
கல்வி என்பது தேர்வுகளிலும் தேர்ச்சியிலும் மட்டுமல்ல.பாடப்புத்தகங்களுக்கு அப்பால், வாழ்க்கை அனுபவங்களிலும் பயிற்சியிலும் இளம் தலைமுறையினரின் திறன்களை வளர்க்க வேண்டும். திறமையும் கற்கும் ஆர்வமும் உள்ள மாணவர்கள், பொருளாதாரக் காரணங்களால் உயர்கல்வியைத் தொடர முடியாமல் தவிப்பது பலரின் கதை.
இரு தசாப்தங்களாக உயர்கல்வி கற்றலில் அமைதியாக ஒரு புரட்சியை முன்னெடுத்து, சுமார் 2,000 கிராமப்புற மாணவர்களை Zoho ஊழியர்களாக்கி அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி இருக்கிறது Zoho Schools of learning (ZSL).
Zoho ஸ்கூல் தொடக்கமும் நோக்கமும்
“வழக்கமான பட்டப்படிப்புக்கு மாற்றாக 2005ல் 'ஜோஹோ ஸ்கூல் ஆப் லெர்னிங்' தொடங்கப்பட்டது. மென்பொருள், உற்பத்தித் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் Zoho-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவுக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது.
“தமிழ்நாட்டின் கிராமங்களில் இருக்கும் மாணவர்களிடம் திறமை நிறைந்திருக்கிறது, ஆனால் வழிகாட்டுதலும் வாய்ப்புகளும் பற்றாக்குறையாக உள்ளன. இந்த இடைவெளியை நிரப்பவே ZSL ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டது,” என்கிறார் Zoho-வின் தொழில்நுட்பத் துறை இயக்குநரும் ஜோஹோ ஸ்கூல் தலைவருமான ராஜேந்திரன் தண்டபாணி.

ராஜேந்திரன் தண்டபாணி, தலைவர், Zoho schools of learning
சென்னை வேளச்சேரியில் ஒரு சிறிய அறையில் தொடங்கிய இந்த ஜோஹோ ஸ்கூல், அரசுப் பள்ளி மாணவர்களையும், கிண்டி ரேஸ் கோர்ஸ் ஊழியர்களின் குழந்தைகளையும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தது.
10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு எளிய கணக்குத் திறனும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனும், சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அப்படிப்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சமூக உயர்வை மையமாகக் கொண்டு, மென்பொருள் மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு, சிப், மருத்துவத் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் Zoho-வின் பரிசோதனையாகவே ZSL தொடங்கப்பட்டுள்ளது.
தனித்தன்மையான கல்வி முறை
ZSL-இன் தனித்தன்மை, சிறந்த ஆசிரியர்களோ பாடத்திட்டமோ அல்ல, மாறாக Zoho-வின் பணியிட அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதே. மென்பொருள், வணிகம், வடிவமைப்பு ஆகிய துறைகளில் Zoho-வில் பணியாற்றுவோரின் அனுபவங்களே பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.
“கல்லூரியில் கற்பதைவிட, மற்றவர்களுடன் பழகும்போது மாணவர்கள் அதிகம் கற்றுக்கொள்கின்றனர்,” என்கிறது ZSL. உணவகம், விளையாட்டுத் திடல் என Zoho-வின் எல்லா இடங்களிலும் மாணவர்கள் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதால், தங்கள் துறையை முன்கூட்டியே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

ZSL பயிற்சி பெறும் மாணவர்கள்
ZSL சென்னையில் தொடங்கி, தென்காசி, தருவை, கும்பகோணம் ஆகிய இடங்களில் 2025-இல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. Zoho School of Technology இந்த நான்கு இடங்களிலும் இயங்குகிறது. Zoho School of Business சென்னை மற்றும் தருவையில், Zoho School of Design சென்னையில் மட்டும் செயல்படுகிறது.
