+

தாயின் ஐஐடி கனவை பில்லியன் டாலர் ஏஐ நிறுவனமாக்கிய தமிழர் - யார் இந்த Perplexity AI அரவிந்த் ஸ்ரீனிவாஸ்?

சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உருவாக்கிய Perplexity AI நிறுவனம், ChatGPTக்கு நல்லதொரு மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில், அதாவது, ஜூலை 2025 நிலவரப்படி $18 பில்லியன் மதிப்புள்ள ஸ்டார்ட்அப்பாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி, நடிகர் கமல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களுடன் சந்திப்பு, எலான் மஸ்க்குடன் சமூகவலைதளப் பக்கங்களில் கருத்து மோதல், குறுகிய காலத்தில் வளர்ந்த பல மில்லியன் மதிப்புள்ள ஸ்டார்ட் அப், ஏர்டெல்லுடன் புதிய ஒப்பந்தம் என கடந்த சில மாதங்களாகவே அரவிந்த் ஸ்ரீனிவாஸின் பெயர் ஊடகங்களில் அடிபட்ட வண்ணமே உள்ளது.

அவரது இத்தனை சாதனைகளுக்கும் பின்னணியில் ChatGPT-க்கே சவால் விடும், அவர் உருவாக்கிய Perplexity AI நிறுவனம் இருக்கிறதென்றால், அந்த நிறுவனம் உருவாகிய கதையின் பின்னணியில் ஒரு தாயின் கனவு அடித்தளமாக இருக்கிறது, என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், அரவிந்தின் அம்மா அன்று தன் மகனின் மீது நம்பிக்கை வைத்து கண்ட கனவைத்தான், இன்று நிஜமாக்கி தன் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகளை வசமாக்கி வருகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.

Aravind srinivas

தாயின் கனவு

1994ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். ஒவ்வொருமுறையும் ஐஐடி மெட்ராஸை பஸ்ஸில் கடந்து செல்லும் போதும், மறக்காமல், ‘நீயும் ஒருநாள் இங்கே படிப்பாய்’ என தன் கனவை விதைத்துக் கொண்டே இருந்துள்ளார் அரவிந்த்தின் அம்மா.

தன் தாயின் கனவை அப்படியே உள்வாங்கிய அரவிந்த், அவர் நினைத்தபடியே ஐஐடி மெட்ராஸில் சேர்ந்தார். அவரது GPA பற்றாக்குறை காரணமாக IIT-யில் கணினி அறிவியல் பாடத்திற்கு மாற முடியவில்லை. ஆனாலும், இயந்திர கற்றலில் தனது ஆர்வத்தை வளர்க்க அரவிந்த் மாற்று வழிகளைக் கண்டுபிடித்தார். கல்லூரி படிப்பு ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இனி AI தான் உலகின் எதிர்காலம் என்பதை அந்த சிறுவயதிலேயே உணர்ந்த அரவிந்த், தானாகவே பைதான் கற்றார். பின்னர், காகிள் (Kaggle) போட்டியில் கலந்து கொண்டு, யோசுவா பெஞ்சியோவின் (Yoshua Bengio) கீழ் இன்டர்ன்ஷிப் பெற்றார்.

தாய்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தர விரும்பியோ என்னவோ, ஐஐடியில் மின் பொறியியலில் இரட்டைப் பட்டங்களைப் பெற்ற அரவிந்த், பின்னர் யுசி பெர்க்லியில் செயற்கை நுண்ணறிவில் முனைவர் பட்டம் பெற்றார்.

Aravind srinivas

குறுகிய காலத்தில் வளர்ந்த Perplexity AI

முனைவர் பட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவிலேயே தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார் அரவிந்த். சிலகாலம், கூகிளில் ஆராய்ச்சியாளராக இருந்த ஸ்ரீனிவாஸ், பின் தனக்கென ஒரு நிறுவனத்தை உருவாக்க அங்கிருந்து ,விலகினார்.

அதன் தொடர்ச்சியாக, 2022ம் ஆண்டு டெனிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து சான் பிரான்சிஸ்கோவில் Perplexity AI ஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் அரவிந்த். அப்போது புழக்கத்தில் இருந்த தேடுபொறிகளில் இருந்து வேறுபட்டு, கேள்விகளுக்கு நேரடியாகவும், வெளிப்படையாகவும், உரையாடல் போன்ற சர்ச் எஞ்சினை உருவாக்குவது அவர்களது நோக்கமாக இருந்தது.

சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அவர்களது ஸ்டார்ட் அப், குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது. 2024ம் ஆண்டின் மத்தியில், $1 பில்லியனாக இருந்த அவர்களது நிறுவனத்தின் மதிப்பு, ஒரே வருடத்தில் $14 பில்லியனாக மாறியது. ஜூலை 2025, கணக்கின்படி, $100 மில்லியன் நிதிச் சுற்றைப் பெற்று, Perplexity AI நிறுவனம், $18 பில்லியன் மதிப்புள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

aravind srinivas


ChatGPTக்கு டஃப் கொடுக்கும் பெர்ப்ளெக்ஸிட்டி

பெர்ப்ளெக்ஸிட்டியின் வளர்ச்சியில் மற்றொரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது ஏர்டெல்லுடன் அது செய்து கொண்ட மிகப்பெரிய ஒப்பந்தம்தான். அதாவது, இந்தாண்டு மே மாதம், பெர்ப்ளெக்ஸிட்டி ஏர்டெல்லுடன் செய்து கொண்ட அந்த ஒப்பந்தத்தின்படி, 360 மில்லியன் இந்திய ஏர்டெல் பயனர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம், 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், மாதந்தோறும் சுமார் 780 மில்லியன் வினவல்களுடன் (Queries), சர்வதேச அளவில் OpenAI-யின் ChatGPT-க்கு நம்பகமான மாற்றாக மாறியுள்ளது பெர்ப்ளேக்ஸிட்டி ஏஐ.

பயனர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தங்களது ஏஐ பிரௌசரில் மேலும் பல மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது பெர்ப்ளேக்ஸிட்டி. அதன்படி, மக்கள் பிரௌஸ் செய்வது, தகவல்களைத் தேடுவது மற்றும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது உள்ளிட்ட வசதிகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.  

தக் லைப் பட வேலைகளின் போது, பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமையகத்திற்கு நேரில் சென்று, அரவிந்தைச் சந்தித்தார் நடிகர் கமல். அந்த சந்திப்பின்போது, வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து அவர்கள் பேசிக் கொண்டதாக இருவரும் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனர். ஏஐ தொழில்நுட்பத்தை சினிமாக்களில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரவிந்த்தை கமல் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அரவிந்தை சந்தித்து பேசியுள்ளார்.

Aravind srinivas

நடிகர் கமலுடன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்


இளைஞர்களுக்கு அறிவுரை

கடந்த வாரம், “The Verge’s Decoder” பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த், இன்றைய இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்க வேண்டியதன் முக்கியத்தை அதில் வலியுறுத்தியுள்ளார்.

அதில்,

“இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் அதிக நேரத்தை செலவிடுவதற்குப் பதில், ஏஐ கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுங்கள். ஏனென்றால் வருங்காலத்தில் ஏஐ பயன்படுத்தத் தெரிந்தவர்களே அதிக வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

ஏனென்றால் தற்போது ஏஐ சிறிய வேலைகளை மட்டும் செய்யவில்லை. பெரிய வேலைகளை சுலபமாக செய்து காட்டி வருகிறது. உதாரணமாக எங்கள் Perplexity AI-ன் Comet கருவி, மனிதர்கள் ஒரு வாரம் செலவு செய்து முடிக்கும் ஆட்சேர்ப்பு வேலையை ஒரே கட்டளையில் செய்து முடித்து விடும். இது போன்ற கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் பல வேலை இடங்கலை மறைந்து போகச் செய்து விடும்,” என அரவிந்த் எச்சரித்துள்ளார்.

Aravind srinivas

பிரதமர் மோடியுடன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

தெளிவான முடிவுகள்

மக்களின் கவனத்தைப் பெற்று, விரைவாக வளரும் ஸ்டார்ட் அப்களை பெரிய நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, கையகப்படுத்த முன்வருவது வழக்கம் தானே. அந்தவகையில், ஆப்பிள், மெட்டா மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் பெர்ப்ளேக்ஸிட்டியை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள பெரிதும் முயற்சித்தன. ஆனால், அப்படி தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் அரவிந்த் நிராகரித்து விட்டார்.

 

2028க்குப் பிறகு IPOவை நோக்கிச் செல்லும் கனவில் இருக்கும் அவர், இது போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைவது, தனது சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவில் தெளிவாக இருக்கிறார். ஆரம்பம் முதல் அவரது செயல்பாடுகள் தனித்து வெளிப்படுவதற்கு காரணம், அவரது இந்த தெளிவுதான்.

சென்னையில் ஆரம்பித்த அவரது பயணம், தற்போது சிலிக்கான் வேலி வரை சென்றிருப்பது, அவர் தன் தாயின் கனவை எந்தளவுக்கு மதித்துள்ளார் என்பதற்கு சாட்சியாக உள்ளது. லட்சியங்களை நோக்கி நம்பிக்கையுடன் நடை போடும் போது, அது நிச்சயம் வெற்றிகளைப் பரிசாகக் கொடுக்கும் என்பதற்கு அரவிந்த்தின் வெற்றிகளே சாட்சி.

facebook twitter