மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MOSPI) 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி விகித விவரத்தை பட்டியலாக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது,
2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்தத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டில், 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 9.69 விழுக்காடு அதிகரித்திருப்பது புதிய உச்சமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த வளர்ச்சியானது கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பதிவான மிக உயர்ந்த வளர்ச்சிப் பதிவாகும்.
MoSPI-இன் இந்தத் தரவுகள் மூலம், இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது ஆதாரப்பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் 8.21% பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் 7.82%த்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
முக்கிய பொருளாதார அளவீடுகள்:
பின்வரும் பொருளாதார அளவீடுகளின் அடிப்படையில், மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளது.
அதில் முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி,
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024-25 ஆம் ஆண்டில் ரூ. 17.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்தது.
இரண்டாவதாக வரலாற்று வளர்ச்சி. இதற்கு முன்பு அதிகபட்ச வளர்ச்சி விகிதம் 2017-18ம் ஆண்டில் 8.59% ஆக இருந்தது, அதே நேரத்தில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் 0.07% மட்டுமே. எதிர்மறை வளர்ச்சியை எதிர்கொண்ட பல மாநிலங்களைப் போலல்லாமல், குறிப்பிடத்தக்க வகையில், தொற்றுநோய்களின் போது நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்த சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்,
மூன்றாவதாக, பெயரளவு வளர்ச்சி விகிதம். பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்தல் இல்லாமல் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த சந்தை மதிப்பை பிரதிபலிக்கும் 14.02% பெயரளவு வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
வளர்ச்சி கணிப்புகளும், உண்மை நிலவரமும்
பொருளாதார ஆய்வறிக்கை கணிப்புப்படி, மாநிலத்திற்கு 8%-க்கும் அதிகமான வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் (MSE) மதிப்பீடுபடி, 9.3% வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உண்மையில், இந்த இரண்டு கணிப்புகளையும் பொய்யாக்கி, எதிர்பார்ப்புகளைவிட அதிக வளர்ச்சி விகிதத்தைப் பெற்று, புதிய வரலாற்றைப் படைத்துள்ளது தமிழ்நாடு. இது தமிழ்நாட்டின் வலுவான பொருளாதார ஆரோக்கியத்தையே காட்டுவதாக உள்ளது.
துறைசார் பங்களிப்புகள்:
மூன்றாம் நிலைத் துறை (சேவைகள்) :
தொழில்முறை சேவைகள்: 13.6% வளர்ச்சி.
தகவல் தொடர்பு: 13% வளர்ச்சி.
வர்த்தகம், பழுதுபார்ப்பு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்: பொருளாதாரத்திற்கு 11.7% பங்களிப்பு.
இரண்டாம் நிலை துறை (உற்பத்தி மற்றும் கட்டுமானம்):
உற்பத்தி: 8% வளர்ச்சி.
கட்டுமானம்: 10.6% வளர்ச்சி.
ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டும்
2025-26 ஆம் ஆண்டில் அனைத்துத் துறைகளும் 0.5 சதவீத புள்ளிகளுடன் மேலும் வளர்ச்சியடைந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சி சுமார் 10.7% ஐ எட்டக்கூடும் என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் இதே 9.7% வளர்ச்சியை தமிழ்நாடு தக்க வைத்துக் கொண்டால், 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் எனவும், எம்எஸ்இயின் முன்னாள் இயக்குநர் டாக்டர் சண்முகம் கணித்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில் குஜராத், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வளர்ச்சி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
முதலமைச்சர் பெருமை
2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு 9.69% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்திருப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!“
அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்! எனப் பெருமையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.