
2021ம் ஆண்டு திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை, ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பேருக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டரங்கில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் நேற்று நடைபெற்றது. சாதனை படைத்த தமிழ் பெண்களின் சங்கமமாக, பெரும் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், சாதனை படைத்த பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த பெண்கள், கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ‘குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மொத்தம் 1.31 கோடி பேர் பயனடைவார்கள்’ என்றும் தெரிவித்தார்.

கனவை நோக்கி ஓடும் சிங்கப்பெண்கள்
வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, நிலமில்லாத ஏழை எளிய மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி நிலங்களைப் பெற்றுத் தந்த 100 வயதான சுதந்திரப் போராட்ட வீராங்கனை ‘பத்மஸ்ரீ’ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், மற்றும் 23 வயது மாற்றுத்திறனாளியான, இறகுப் பந்து வீராங்கனையான துளசிமதி முருகேசனும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துளசிமதி முருகேசன், ’தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு செய்து வரும் உதவிகள் குறித்து பாராட்டிப் பேசியதோடு, தன்னுடைய வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த போராட்டங்கள் குறித்தும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
“மாற்றுத்திறனாளியான உன் பெண்ணை இப்படி விளையாட வைத்து, இன்னொரு கையையும் உடைத்துவிடப் போகிறாயா? என என் அப்பாவிடம் கேட்டார்கள். ஆனால், கடவுளே வரமாக வர நினைத்தால்தான் இப்படி பெண் குழந்தைகள் பிறப்பார்கள் என அவர்களுக்கு என் அப்பா பதிலடி கொடுத்தார்,” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
காஞ்சிபுரத்தில் மழைக்கும், வெயிலுக்கும் பயந்து வாழக்கூடிய வாழ்வாதாரத்தில் இருந்து வந்தவள் நான். என் அப்பா தினக்கூலி. ஆனால், என்னை காஸ்ட்லியான பேட்மிட்டன் விளையாட கற்றுக் கொடுத்தார். இதற்கென தனியாக அதிக கட்டணத்தில் பயிற்சி மையம் எதற்கும் செல்லவில்லை. அரசு ஸ்டேடியத்தில்தான் நான் கற்றுக் கொண்டேன்.
அப்படிக் கற்றுக் கொண்டுதான், இந்த 13 வருடங்களில் 19 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளேன். விளையாட்டில் கவனம் செலுத்துபவர்கள் நன்றாக படிக்க மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால், நான் அதையும் உடைத்து, தற்போது கால்நடை மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறேன்.
விளையாட்டு வீராங்கனையாக இந்த 13 வருடங்களாக நான் தோற்றதே இல்லையா என்று கேட்டால், நிறைய இருக்கிறது, என் வாழ்க்கையில் நிறைய தோல்விகளும், அவமானங்களும் நிறைந்திருக்கிறது.
”ஒவ்வொரு முறையும் எப்படி விழும் போதெல்லாம் எப்படி எழுகிறோம் என்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது. கனவை நோக்கி ஓடும் ஒவ்வொருவருமே சிங்கப்பெண்கள்தான். காஞ்சிபுரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த, மாற்றுத்திறனாளியான என்னாலேயே இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் நிச்சயம் உங்களாலும் முடியும்,” என ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கையைத் தோய்த்துப் பேசினார் துளசிமதி.

Image courtesy : M.K.Stalin X page
மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்
இந்த வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்குத் தேர்வானவர்களுக்கு, அதற்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன் தொடர்ச்சியாக அவர் பேசுகையில்,
“இங்கு பேசிய எல்லோருடைய பேச்சையும் கேட்டேன் என்பதை விட, நெஞ்சை உருக்குகின்ற, தன்னம்பிக்கையையும், புது நம்பிக்கையையும் கொடுக்கும் உங்களின் கதைகளை, பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியில் என்று சொல்வதைவிட நெகிழ்ச்சியில் இருந்தேன் என்றே சொல்லலாம்.”
ஒரு திட்டத்தின் உண்மையான வெற்றி என்பது, அதை மக்கள் எந்தளவுக்கு சிறப்பாக பயன்படுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. அந்தவகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அண்டை மாநிலங்களில்கூட இந்தத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்தத் திட்டத்தின் வெற்றியின் உச்சம். இமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி, கர்நாடகா எனப் பத்து மாநிலங்களில் மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக இது உயர்ந்து நிற்கிறது.

இந்த 1000 ரூபாய் என்பது வெறும் தொடக்கம் மட்டும் தான். இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 13,75,492 சகோதரிகளுக்கு மாதந்தோறும் 28,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என்பதற்காக, மக்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்பலனாக, இன்று காலை 16 லட்சத்து, 94 ஆயிரத்து 339 பேருக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் போடப்பட்டுள்ளது.
”இனிமேல், தமிழ்நாட்டில் இருக்கும் 1 கோடியே 30லட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கும் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்த நடை போட நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் களரி, சிலம்பம், நாதஸ்வரம் என பெண்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.