பைஜுஸ் நிறுவனர்கள், பைஜு ரவீந்திரன், இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் மற்றும் ஆலோசகர் அனிதா கிஷோர், கடன் நிதியில் 533 மில்லியன் டாலர் தொகையை மறைத்து, தவறாக பயன்படுத்துவதற்காக சதி திட்டம் தீட்டியதாக பைஜுஸ் ஆல்பா வழக்கு தொடர்ந்துள்ளது.
“அரை பில்லியன் டாலருக்கு மேலான சொத்தை எந்த பரிசீலனையும் இல்லாமல், மோசடியாக மாற்றுவதற்கு கடன்தாரரை (பைஜுஸ் ஆல்பா) திட்டமிட்டு செயல்பட வைத்ததற்காக பைஜுஸ் நிர்வாகிகளை பொறுப்பேற்க வைக்கும் நடவடிக்கை இது,” என்று ஏப்ரல் 9ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தெரிவிக்கிறது.
533 மில்லியன் டாலர் கடன் நிதியின் முறைகேடான மாற்றத்தில் பைஜு ரவீந்திரன், பைஜூஸ் மற்றும் கேம்ஷிப்ட் பண்ட் ஈடுபட்டது மற்றும் பைஜூஸ் ஆல்பா இயக்குனர் பொறுப்பில் இருந்து பைஜு ரவீந்திரன் தவறியதாகவும் கண்டறியப்பட்டு பிப்ரவரி 28 உத்தரவைத் தொடர்ந்து அமெரிக்காவின் டெலாவேர் மாவட்ட திவால் நீதிமன்றத்தில், கடன் கொடுத்த குழுவினர் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் நிதியை பெற உருவாக்கப்பட்ட டெலாவேரின் சிறப்பு நோக்க பிரிவான பைஜுஸ் ஆல்பா, தற்போது பிரச்சனைக்குறிய 533 மில்லியன் டாலரை ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த நிலையில், கடன் கொடுத்தவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு, திவால் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டது.
ரவீந்திரன் மற்றும் தொடர்புடையவர்கள் மீதான டெலாவேர் தீர்ப்பிற்கு பிறகு, ரவீந்திரன் மற்றும் இரண்டு சகாக்கள் இந்த மோசடிக்கு பொறுப்பேற்க வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பைஜுஸ் அல்பாவுக்கு கடன் கொடுத்த குழுவினர் கூறியுள்ளனர்.
“பைஜு ரவீந்திரன், திவ்யா மற்றும் அனிதா ஆகியோர் வேண்டும் என்றே பைஜுஸ் ஆல்பா சொத்துக்களை மறைத்து, பணத்தின் இருப்பிடம் பற்றி தவறாக வழிகாட்டி, கடன் கொடுத்தவர்களுக்கு உரிய பணத்தை அபகரிக்க முயன்றது தெளிவாகியுள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர் மற்றும் தங்கள் தவறை மறைக்க கடமை மீறியதோடு, பல முறைகேடுகளை செய்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூவரும் தங்கள் தவறை மறைக்க, 533 மில்லியன் டாலர் நிதியின் இருப்பு மற்றும் பயன்பாடு குறித்த மாறுபட்ட தகவல்களை அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பைஜுஸ் கருத்தறிய யுவர்ஸ்டோரி தொடர்பு கொண்டுள்ளது.
ஏப்ரல் 9ம் தேதி தொடரப்பட்டுள்ள வழக்கில், ரவீந்திரன் தனக்குறிய பொறுப்பில் இருந்து தவறியதற்கான நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.
கடன் தொகையில் 533 மில்லியன் டாலரை கோரியுள்ளதோடு, அதை மாற்றியதற்கான நஷ்ட ஈடு, சிவில் மோசடி, வழக்கறிஞர் தொகையை திரும்பி அளிப்பது, வட்டி செலவுகள் உள்ளிட்டவையும் கோரப்பட்டுள்ளது.
2022 மார்ச்சில், டெர்ம் கடன் பெற்ற பிறகு பைஜுஸ் ஆல்பா, கடன் ஒப்பந்ததை மீறியது. பைஜூஸ் மற்றும் ரிஜு ரவீந்திரன் உள்ளிட்டோர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு காலத்தில் இந்தியாவின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப்பாக கருதப்பட்ட பைஜுஸ் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்காவில் திவால் வழக்குகளை சந்தித்து வருகிறது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா
Edited by Induja Raghunathan