இந்த ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்தியாவை சேர்ந்த 'எஜுகேட் கேர்ள்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படும் முதல் இந்திய அமைப்பு எஜுகேட் கேர்ள்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதனை ஆசியாவின் நோபல் பரிசு எனலாம்.
கடந்த 2007-ம் ஆண்டு சமூகத் தொண்டர் ஷபீனா ஹுசைன், எஜுகேட் கேர்ள்ஸ் என்ற பெண்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் சுமார் பதிமூவாணாயிரம் தன்னார்வலர்கள் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். எஜுகேட் கேர்ள்ஸ் தொண்டு அமைப்பு சுமார் 67 லட்சத்திற்கும் கூடுதலான மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறது.
மத்திய அரசின் நிதியுதவியை பெற்று பெண் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
பெண்களின் கல்வி மூலம் ஆதிக்கக் கலாச்சாரப் போக்கினை எதிர்த்து, அவர்களை எழுச்சியுடன், திறனுடன், நம்பிக்கையுடன் வாழ வைக்கும் முயற்சிக்காக, ’Educate Girls’ என்ற தொண்டு நிறுவனம் ஒரு பெருமைமிகு விருதினைப் பெற்றுள்ளது.
இந்த அமைப்பின் நிறுவுநர் சஃபீனா ஹுசைன் தெரிவித்ததாவது,
"இந்த விருது, இந்தியாவின் மக்களால் முன்னெடுக்கப்படும் பெண்கள் கல்விக்கான இயக்கத்தை உலகளவில் முன்னிறுத்துகிறது. ஒரு சிறுமியின் கல்வி பயணமாக ஆரம்பித்த பயணம், இன்று முழு சமூகங்களை மாற்றியமைக்கும் சக்தியாக மாறியுள்ளது," என்றார்.
இந்த அமைப்பின் முக்கிய பங்களிப்பாளர்களாகிய ’டீம் பாலிகா’ தன்னார்வலர்கள், சமூக மாற்றத் தலைவர்கள், பங்களிப்பு வழங்கும் நிறுவங்கள், அரசு மற்றும் பொதுமக்கள் ஆகியோரது பணி இவ்விருதின் மூலம் பாராட்டப்பட்டுள்ளது.
"இந்நிகழ்வு, பெண்கள் கல்வியின் மூலம் குடும்பங்கள், தலைமுறைகள் மற்றும் நாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியங்களை வெளிக்கொணருகிறது. எங்கள் அடுத்த இலக்கு – பத்து ஆண்டுகளில் 1 கோடி மாணவிகளை அடைவது," என உரக்கக் கூறுகிறார் சஃபீனா ஹுசைன்.
Educate Girls அமைப்பின் தலைமை செயல் அதிகாரி காயத்ரி நாயர் லோபோ கூறும்போது,
"இந்த உயர் விருது, சமூக மற்றும் அமைப்புசார் தடைகளை வெல்ல, அரசு, மனிதநேயவாத நன்கொடை அமைப்புகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து செயல்படும் போது ஏற்படும் மாற்றங்களை வெளிக்காட்டுகிறது. கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது," எனக் கூறினார்.
இந்த அமைப்பும், இப்பெருமைமிகு விருதும் – கடந்த காலத்தில் சத்யஜித் ரே, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கிரண் பேடி, விநோபா பாவே மற்றும் உலக நாயகர்களான தலைலாமா, மதர் தெரசா போன்ற வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களின் வரிசையில் இப்போது இடம் பெற்றுள்ளது.
"ஒரு பெண் கல்வி பெறுகிறாள் என்றால், அவள் பலரையும் கல்விப்பாதையில் அழைத்து செல்கிறாள்!" – இது தான் Educate Girls அமைப்பின் உயிர்மொழி.
2025ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது பெற்ற மற்றவர்கள்: மூன்றாம் உலக நாடான மாலத்தீவுகளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து செயல்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர் ஷாஹீனா அலி, கடல் சூழலியல் பாதுகாப்பிலும், தனிமை நிலையில் உள்ள தீவுகளில் இயற்கை வளங்களை காக்கும் பணியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதற்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் வசிக்கும் ஏழைகள், வீதிகளில் வசிக்கின்ற வீடற்றவர்கள் மற்றும் நலிவுற்றோரின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணிகளில் ஆழமாக ஈடுபட்டுள்ள அருட்தந்தை பிளவியானோ வில்லனுவா, இவர்களின் தன்னலமில்லா மனிதாபிமான பணிக்காக விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது பெற்றோர், இந்த ஆண்டின் 67ஆவது ரமோன் மகசேசே விருது வழங்கும் விழாவில் நவம்பர் 7, 2025 அன்று மனிலா மெட்ரோபாலிடன் தியேட்டரில் விருதுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.