
முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் கூகுள் தனது ஜெமினி ஏஐ சாட்பாட் மூலம், பயனாளிகள் தனிப்பட்ட நோக்கிலான சித்திரங்கள் கொண்ட 10 பக்க கதை புத்தகத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய வசதியை ’ஸ்டோரிபுக்’ (Storybook) எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகளுக்கான பிரதானமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, 45 மொழிகளில் சித்திரங்களுடன் ஈடுபாடு அளிக்கக் கூடிய உள்ளடக்கத்தை அளிக்கிறது.
“ஜெமினி செயலி மூலம் உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கக் கூடிய புதிய வழியை அறிமுகம் செய்கிறோம்- சித்திரங்கள் கொண்ட, உரக்க வாசிக்கும் திறன் கொண்ட தனிப்பட்ட கதைப்புத்தகம். உங்கள் கற்பனையில் தோன்றும் எந்த கதையை சொன்னாலும் ஜெமினி கலை மற்றும் ஆடியோ கொண்ட தனித்துவமான 10 பக்க புத்தகமாக உருவாக்கித்தருகிறது. தனிப்பட்டத் தன்மைக்காக உங்கள் புகைப்படங்கள், கோப்புகளில் இருந்து ஊக்கம் பெறுமாறு ஜெமினிக்கு கட்டளையிடலாம்,” என இது தொடர்பான கூகுள் வலைப்பதிவு தெரிவிக்கிறது.

கிளேமோஷன், குரோசெட், அனிமே, பிக்செல் ஆர்ட் உள்ளிட்ட வடிவங்களை பயனாளிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான குறிப்புகள் அளிக்க புகைப்படங்களை பதிவேற்றலாம். உடனே, புகைப்படங்களுடன் சிறிய பத்திகளை உருவாக்கி உறக்க படித்துக்காட்டுகிறது.
உதாரணமாக, பெற்றோர்கள் சிக்கலான தலைப்புகள் தொடர்பாக கதையை உருவாக்கி சூரிய மண்டலம் போன்றவற்றை குழந்தைகளுக்கு கதையாக விவரிக்கலாம். மேலும், வாழ்க்கை கதைகள் கற்றுத்தரவும் பயன்படும். இளம் சகோதரரிடம் அன்போடு இருப்பதன் முக்கியத்துவத்தை குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையில் யானை கதாபாத்திரம் கொண்டு விளக்கலாம்.
வழக்கமான கதை சொல்லும் முறைகள் கடந்து பெற்றோர்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள இந்த ஸ்டோரிபுக் வசதி உதவுகிறது. ஏஐ துணையோடு தனிப்பட்ட தன்மை மற்றும் படங்கள், ஆடியோவை இணைக்கிறது. இதன் மூலம் பெற்றோர் குழந்தைகளுக்கு ஈடுபாடு அளிக்கும் கதைகளை வழங்கலாம்.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan