‘ஆர்பிட் கனவு’ - இந்தியாவின் மிகப்பெரிய செயற்கைகோள் ஆலையை உருவாக்கும் ‘துருவா ஸ்பேஸ்’

12:46 PM Sep 23, 2025 | YS TEAM TAMIL

சஞ்சய் நேகண்டி, 19 வது வயதில் செயற்கைகோள்களை உருவாக்கத்துவங்கிய போது, இந்தியாவில் தனியார் விண்வெளித்துறை, என ஒன்று உருவாகியிருக்கவில்லை.

“கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறோம், ஆனால் ஒருவர் கூட செயற்கைகோள் நிறுவனத்தை உருவாக்கவில்லை. இதுவே அதிகம் பயணிக்காத பாதையை நான் தேர்வு செய்ய ஊக்கமாக அமைந்து, இந்தியாவின் விண்வெளித்துறையில் தனியார் பரப்பின் துவக்கத்தில் முன்னிலை பெற வைத்தது,” என்கிறார் சஞ்சய்.

இன்று ஐதராபாத்தைச் சேர்ந்த 'துருவா ஸ்பேஸ்' நிறுவனத்தின் நிறுவனர், சி.இ.ஓ. என்ற முறையில் அவர் இந்தியாவில் செயற்கைகோள்களை பெரிய அளவில் தயாரிப்பதற்கான மிகப்பெரிய வசதியை துவக்க தயாராகி வருகிறார். 2,80,000 சதுர அடி பரப்பிலான இந்த வசதி, துருவா நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை மட்டும் அல்லாமல், வளர்ந்து வரும் இந்திய விண்வெளி சூழலின் முக்கிய அங்கத்தினராக இருக்க வேண்டும் என்பதையும் மையமாக கொண்டுள்ளது.

“நாட்டில் இல்லாத உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என உணர்ந்தோம்,” என்று தெலுங்கானாவில் உருவாகி வரும் செயற்கைகோள் ஆலை வசதியை குறிப்பிட்டு எதிர்காலத்தை நினைத்து உற்சாகம் கொள்கிறோம், என்கிறார் சஞ்சய் நேகண்டி.

செயற்கைகோள்களை அசம்பிள் செய்து, ஒருங்கிணைத்து, சோதிக்கும் வசதி கொண்ட இந்த ஆலை, 500 கிலோ எடை வரை கொண்ட செயற்கைகோள்களை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய செயற்கைகோள் தயாரிப்பு வசதிகளில் ஒன்றாக விளங்கும்.

துருவா செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும் 500க்கும் மேலான வெண்டர்களுடன் இணைந்து செயல்படுகிரது. இந்த ஆலை, இவர்களின் பணிகளுக்கும் துணை நின்று மேம்படுத்தும் தன்மை கொண்டது.

தனது இலட்சியத்தை அடைய துருவா, நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிதி ஆதாரங்களை நாடி வருகிறது. அரசு திட்டங்கள் மற்றும் விண்வெளித்துறையில் கவனம் செலுத்தும் வென்சர் கேபிடல் நிறுவனங்கள் என நிதி ஆதாரம் பிரகாசமாக இருக்கிறது என்கிறார்.

விரிவாக்கம்

2012ல் சஞ்சய் நேகண்டி, சைதன்யா டோரா சூரப்பா ரெட்டி, அபய் எக்கூர் மற்றும் கிருஷ்ணா தேஜா பெனாம்குரு ஆகிய மூவரால் துவக்கப்பட்ட ’துருவா ஸ்பேஸ்’, விண்வெளி, ஏவுதல் மற்றும் தரை செயல்பாடுகளில் சேவை அளிக்கும் விண்வெளி பொறியியல் நிறுவனமாக விளங்குகிறது. சர்வதேச அளசில் சிவிலியன் மற்றும் பாதுகாப்பு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது.

துவக்கத்தில் நிறுவனம், சிறிய செயற்கைகோள்கள், கியூப்சாட் பஸ்கள், வட்டப்பாதை செலுத்துபவர்கள் ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்தியது. அதன் பிறகு, மாடுலர் செயற்கைகோள் மேடைகள் (P-DoT, P-30, P-Nu). டிஎஸ்.ஓ.டி குடும்ப ஆர்பிடல் சேவைகள், டி.எஸ்.ஓ.எல் தகவல் தொடர்பு அமைப்புகள், ஏவுதல் மற்றும் மிஷன் ஒருங்கிணைப்பு, தரை சேவைகள், வர்த்தக இமேஜரி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த விரிவாக்கம், கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. பிரான்சின் கைனீஸ் மற்றும் காமட் உடனான கூட்டு, சாட்சுயருடன் கூட்டு மற்றும் எதிர்வரும் லீப்-1 மிஷனுக்காக ஆஸ்திரேலியாவின் அகுலா டெக் மற்றும் எஸ்பர் சாடிலைட்ஸ் ஆகியவற்றுடன் பேலோட் பணி ஆகிய சர்வதேச கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இவற்றுடன், பல்வேறு பிஎஸ்.எல்வி திட்டங்களில் இஸ்ரோவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. ஏ சுற்று நிதி ரூ.123 கோடி உள்ளிட்ட நிறுவன முதலீடுகள் மற்றும் விண்வெளி திட்டங்களை ஊக்குவிக்கும் அரசின் நிதி ஆதரவு என நிறுவனம் தனது வளர்ச்சிக்கான நிதியை திரட்டுகிறது.

புதிய யுகம்

விண்கள் உருவாக்கம், ஏவுதல், மற்றும் தரை சேவைகள், என செயற்கைகோள் சார்ந்த மூன்று மைய சேவைகளையும், ஒருங்கிணைந்த வகையில் வழங்குவதும் நிறுவனத்தின் தனித்தன்மையாக அமைகிறது.

“காலம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மூன்று பிரிவுகளையும் ஒருங்கிணைப்பதில் நல்ல வாய்ப்பு இருப்பதை கண்டு கொண்டோம்,” என்கிறார் சஞ்சய் நேகண்டி.

செயற்கைகோள் திட்டங்கள் ஒரு சில டஜன்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பெருகி வரும் நிலையில் துருவா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மாதிரி, கட்டுப்பாடு, வேகமான செயல்பாடு மற்றும் செயல்திறனை அளிக்கிறது. இது அழகிய செங்குத்தான ஒருங்கிணைப்பு, என்கிறார் நேகண்டி.

நிறுவனம் இத்துடன் நின்றுவிடவில்லை. அதன் புதிய ஆலையில் ஒருங்கிணைந்த தரை வலைப்பின்னலை அமைத்து வருகிறது. பல வகையான செயற்கைகோள்களுக்கு அதிகரித்து வரும் சேவைகளை கருத்தில் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.


எதிர்கால திட்டம்

துருவாவின் புதுமையாக்கங்களில் ஒன்றாக அடுத்த தலைமுறை சூரிய மின் உற்பத்தி மாட்யூல் சோலிஸ்+ அமைகிறது. பாரம்பரிய சூரிய பேனல்கள் போல் அல்லாமல், இவை அதிக செயல்திறன் மற்றும் சுற்றக்கூடிய அரேக்கள் கொண்டுள்ளது, அதிக திறன் தேவைப்படும் மிஷன்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.

சூரிய பேனல்கள் பல வித அளவுகளில் இருப்பதால், ஏவுதல் எடையை குறைக்கும், வகையில் குறைந்த இடப்பரப்பில் அதிக ஆற்றலை அளிக்க முடிகிறது.

“விண்வெளியில் கால்பந்து மைதானம் அளவிலான சூரிய பேனலை கற்பனை செய்து பாருங்கள். அதை திட பேனலாக செலுத்துவது சாத்தியமில்லை. இதனால் தான் சுற்றி வைக்கக் கூடிய பேனல்கள் ஏற்றதாக அமைகிறது,” என்கிறார்.

இதன் மூலம் வட்டப்பாதையில் மேலும் அதிக ஆற்றலை அளிக்க முடிகிறது. பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற செயற்கைகோள்களில் இது உதவுகிறது.

விரிவாக்கம்

துருவா சிறிய செயற்கைகோள்களை கடந்து, 500 கிலோ பிரிவில் சேவை அளிக்க விரும்புகிறது. மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பும் பிரிவில் எந்த வாய்ப்பையும் இது வரை கொண்டிருக்கவில்லை என்றாலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது தனக்கு மிகவும் நெருக்கமானது, என்கிறார் நேகண்டி. இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்தில் முக்கிய பங்காற்ற முடியும், என நம்புவதாகவும் கூறுகிறார்.

நிறுவனம் சர்வதேச அளவிலும் வளர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியா, அமீரகம் மற்றும் ஐரோப்பாவில் ஏற்றுமதி வாய்ப்புகளுடன், பிரெஞ்சு நிறுவனம் சோடெர்ன் கூட்டு உள்ளிட்ட வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் பேலோடு 2026ல் துருவா உருவாக்கிய செயற்கைகோளுடன் செல்ல உள்ளது.

துருவா மிகவும் கவனமாக திட்டங்களை வகுத்தாலும், துணிச்சலான ஐடியாக்களையும் கொண்டுள்ளது. ஒரு சில முக்கிய திட்டங்களை கொண்டிருந்தாலும் அதன் விவரங்களை இப்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளது.

Dhruva Space LEAP-1. | Image: Dhruva Space

மேலும், செயற்கைகோள் சேவைகள், தரை சேவைகளை மேம்படுத்தக்கூடிய ஏஐ, குவாண்டம் நுட்பம், மேம்பட்ட உற்பத்தி ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. விண்வெளித்துறை, பல்வேறு தொழில்நுட்பங்கள் கலந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அளிப்பதாக நேகண்டி கருதுகிறார். செயற்கைகோள் செயல்திறன் மேம்பாட்டிற்கான புதிய ஏஐ மாதிரியை உருவாக்கி செயல்படுத்த முடியும் என்கிறார்.

இந்த தொழில்நுட்பங்கள் பொதுவாக தனித்தனியே பார்க்கப்பட்டாலும் இவற்றில் சில பகுதிகளை எடுத்து, விண்வெளி பரப்பில் பயன்படுத்தி சேவைகளை மேம்படுத்தலாம் அல்லது புதிய தீர்வுகளை உருவாக்கலாம், என்கிறார்.

எதிர்காலத்தில், இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளி பரப்பில், முன்னணி நிறுவனங்களில் மற்றும் செயற்கைகோள் சேவையாளர்களில் ஒன்றாக விளங்க வேண்டும் என்று துருவா விரும்புகிறது. மேலும், இந்திய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான மூலத்தயாரிப்பாளராகவும் விளங்க விரும்புகிறது.

“விண்வெளியை நாங்கள் எப்படி ஆராய விரும்புகிறோம் என்பதை பொறுத்தது. அதற்கான எந்த தேவைக்கும் ஏற்ற தீர்வுகளை வழங்கும் தொழில்நுட்பங்களை ‘துருவா’ கொண்டிருப்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது,” என்கிறார்.

துருவா ஸ்பேஸ் நிறுவனத்திற்கு வானமே எல்லை அல்ல அது தான் துவக்கம்.

ஆங்கிலத்தில்: சியா பகத், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan