
இணையம் உலகையே கைக்குள் முடக்கி விட்டது என்றால், ஏஐ தொழில்நுட்பம் அதை மேலும் சுருக்கி விட்டது என்றே கூறலாம். மக்கள் எதைப் பற்றிக் கேட்டாலும், அதை பாராபட்சமின்றி, தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறும் அளவிற்கு ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அது மென்மேலும் மெருகேறி வருவது, ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டாலும், அதனால் எதிர்காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் சந்திக்கும் பிரச்சினைகளும் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது.
இப்படியே போனால் மக்கள் சுயமாக சிந்திக்காமல், ஏஐ சார்ந்தே வாழும் மனித இயந்திரங்களாகவே மாறி விடுவார்களோ என்ற பயமும் இருக்கத்தான் செய்கிறது. மனிதர்கள் செய்யும் மற்றும் செய்ய முடியாத பல வேலைகளைக்கூட செய்யக்கூடிய திறமை ஏஐக்கு உள்ளது. எனவே, தங்கள் வேலையை தக்க வைக்க பலர் போராடி வரும் நிலையில், அந்த ஏஐ-யை வைத்து, மோசடி செய்து பலர் புதிய வேலைகளைப் பெற்று வருகின்றனர் என்பதும் அதிர்ச்சிகரமான உண்மை.
ஆன்லைன் நேர்முகத் தேர்வுகளில் பலர் ஏஐ உதவியுடன் எளிதாக தேர்வாகி விடுவதால், உண்மையான திறமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறி போகிறது. அதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையையும் கெட்டுப் போகச் செய்து விடுகிறது. எனவே, அதனைத் தடுக்கும் வகையில், இனி ஆன்லைன் வாயிலாக இல்லாமல் சில முக்கிய வேலைகளுக்கு நேரடியாக மட்டுமே தேர்வு நடத்துவது என்ற புதிய முடிவை எடுத்துள்ளன கூகுள், அமேசான் மற்றும் சிஸ்கோ போன்ற சில முக்கிய நிறுவனங்கள். இதனை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை உறுதி படுத்தியுள்ளார்.

ஏஐ மூலம் ஏமாற்றும் விண்ணப்பதாரர்கள்
விர்சுவல் இண்டர்வியூஸ் என அழைக்கப்படும் மெய்நிகர் நேர்காணல்களில், விண்ணப்பதாரர்களுக்கு ரியல் டைம் கோடிங் எனப்படும் ஒரு சோதனை நடத்தப்படுவதுண்டு. அந்த சவால்களுக்கு உடனடியாக பதிலளிக்க, சிலர் கேமராவிற்கு வெளியே சில ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உண்மையான திறமைசாலிகள் யார் என்பது மோசடி செய்பவர்கள் யார் என்பதைக் கண்டறிவதிலும் நிறுவனங்கள் பெரும் சவாலைச் சந்திக்கின்றன.
இந்த சவாலுக்கு தீர்வாகத்தான், முன்பு நடைமுறையில் இருந்த நேரடி நேர்காணல் முறையை மீண்டும் கையில் எடுத்துள்ளது கூகுள். அதன்படி, அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கும் நேரில் நேர்காணல் சுற்று உள்ளிட்ட சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில்,
“ஏஐ-இன் வருகையுடன், வலுவான கணினி அறிவியல் அடிப்படைகளைக் கொண்டவர்களையும், வேலையைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர்களையும் நாங்கள் இன்னும் பணியமர்த்தி வருகிறோம் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். நிச்சயம் வேலைக்கான பல சுற்று இண்டர்வியூக்களில் ஒரு சுற்றிலாவது நேரடியாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்களை நேர்காணல் செய்யும் முறையை அறிமுகப்படுத்துவோம்," எனத் தெரிவித்துள்ளார்.

இது கூகிள் பிரச்சினை மட்டுமல்ல...
ஏஐ மூலம் மோசடி செய்து சிலர் வேலைக்கு சேரும் ஏமாற்றுவேலை, கூகுளில் மட்டுமில்லை. 50% மேலான விண்ணப்பதாரர்கள், சில விர்சுவல் டெக்னிகல் இண்டர்வியூக்களில், தங்களை இண்டர்வியூ செய்யும் நிறுவனங்களை ஏமாற்றுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதனால் நேர்காணல் செய்பவர்கள் வேட்பாளர்களை விரிவாக சோதித்து, அவர்கள் தங்களது வேலைக்கு தேவையான அறிவைப் பெற்றிருக்கிறார்களா என்ற புரிதலை சரிபார்க்கிறார்கள். இந்த புதிய நேரடி நேர்காணல் முறையை பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தற்போது கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமேசான், ஆந்த்ரோபிக், சிஸ்கோ மற்றும் மெக்கின்சி போன்ற நிறுவனங்கள் தற்போது இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் ஒருபடி மேலே போய், ஏஐ சாட்பாட்ட் Claude உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம், அதன் விண்ணப்பச் செயல்பாட்டின் போதே ஏஐ பயன்பாட்டை விண்ணப்பத்தாரர்கள் பயன்படுத்தக் கூடாது, என வெளிப்படையாகத் தடை செய்துள்ளது.
அமேசானும் தங்களது விண்ணப்பதாரர்களிடம், ‘அங்கீகரிக்கப்படாத ஏஐ கருவிகளைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை வேட்பாளர்கள் முறையாக ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது. இதேபோல், சிஸ்கோ மற்றும் மெக்கின்சி போன்ற நிறுவனங்கள், நேருக்கு நேர் சந்திப்புகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன. ஆலோசனை நிறுவனமான டெலாய்ட்டும், ஏற்கனவே அதன் ஐரோப்பிய பட்டதாரி திட்டத்திற்கான நேர்காணல்களை நேரில் மட்டுமே நடத்துவது என்ற நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்து விட்டது.

கொரோனாவால் வந்த மாற்றம்
பல முன்னணி நிறுவனங்களின் இந்த அதிரடி மாற்றம், உண்மையான திறமைசாலிக்கு மகிழ்ச்சி தரும் விசயமாக பார்க்கப்பட்டாலும், ஏஐ-ஆல் நாம் சந்திக்கும் எதிர்மறை சவால்களையும் சுட்டிக் காட்டுவதாகவே உள்ளது.
கொரோனா காலகட்டத்தில்தான் இந்த விர்சுவல் இண்டர்வியூ என்ற முறை பிரபலமானது. இந்த விர்சுவல் இண்டர்வியூக்கள் மூலம் பயணச் செலவுகள் மற்றும் நேரம் மிச்சப்படுத்துதல், தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பல நன்மையான விசயங்கள் இருந்தாலும், திறமையானவர்களைத் தேடும் முயற்சியில் அவை பெரும்பாலும் தோல்வியையே தந்து விடுகின்றன.
அப்போதைக்கு இது நல்ல முயற்சியாக பார்க்கப்பட்டாலும், தற்போது ஏஐ மூலம் நடக்கும் ஏமாற்று வேலைகள் உண்மையான திறமையாளர்களையும், வேலைக்கு ஆள் தேடும் நிறுவனங்களையும் அதிருப்தி அடைய வைத்துள்ளன. அதனால்தான் கூகுள், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களின் இந்த நேரடி நேர்காணல் முயற்சிக்கு சமூகவலைதளப் பக்கங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.