
ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் ’எமர்ஜண்டின்’ (Emergent) வருவாய் தொடர்பாக நடைபெற்று வரும் பொது விவாதத்தில் தானும் பங்கேற்று, தனியார் நிறுவனத்தின் வருவாயை வெளியில் இருந்து தீர்மானிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என கூறியுள்ளார். அவரது 'டுகதர் ஃபண்ட்' (Together fund); எமர்ஜண்ட் நிறுவனத்தின் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஒரு தனியார் நிறுவனம் தனது நிதி விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர வேறு யாரும் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அனைத்து விவரங்களும் தெரியாத வெளி நபர்களை பொருத்தவரை, நிறுவனர்கள் தங்கள் வர்த்தகம் பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர், அவர்களே அதை செயல்படுத்தட்டும் என இருப்பதே சரியானது,” என கூறியுள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் எமர்ஜண்ட் (Emergent) தொடர்பாக வாரக்கணக்கில் நடந்து வரும் விவாதத்தின் விளைவாக இவரது கருத்து அமைந்துள்ளது.
முகுந்த் ஜா மற்றும் மாதவ் ஜா துவக்கிய இந்நிறுவனம், ஏஐ மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் கொண்டு மென்பொருளை உருவாக்க உதவுவதாகக் கூறுகிறது. நிறுவனம் உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து, கோஸ்லா வென்சர்ஸ், புரோசஸ் மற்றும் லைட்ஸ்பீடு உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீட்டை பெற்றுள்ளது.
எட்டு மாதங்களில் 100 மில்லியன் டாலர் ஆண்டு வருவாயை (ARR) ஈட்டியதாக எமர்ஜண்ட் அறிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஆர்.ஆர் என்பது ஸ்டார்ட் அப் உலகில் சந்தா மூலமான ஆண்டு வருவாயை கணிக்கும் வழக்கமான அளவீடாக அமைகிறது. இருப்பினும், நவீன ஏஐ நிறுவனங்களில், சந்தா என்பது, பயன்பாடு கட்டணம், செயலாக்க கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கலாம் என்பதால் மிகவும் சிக்கலானது.
நிறுவன சி.இ.ஓ. முகுந்த ஜா, பிப்ரவரியில் இந்த மைல்கல் விவரத்தை அறிவித்து, நிறுவனம் வெகுவேகமாக வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
“எமர்ஜண்ட் இப்போது 100 மில்லியன் டாலர் ஏ.ஆர்.ஆர் கொண்டுள்ளது. மிக வேகமாக இதை அடைந்துள்ளோம். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயன்பாடுகளுக்கான உண்மையான பிரச்சனைக்கான தீர்வுகளை உண்மையான மனிதர்கள் உருவாக்கி வருகின்றனர்,” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து, அறிமுகமான ஏழு மாதங்களில் 50 மில்லியன் டாலர் ஏ.ஆர்.ஆர் எட்டியது. மேலும், பல நாடுகளில் பயனாளிகளை பெற்றுள்ளது. கோடிங் எழுதாமல் செயலிகளை உருவாக்குவதற்கான மேடையை அளிக்கிறது. புரோகிராமர்கள் அல்லாதவர்கள் மென்பொருள்களை வேகமாக உருவாக்க வழி செய்யும் ஏஐ கருவிகளின் எழுச்சியுடன் இந்த வளர்ச்சி பொருந்துவதாக சில தொழில் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த தகவல் வல்லுனர்கள் சிலரது ஆய்வுக்கு உள்ளானது. நிறுவனத்தின் ஏ.ஆர்.ஆர் வழக்கமான சாஸ் முறையில் கணக்கிடப்பட்டதா அல்லது ஆண்டு செயல் விகித அடிப்படையில் அமைந்ததா, என கேள்வி எழுப்பினர். ஆண்டு செயல் விகிதம் என்பது, ஒரு மாத வருவாய் அடிப்படையில் முழு ஆண்டுக்காக கணிப்பதாகும். இது வருவாய் வேகமாக வளர்வதாக காண்பிக்கும்.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், முகுந்த் ஜா, ஒரு மாதத்தில் (மார்ச்), நிறுவனம் 8.3 மில்லியன் டாலர் ரொக்க வருவாய் பெற்றதாகவும் இது ஆண்டு அடிப்படையில் 100 மில்லியன் டாலருக்கு சமம், என மணிகண்ட்ரோல் இணையதளத்திடம் கூறியிருந்தார்.
முதலீட்டாளர் வினோத் கோஸ்லா நிறுவன விளக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஏஐ வணிகத்தில் வருவாய் அளவீடுகள் மாறுகின்றன, என கூறியிருந்தார். இன்று பல விதங்களில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது என்றும் கூறினார். ரொக்க வரத்து தெளிவானது என்றும் கூறியிருந்தார்.
ஏஆர்.ஆர் மற்றும் ஆண்டு அடிப்படையிலான செயல் விகிதம் ஆகியவை இடையிலான வேறுபாடு இந்த விவாதத்தின் மையமாக அமைகிறது. வழக்கமான சாஸ் நிறுவனங்கள் ஒப்பந்த சந்தா அடிப்படையில் வருவாயை தெரிவிக்கும். இப்போது ஏஐ நிறுவனங்கள் கலவையான விலை அமைப்பை கொண்டுள்ளது, வருவாயை வேறுபாடு கொண்டதாக மாற்றி, நேரடி அளவீட்டை சிக்கலாக்குகிறது.
மாத்ருபூதம் தெரிவித்துள்ள கருத்து, ஸ்டார்ட் அப் அளவீடுகள் பொதுவெளியில் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிலர் கருதுவதை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், ஏஐ போட்டி யுகத்தில் வருவாய் தகவல் தீவிர ஆய்வுக்கு உள்ளாகலாம் என்பதை உணர்த்துகிறது.
எமர்ஜண்ட் நிறுவனம் தொடர்பான விவாதம் ஸ்டார்ட் அப் வருவாய் எண்ணிக்கை தொடர்புடையது மட்டும் அல்ல. புதிய ஏஐ மென்பொருள் துறையில் வருவாய் வரையறை மாறி வருவதையும் உணர்த்துகிறது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan