்றத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் வலுவாக வேரூன்றிய மெர்சிடிஸ்-பென்ஸ், சமூக கௌரவம், நிதி செழிப்பு மற்றும் நிகரற்ற தேவையைக் குறிக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, இந்தியாவின் செல்வ உருவாக்கம் மற்றும் ஆடம்பர நுகர்வு முறைகளின் துடிப்பை பிரதிபலிக்கிறது.

"இந்தியாவின் பொருளாதார மீள்தன்மை மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது. மேலும் எங்களது ஸ்ட்ராடஜிக் பொறுமை இந்தியாவின் நீண்ட கால நேர்மறை சந்தை கண்ணோட்டத்தையும் உற்சாகத்தையும் வரையறுக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளர் அனாஸ் ரஹ்மான் ஜுனைத் இது தொடர்பாகக் கூறுகையில்,

“எங்கள் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர கார் விற்பனை, கோடீஸ்வரர் வளர்ச்சி, பங்குச் சந்தை செயல்பாடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை ஒரே அளவுகோலில் இணைப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறது."

மேலும், இது, கிட்டத்தட்ட 200% வளர்ச்சி, இந்தியாவின் செல்வ உருவாக்கம் உண்மையானது மற்றும் மீள்தன்மை கொண்டது என்பதை நிரூபிக்கிறது. இது நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதற்கான கொண்டாட்டம் மற்றும் நம் பயணத்திற்கான ஒரு அளவுகோலாக இது உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

facebook twitter