
இன்னும் சில வாரங்களில் 2025ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், கூகுள் தளம், இந்தாண்டு கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட தகவல்களைப் பட்டியலிட்டுள்ளது. வித்தியாசமாக A முதல் Z வரை என ஆங்கில எழுத்துக்களின் வரிசையில், தேடப்பட்ட தேடல்களை சுவாரஸ்யமாக வகைப்படுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் பார்க்கும்போது, கலாச்சார அம்சங்கள் தொடங்கி, உலகளாவிய டிரெண்டிங்குகள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வரை என எல்லாவற்றையும் இந்தியர்கள் அலசி ஆராய்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

முதல் இடத்தில் ஐபிஎல்
கூகுள் வரிசைப்படுத்தியுள்ள இந்த 2025ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தகவல்கள் பட்டியலில், ஐபில் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் அதிகம் தேடப்பட்ட நிகழ்வாக இது உள்ளது. இந்தியர்கள் கிரிக்கெட் மீது எவ்வாறு தீராக் காதலுடன் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது.
கிரிக்கெட் மட்டுமின்றி, 2025 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த டிரெண்டிங் கருப்பொருளாக விளையாட்டு இருந்துள்ளது இந்தப் பட்டியல் மூலம் தெரிய வருகிறது. அதன்படி,
- முதலிடத்தில் ஐபிஎல்
- 3ம் இடத்தில் ஆசிய கோப்பையும்,
- 4ம் இடத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியும் உள்ளன.
அதன் தொடர்ச்சியாக, 6ம் இடத்தில் புரோ கபடி லீக்கும், 7ம் இடத்தில் மகளிர் உலகக் கோப்பையும் இடம் பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவான ஏஐ (AI) என்பதை வெறும் ஒரு வார்த்தையாக மட்டும் கடந்து விடாமல், பல டிரெண்டிங்குகளுக்கு மூலக்காரணமான ஒன்றாக மாற்றியிருக்கிறது 2025. அதை உறுதி செய்யும் விதமாக, கூகுளின் AI உதவியாளரான ஜெமினி; கூகுள் தேடலில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட இரண்டாவது வார்த்தையாக உள்ளது. எலான் மஸ்க்கின் க்ரோக் இந்தப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

10வது இடத்தில் தர்மேந்திரா
பிரபல பாலிவுட் திரைப்படமான சயாரா, தனது விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே அதிகம் சென்று சேர்ந்துள்ளது என்பது, இப்பட்டியலில் அது 9வது இடத்தைப் பிடித்ததின் மூலம் தெரிய வருகிறது.
இந்தப் பட்டியலின் பத்தாவது இடத்தில் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் பெயர் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அவர் காலமானதாக வதந்தி பரவியது, அது உண்மையில்லை என அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்திருந்தது, பின்னர் இவை அனைத்தும் நடந்த சில தினங்களிலேயே அவர் உயிரிழந்தது என ஊடகங்களில் அவர் பெயர் அடிக்கடி இடம் பெற்று வந்தது. எனவே தர்மேந்திரா பற்றியும் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர்.

கும்பமேளா முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை
ஏ முதல் இசட் வரையிலான பட்டியலில், B-க்கு நிகில் காமத்தின் பாட்காஸ்டில் பங்கேற்ற பிரையன் ஜான்சனையும், ‘E’ என்பதன் கீழ், ‘எனக்கு அருகில் நிலநடுக்கம்’ என்ற தேடல்களும், T & Uன் கீழ், தெகுவா (thekua) மற்றும் உகடிச்சே மோடக் (ukadiche modak) போன்ற பாரம்பரிய சமையல் குறிப்புகளும், இட்லி போன்ற பழைய விருப்பங்களுடன் சேர்ந்து தேடப்பட்டுள்ளன.
'Z' என்ற எழுத்தின் கீழ், அசாமிய பாடகரும், இசையமைப்பாளருமான ஜுபீன் கார்க்கின் மறைவு குறித்த தேடல்கள் ஆகும்.
இதேபோல், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளாக மகா கும்பமேளா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தேசிய பாதுகாப்பு தொடர்பான தேடல்களும் இடம் பெற்றுள்ளன.