
தற்போது மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது போர் தொடுத்திருக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், லே மற்றும் லடாக் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது. ஈரான் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் ஆதரவும் வழங்கும் வகையிலான நிகழ்வு ஒன்றில் ஒரு முட்டை ரூ.25,000-த்திற்கு ஏலம் போனது.
ஈரானில் நடைபெற்று வரும் மோதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, லடாக் மாநிலத்தின் லே மாவட்டத்தில் ஒரு முட்டை ரூ.25,000க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் ஒற்றுமையின் வலுவான சின்னமாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்வு ஒரு உள்ளூர் நன்கொடை இயக்கத்தின் போது நடைபெற்றது. இதில் மக்கள் பணம், நகைகள், விலைமதிப்புள்ள உலோகங்கள் மட்டுமல்லாமல் அன்றாட பயன்பாட்டு பொருட்களையும் தாராளமாக வழங்கினர்.
ஒரு முட்டை ரூ.25,000-த்திற்கு ஏலத்தில் எடுத்த முடிவை விளக்கிய உள்ளூர் நபர் ஷபீர் ஹுசைன்,
“ஒரு முட்டையின் விலை ரூ.10 என்பது அனைவருக்கும் தெரியும். நான் ரூ.25,000 கொடுத்தது அதற்காக அல்ல. ஈரானில் குழந்தைகள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு செய்தியாக இது அமையும். அவர்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளோம். இந்த சமூகத்திற்காகவே நாம் வாழ்கிறோம். எங்கள் தலைவர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும், ஆனால் அவர் இதுவரை எந்த வித கோரிக்கையையும் விடுக்கவில்லை,” என்றார்.
லடாக் முழுவதும் நடைபெறும் இந்த நன்கொடை இயக்கங்களில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். சிலர் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை வழங்கியதுடன், ஒரு சிறுமி தனது சேமிப்பு உண்டியலை உடைத்து நன்கொடை அளித்தது மனதை நெகிழவைத்துள்ளது. மேலும், சில குழந்தைகள் தங்களது சைக்கிள்களையும் வழங்கினர்.
இதுபோன்ற காட்சிகள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள சந்தர்கோட் பகுதியில் கூட காணப்பட்டன. அங்கு ஷியா சமூதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இமாம்பாராவில் கூடி நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கினர்.
அங்கு மக்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் தங்கம், வெள்ளி நகைகள் வரை வழங்கினர். பெண்கள் தங்களது வளையல்கள் மற்றும் காதணிகளையும் கழற்றி நன்கொடையாக அளித்தனர். மேலும், ஒருவர் தனது ஆட்டையும் வழங்கியுள்ளார்.
புட்காம் பகுதிகளிலும் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் வழங்கி உதவினர். இந்த மனிதநேய செயற்பாடுகளை பாராட்டி, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் மார்ச் 22 அன்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய மக்களின் “அன்பும்”, “மனிதநேயமும்” குறித்து நன்றியைத் தெரிவித்துள்ளது.