சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறும் UEF வர்த்தக உச்சி மாநாடு 2025 கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசின் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் தொடங்கி வைத்து, “உன்னத தமிழகம் – 2047க்குள் தமிழ்நாடு 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற தொலைநோக்கு பார்வையை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், பஹ்ரைன் நாட்டின் ஃபக்ரோ பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம். முகமது அப்துல்லா அலி ஃபக்ரோ சர்வதேச விருந்தினராக பங்கேற்றார். மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, மற்றும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல்க் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகத் தலைவர் டாக்டர்.ஜின்னா ரஃபிக் அகமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த மூன்று நாள் கருத்தரங்கு மற்றும் வர்த்தக கண்காட்சி உச்சி மாநாடு, 20க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்கள், 6000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 100க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், செல்வாக்குமிக்க சிந்தனையாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
ஆக்கப்பூர்வமான தொழிற்துறை ஆலோசனைகள், சந்தை அணுகல் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மூலம், 10 மடங்கு வணிக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட யுக்தி கூட்டாண்மைகளை வலுப்படுத்த உச்சிமாநாட்டின் போது மொத்தம் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இதில் முக்கிய மைல்கல் நிகழ்வாக, UEF மற்றும் SDC (( ECOSOC க்கு ஆலோசனை வழங்கும் அந்தஸ்துடன் கூடிய - SUSTAINABLE DEVELOPMENT COUNCIL) இடையே ஒரு மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உட்பட UEF உடன் தொடர்புடைய 45 கல்வி நிறுவனங்களில் ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDG - SUSTAINABLE DEVELOPMENT GOALS) நிறைவேற்ற இந்த மாநாடு வழிவகுக்கும்.
இந்நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, UEF இன் இடர்மிகு புத்தொழில் முதலீட்டு நிதி ரூ.50 கோடி வெளியிடப்பட்டது. வளர்ச்சிக்கு மூலதனம் தேடும், தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
"திராவிட முறை அரசியல் அடிப்படையிலான உள்ளடக்கிய மற்றும் சமச்சீர் வளர்ச்சியே இந்த இலக்கை எட்டுவதற்கான வழி. உயர்மதிப்புள்ள வேலைவாய்ப்புகள், AI சார்ந்த தொழில்கள், ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாடு எதிர்காலத்தின் அடையாளம். கப்பல் கட்டுதல், சாகச சுற்றுலா போன்ற ப்ளூ எகானமி துறைகளும் முக்கிய முன்னுரிமை பெறுகின்றன,” என்றார் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா.
நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் பத்மஸ்ரீ விக்ரம்ஜித் சிங் சஹானி, லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா ஆகியோர் நிறைவுரையாற்றினர்.