+

உருவக் கேலி, நிற பேதம், புறக்கணிப்பு - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் புது தெம்பு: தெம்பா பவுமாவின் வெற்றிக்கதை!

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் பின்னணியில் தென் ஆப்பிரிக்க வீரர்களின் கூட்டு முயற்சி இருந்தாலும் அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா தனித்து நிற்கிறார். அவரது பெயருக்கு ஏற்

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் பின்னணியில் தென் ஆப்பிரிக்க வீரர்களின் கூட்டு முயற்சி இருந்தாலும் அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா தனித்து நிற்கிறார். அவரது பெயருக்கு ஏற்ற வகையில் அணிக்கு புது தெம்பும், நம்பிக்கையும் கொடுத்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பட்டம் வென்றதும் ‘இது ஆரம்பம்தான்...’ என்ற தொனியில் அவரது பேச்சு இருந்தது. ஷான் பொல்லாக், ஸ்மித், ஏபி டிவில்லியர்ஸ், டூப்ளசி என கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர் இந்த 28 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்தி உள்ளனர். ஆனால், அவர்களால் தங்கள் அணியை ஐசிசி தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல செய்ய முடியவில்லை. அதை செய்து காட்டியவர்தான் பவுமா. 

“தனது விளையாட்டு கேரியர் முழுவதும் கடுமையாக தெம்பா பவுமா போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த தருணம் அவரது திறனை தீர்க்கமாக வெளிப்படுத்தும் தருணமாக இருக்கலாம்,” என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஷ்வெல் பிரின்ஸ் இப்போது சொல்லியுள்ளார்.
Temba Bavuma

‘ஆம்’ அவர் சொல்வது போல தனது வாழ்க்கை முழுவதும் வாய்ப்புக்காக தெம்பா பவுமா போராட வேண்டி இருந்தது. வாய்ப்பு கிடைத்த பிறகு அதை தக்க வைப்பதற்கான போராட்டமாக அது மாறியது. இப்படியாக அவரது கிரிக்கெட் பயணம் முழுவதும் விடாமுயற்சி மற்றும் மன உறுதியோடு சண்டை செய்து வருகிறார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடது காலின் தொடை பகுதியில் தசை பிடிப்பு காரணமாக அவரால் முழு உடற்திறனோடு களத்தில் செயல்பட முடியவில்லை. இருந்தாலும் தீர்க்கமாக தன்னால் முடியும் என எய்டன் மார்க்ரம் உடன் சேர்ந்து தரமான பார்ட்னர்ஷிப் அமைத்து, அணிக்கான வெற்றியை உறுதி செய்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவின் போதே தென் ஆப்பிரிக்காவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அந்த அளவுக்கு நம்பிக்கையை அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தி இருந்தது பவுமாவின் கமிட்மென்ட். அதனால் தான் அன்றைய ஆட்டம் முடிந்ததும் லார்ட்ஸ் மைதானத்தில் குழுமியிருந்த பார்வையாளர்கள் ‘Oh, தெம்பா பவுமா’ என முழங்கினர். 

உருவக் கேலி, நிற பேதம், மட்டுப்படுத்தி பேசுவது, புறக்கணிப்பு என எல்லா விதமான எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டவர் தெம்பா பவுமா. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு கூட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் உயரத்தோடு பவுமாவின் உயரம் ஒப்பிடப்பட்டது. அப்படிப்பட்டவர் தன் அணிக்காக இன்று சாதனை படைத்துள்ளார்.

கருப்பினத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அணியில் இடம்பெற்றுள்ளார், என உள்நாட்டு அளவிலேயே அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இப்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கிய வீரராக உருவெடுத்து நிற்கிறார். தேசமே அவரது தலைமை பணப்பை கொண்டாடுகிறது.

Bavuma

தெம்பா பவுமா கடந்து வந்த பாதை - ஒரு டைம்லைன் பார்வை!

  • தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு வெளியில் உள்ள லங்காவில் கடந்த 1990-ம் ஆண்டு பிறந்தவர் தெம்பா பவுமா. 
  • சிறு வயதில் இடைவிடாது தெரு கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். 
  • கிரிக்கெட் விளையாட்டில் அவரது அபார திறனே அவருக்கு தென் ஆப்பிரிக்க தேசத்தின் சிறந்த பள்ளிகளில் உதவித்தொகை உடன் படிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது. 
  • அங்கிருந்து தனது கிரிக்கெட் ஆட்டத்தில் மேலும் மெருகேற்றி உள்நாட்டு அளவிலான கிரிக்கெட்டில் ஜொலித்தார். இருப்பினும், அவருக்கு சர்வதேச அளவில் ஆடுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது கிடைக்கவில்லை. 
  • 1990-ல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் மீதான தடை நீக்கப்பட்டது. அதன் பிறகு, கூட 80 சதவீத கருப்பின மக்கள் கொண்ட தேசத்தின் கிரிக்கெட் அணியில் அவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு என்பது மறுக்கப்பட்டது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பவுலர்களுக்கு மட்டுமே அணியில் அவர்களுக்கான வாய்ப்புகளாக இருந்தன. அதனால் கறுப்பின பேட்ஸ்மேன்கள் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்த சூழலில் தான் தென் ஆப்பிரிக்க அணியில் இடஒதுக்கீடு கொள்கை அமலுக்கு வந்தது. இதன் மூலம் தேசத்தில் உள்ள வெள்ளையின மக்கள், கருப்பின மக்கள் என அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவது, என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச கிரிக்கெட் அணியில் குறைந்தது இரண்டு வீரர்களாவது கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டி இருந்தது. இது அவர்கள் எதிர்கொண்ட அநீதிக்கான நீதியாக மாறியது. 
  • 2014-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் பவுமா. 
  • முதலில் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2016-ல் ஒருநாள் மற்றும் 2019-ல் டி20 அணியில் வாய்ப்பு பெற்றார். 
  • 2016-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 
  • அதன் மூலம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் சதம் கண்ட முதல் கருப்பின வீரர் என்ற சாதனையை படைத்தார். 

தெம்பா பவுமா கிரிக்கெட் சாதனைகள்

  • தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஐசிசி உறுப்பு நாடு என்று அந்தஸ்தை பெற்ற பிறகு 5 சதங்களை கருப்பின வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 4 சதங்களை பவுமா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,708 ரன்களை அவர் எடுத்துள்ளார். 4 சதம், 25 அரைசதம் பதிவு செய்துள்ளார். 
  • 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1847 ரன்களும், 36 டி20 போட்டிகளில் விளையாடி 670 ரன்களும் எடுத்துள்ளார். 
  • 2021-ல் தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட்டுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 
  • தொடர்ந்து 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு முன்னதாக டெஸ்ட் கேப்டன் ஆனார். 
  • அவர் தலைமையில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் முதல் 10 போட்டிகளில் கேப்டனாக 9 வெற்றிகளை பெற்ற சாதனையை இங்கிலாந்தின் பெர்சி சாப்மேன் உடன் பவுமார் பகிர்ந்து கொண்டுள்ளார். 
  • 2023-25 WTC சைக்கிளில் 13 இன்னிங்ஸ் ஆடி 711 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 59.25. 
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2-வது இன்னிங்ஸில் மார்க்ரம் உடன் சேர்ந்து 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் ஐசிசி சாம்பியன் கனவு மெய்யானது. இந்த வரலாற்று சாதனையை படைத்தவர் தெம்பா பவுமா. 
Tb

இதன் மூலம் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு இருந்தால் யாராலும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார் 5 அடி 4 இன்ச் உயரம் கொண்ட தெம்பா பவுமா. 

“என் பாட்டிதான் எனக்கு ‘தெம்பா’ என பெயர் சூட்டினார். நம்பிக்கை என்பதுதான் அதன் அர்த்தம். இது எங்கள் சமூகத்துக்கான நம்பிக்கை. எங்கள் தேசத்துக்கான நம்பிக்கை,” என தெம்பா பவுமா கூறியுள்ளார். 

தெம்பா பவுமாவின் வெற்றியை தங்களுடைய வெற்றியாக உலக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால்தான் எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் இடஒதுக்கீடும் சமூக நீதியும் அவசியம் என்ற குரல்களும் இதோடு சேர்ந்து எழுகின்றன. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பிறகு தனது மகனோடு லார்ட்ஸ் மைதானத்தில் தெம்பா பவுமா வலம் வந்த காட்சிகள் வைரலாகி உள்ளன. தெம்பா பவுமாவின் வெற்றி சொல்வது ஒன்றுதான். ‘எதிர்நீச்சல் அடி… வென்று ஏத்து கொடி’ என்பதுதான் அது. 


Edited by Induja Raghunathan

facebook twitter