மாணவர்களுக்கு ஆதரவு
ZSL மாணவர்களிடம் கட்டணமதாக எதையும் வசூலிப்பதில்லை; மாறாக, இரண்டு வருட பயிற்சி காலத்தில் முதல் வருடம் ₹10,000, இரண்டாம் வருடம் ₹15,000 என உதவித்தொகை வழங்குகிறது. முதல் வருடம் வகுப்பறைக் கற்றல், இரண்டாம் வருடம் Zoho குழுவுடன் பணி அனுபவம் என மாற்றுக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயிற்சி முடிந்த பிறகு, முறையான நேர்காணல் மூலம் Zoho-வில் அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
“Zoho நிறுவனத்திற்காக நேர்காணல் நடத்தும் போது, கல்லூரி மாணவர்களிடம் செயல்திறன் குறைவாக இருப்பதை உணர்ந்தோம். புத்தக அறிவை செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இதற்கு மாற்றாக, ஜோஹோ ஸ்கூல் மாணவர்களை நேரடியாகப் பணியிடத்திலே பயிற்சி பெற வைக்கிறது. வருகைப் பதிவு, தேர்வுகள் போன்றவை இல்லை. மாணவர்கள் Zoho ஊழியர்களுடன் போட்டி போட்டு தங்கள் திறனை வளர்த்துக் கொள்கின்றனர்,” என்கிறார் ராஜேந்திரன்.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டம்
ZSL-இன் பாடத்திட்டம் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப மாறுகிறது. தொடக்கத்தில் வெப் டெவலப்மென்ட்டுக்கான அடிப்படை செயலிகளை உருவாக்க கற்றுத்தரப்பட்டது. தற்போதைய நிலையில் ஒரு மென்பொறியாளர் பல திறன் கொண்டவராக இருக்க வேண்டியுள்ளது. அதற்கேற்ப ஒரு மாணவன் தொழில்நுட்ப ரீதியிலான அறிவைப் பெற்றவனாக மட்டும் இல்லாமல், தொழில்நுட்பத்தின் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கான முறைகளும் ZSLல் கற்றுத் தரப்படுகிறது.

ZSL வகுப்பறையில் மாணவர்கள்
“AI நாம் பணியாற்ற வேண்டிய முறையை மாற்றி இருக்கிறது. இதனால் நாம் செயல்படும் விதத்திற்கும் மறுவடிவம் தேவைப்படுகிறது. மிக வேகமாக வளர்ச்சி கண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது AI. இமைக்கும் நேரத்தில் பல தகவல்களை கொண்டு வந்து கொட்டிவிடுகிறது. அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும். அது கொடுக்கும் தகவல்கள் சரியா என்று அதனால் மதிப்பிட முடியாத பணியை நாம் செய்ய வேண்டும். ஏஐ-ன் வளர்ச்சியைக் கண்டு அஞ்சாமல், அதற்கேற்ப அதனை பயன்படுத்துவதற்கு ஏற்ப நம்முடைய திறன்களை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்வது,” என்று சிந்திக்க வேண்டும் என்கிறார் ராஜேந்திரன் தண்டபாணி.
வாழ்க்கையை மாற்றிய கதைகள்...
2015ல் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையைச் சேர்ந்த குமரேசன் அங்குள்ள ஜோஹோ பள்ளியில் பயிற்சி பெற்று 10 ஆண்டுகளாக Zoho-வில் பணியாற்றி வருகிறார்.
“என்னுடைய சொந்த ஊர் மத்தளம்பாறை, புல்லுகாட்டு வலசை கிராமத்துல இருக்குற அரசு உயர்நிலைப் பள்ளியில +2 முடிச்சேன். அப்பா கூலித் தொழிலாளி, காலேஜ் படிக்க ஆசை இருந்தாலும் அப்பாவால படிக்க வைக்க முடியல. ஸ்கூல்ல மாணவர்களுக்கு ஒரு நேர்காணல் வெச்சாங்க அதுல நானும் கலந்துக்கிட்டேன். அப்போ அது என்னோட வாழ்க்கைப் பாதையை மாற்றப் போகுதுன்னு நான் நினைச்சே பார்க்கல. Zoho-ன்னு ஒரு நிறுவனம் இருக்குன்னு கூட அப்போ எனக்குத் தெரியாது.
