இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், ‘Fluidity List’ எனப்படும் ஒரு இரகசிய பட்டியலை வைத்திருப்பதாகவும், அந்த பட்டியலில் பெயர் உள்ள ஊழியர்கள் எச்சரிக்கையின்றி பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் ஒரு ஊழியர் ரெட்டிட் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருவதோடு, நிறுவனம் தனது தார்மீக நெறிகளை மீறுகிறது என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கட்டாய ராஜினாமா?
சென்னை சிறுசேரி கிளையில் பணியாற்றிய ஒருவரை நிறுவனத்தின் "Fluidity List" பட்டியலில் உள்ளார் எனக் கூறி, திடீரென சென்று அவரது லேப்டாப் மற்றும் அடையாள அட்டையை பெற்று, எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்ததாக ஒரு சமூக ஊடக பயனர் தெரிவித்துள்ளார்.
அவரிடம் உடனே ராஜினாமா கடிதம் எழுதுமாறு வற்புறுத்தியதாகவும், இல்லையெனில், நிறுவனம் நேரடியாக தற்காலிக ரீதியில் பணிநீக்கம் செய்யும் என எச்சரித்ததாகவும் தகவல்கள் எழுந்துள்ளன.
"Fluidity List" என்பது நிறுவனத்தால் பாதுகாப்பாக வைக்கப்படும் ஒரு பட்டியல் என்றும், அந்த பட்டியலில் உள்ளவர்கள் ‘billable days’ குறைவாக இருக்கும்போது குறிவைக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆண்டு முழுவதும் 225 பில் செய்யக்கூடிய நாட்களை அடையாத மற்றும் 35 நாட்களுக்கு மேல் ‘பென்ச்’ல் (bench) இருக்கின்ற ஊழியர்களுக்கு, பணி நீக்கம் அல்லது ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
“முதலில் ஒரு HR நபரை அனுப்பி, நேரில் சந்திக்க சொல்கிறார்கள். சந்திப்பின் போது ‘ராஜினாமா எழுதுங்கள், இல்லையெனில் பணிநீக்கம்’ என கூறுகிறார்கள். இதை ஏற்பவர்களுக்கு 3 மாத சம்பளம் அளிக்கிறார்கள்; மறுப்பவர்கள் நேரடி பணி நீக்கம்,” என ரெட்டிட் இணையதளத்தில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர், இது மிகவும் நியாயமற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய நியமனங்கள் ரத்து
நியமன உத்தரவு பெற்ற புது ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். “பணியில் சேர வேண்டிய தேதி நாளை என்ற நிலையில் கூட, கடைசி நிமிடத்தில் பணி வாய்ப்பு ரத்து செய்யப்படுகிறது,” என பதிவுகள் தெரிவிக்கின்றன.
TCS சமீபத்தில் உலகளவில் தனது ஊழியர்களில் 2% -ஐ குறைக்கும் திட்டத்தை அறிவித்தது. CEO கி.கீர்த்திவாசன், இது செயற்கை நுண்ணறிவால் (AI) ஏற்படும் மாற்றம் அல்ல என்றும், திறன்களுக்குள் ஏற்படும் இடைவெளி மற்றும் தொழில்துறை தேவைகள் மாறுவதால் ஏற்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
தொழிற்சங்கம் கண்டனம்
அனைத்திந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் (AIITEU) பொதுச்செயலாளர் சௌபிக் பட்சாரியா,
“500 பேர் ஜூன் - ஜூலை 2025 காலக்கட்டத்தில் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பலரும் இன்னும் நியமிக்கப்படவில்லை,” என கூறி தாமதமான நியமனங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
சிறந்த எதிர்காலத்திற்கான முன்னேற்பாடுகளாக TCS விளக்குகிறது. ஆனால், ஊழியர்களின் உரிமைகள், தொழில்சட்டங்களின் மீறல் மற்றும் மனித நேயத்துடன் இல்லாத செயற்பாடுகள் மீது பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.
தொகுப்பு: முத்துகுமார்
4 மாதம் சம்பள பாக்கி; நடைபாதையில் படுத்துறங்கும் டிசிஎஸ் ஊழியரின் வைரல் பதிவால் விவாதம்!