நேர்காணல்ல நான் தேர்வாகி 2015-2017ல் ZSL பயிற்சியில சேர்ந்தேன். அந்த 2 வருஷ பயிற்சி எனக்கு என்னென்ன எதிர்கால வாய்ப்புகள் இருக்குன்னு உணர வெச்சுது. தென்காசியில் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு வாழ்க்கையை நகர்த்தி இருக்க வேண்டிய நான், 2017 முதல் Zoho-வில் பணியாற்றி வருகிறேன். ZSLன் வழிகாட்டுதலால், தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை மட்டுமின்றி என்னுடைய வாழ்க்கைக்கு மறுவடிவம் கொடுக்கும் நம்பிக்கையையும் பெற்றேன்.
இப்போது எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை மாறி இருக்கிறது. ZSL நிலையான வருமானத்தை மட்டுமின்றி, சுய-கற்றல் திறன் மற்றும் என்னால் எதையும் எளிதாக கற்றுக் கொண்டு முன்னேற முடியும் என்ற உறுதியை எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது,” என்கிறார் குமரேசன்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த நிவேதா கணேசனுக்கு உயர்கல்வி கனவு தொலைவாக இருந்தது. விசைத்தறி தொழிலாளரான தன்னுடைய அப்பாவிற்கு நிதி நெருக்கடி தர நிவேதா விரும்பவில்லை. +2விற்குப் பிறகு என்ன செய்வதென்று குழம்பி இருந்த நிவேதாவிற்கு ZSL, பள்ளி மாணவர்களுக்கு நடத்திய நேர்காணல் அவருடைய வாழ்க்கைத் திசையை மாற்றியுள்ளது.
“+2 முடித்த பிறகு பள்ளியில் ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி தந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக சொன்னாங்க. மேற்படிப்பை தொடர முடியுமா என்று குழப்பத்தில் இருந்த எனக்கு வாய்ப்பு என்னும் கதவு திறக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
9 மாதங்கள் அவர்கள் தந்த பயிற்சியும் அதன் பின்னர் Zoho குழுவினருடன் இணைந்து செயல்படும் வாய்ப்பும் நான் என்னுடைய குறைபாடுகளைக் களைந்து எனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர உதவியாக இருந்தது. ZSLன் மாற்றுக் கல்வி முறை என்னுடைய திறனை கட்டமைக்க உதவியது.
”2 ஆண்டுகள் கழித்து Zoho நிறுவனத்தில் டெவலப்பராக பணியில் சேர்ந்து என்னுடைய குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். சரியான வழிகாட்டுதலுடன், தேவைக்கேற்ற திறன் வளர்ச்சியை சொல்லித் தரும் கல்வி முறையும் இன்றைய மாணவர்களின் தேவை. அது இருந்தால் ஐடி நிறுவனப் பணி பற்றிய எந்த புரிதலுமே இல்லாத பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் கூட அவர்களின் திறமையை நிரூபித்து எட்டாக் கனிகளையும் எளிதாக பறித்து பாக்கெட்டில் போடலாம்,” என்கிறார் நிவேதா.

நிவேதா கணேசன், ZSL முன்னாள் மாணவி
குமரேசனும், நிவேதாவும் டெஸ்டிங், டெவலப்பர் என்று மென்பொருள் சார்ந்த பணிகளில் அவர்களுக்கான எதிர்காலப்பாதையை தேர்ந்தெடுத்தார்கள். தொழில்நுட்பம் பற்றிய ஆர்வம் இல்லை என்றாலும் வரைகலை மட்டுமே தெரிந்த யோகேஸ்வர பாண்டியனுக்கும் அவருடைய திறனுக்கு ஏற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது ஜோஹோ ஸ்கூல்.
“மதுரை குலமங்களம் என்னுடைய சொந்த ஊர். +2 முடித்துவிட்டு லேப் டெக்னீஷியன் படிப்பில் சேர்ந்தேன், ஆனால் குடும்பச் சூழலால் 1 வருடத்தில் படிப்பு தடைபட்டுவிட்டது. Zoho-வில் பணியாற்றும் ஒருவர் ஜோஹோ பள்ளி பற்றி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1 வருடம் குடும்பத்தின் நெருக்கடிக்கு நடுவே ZSL பயிற்சியை எடுத்துக் கொண்டேன்.
20 வயதிற்குள் இருந்தால் மட்டுமே ZSL-இல் சேர் முடியும், மே மாதம் எனக்கு 20 வயதாக இருந்தது, என்னுடைய நல்ல நேரம் மார்ச் மாதத்திலேயே ZSLல் சேரும் வாய்ப்பு கிடைத்தது. 2022ல் Zoho school of design-இல் சேர்ந்தேன், முறையாக வரைகலை தெரியாது என்றாலும் என்னுடைய படைப்புகள் அனைவரின் கவனம் பெற்றது. ZSL டிசைனிங்கில் அடிப்படை வரைகலை திறன் சொல்லிக் கொடுத்தார்கள். அங்கு என்னுடைய திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு மட்டுமல்லாமல், என்னுடைய மனநிலை, வாழ்க்கை முறை, என என்னுடைய எதிர்காலத்தை மாற்றும் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.
”பணத் தேவைகளுக்காக கட்டிடங்களுக்கு பெயின்ட் அடிப்பவனாக இருந்திருக்க வேண்டிய நான் ஒரு சிறு வாய்ப்பால் நான் விரும்பும் துறையில் முன்னற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் Zoho payments-இல் விஷுவல் வடிவமைப்பாளராக உள்ள யோகேஸ்வர பாண்டியன்.

யோகேந்திரன், ZSL முன்னாள் மாணவர்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் Zoho, ZSL மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அவர்களின் திறமை மதிப்பிடப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2 ஆண்டு பயிற்சி முடித்த பிறகு zoho-வில் பணியில் சேர்வதற்கான நேர்காணலுக்கு அந்த மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 20 ஆண்டுகளில் சுமார் 2200 மாணவர்கள் இதுவரை ZSLல் பயிற்சி முடித்து சென்றிருக்கின்றனர், இவர்களில் 2150 பேர் Zohoவிலேயே பணியாற்றுகின்றனர்.
'மறுபடி' - பெண்களுக்கான வாய்ப்பு
மாணவர்களுக்கு மட்டுமின்றி பெண்களை மையப்படுத்தி ZSL 'மறுபடி' என்கிற திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பல காரணங்களுக்காக பணியைத் தொடர முடியாத பெண்களுக்கு வயது வித்தியாசமின்றி திறனை மட்டும் ஊக்கப்படுத்தும் விதத்தில் 3 மாத பயிற்சி கொடுத்து அவர்களை Zoho நேர்காணலில் பங்கேற்க வைக்கும் பணிகளை மறுபடி மூலம் செய்து வருகின்றனர். 2022ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் சுமார் 65 பெண்கள் பயிற்சி பெற்று Zohoவில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் கற்பதற்கு தயாராக இருப்பவர்களுக்கே எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்தியாவில் இருந்து கொண்டு ஒரு நிறுவனம் சிலிக்கான் வேலி வரை உயர முடியும் என்பதற்கு சான்றாக இருந்து காட்டுகிறது Zoho. அதே போல, ஒரு நிறுவனத்திற்குள் ஒரு சிறு பள்ளியை உருவாக்கி அந்நிறுவனத்திற்கு தேவையான மாணவர்களை அந்தப் பள்ளியில் இருந்தே கொண்டு வர முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ZSL திகழ்கிறது.
பட்டங்களும், சான்றிதழ்களையும் தாண்டி, திறமைக்கும்; எதிர்காலம் வசந்தகாலமாக வாய்ப்புகளை அள்ளி வழங்கும் என்பதை ஜோஹோ ஸ்கூல் மாற்றுக் கல்வி உணர்த்தியுள்ளது.