
எக்ஸ்பிரஸ் இண்டஸ்ட்ரி கவுன்சில் ஆஃப் இந்தியா (The Express Industry Council of India) மற்றும் கேபிஎம்ஜி (KPMG) ஆகியவற்றின் அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி இன்று வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர்,
"இந்தியாவில் எக்ஸ்பிரஸ் துறையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை உலகிலேயே முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசின் நோக்கம்," என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்திய ஆட்டோமொபைல் துறையின் அளவு தற்போது ரூ. 22 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை உலகிலேயே முதலிடத்தில் கொண்டு வருவதே எனது நோக்கம்.
"2014ம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராக நான் பொறுப்பேற்றபோது, ஆட்டோமொபைல் துறையின் அளவு ரூ.7.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அதன் அளவு ரூ. 22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது,” என்று நிதின் கட்கரி பேசினார்.

3வது இடத்தில் இந்தியா
அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் அளவு தற்போது, ரூ.78 லட்சம் கோடியாகவும், அதைத் தொடர்ந்து சீனாவில் ஆட்டோமொபைல் துறையின் அளவு ரூ.47 லட்சம் கோடியாகவும் உள்ளது. இந்த வரிசையில் இந்தியா ரூ.22 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
“சமீப காலம் வரை, இந்தியாவில் தளவாடச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 16 சதவீதமாக இருந்தது. ஐஐஎம்-ஐஐடி கூட்டு கணக்கெடுப்பின்படி, இதை (லாஜிஸ்டிக்ஸ் செலவை) 10 சதவீதமாகக் குறைத்துள்ளோம் என்பதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது ஒரு முக்கிய மைல்கல், விரைவில் லாஜிஸ்டிக்ஸ் செலவை ஒற்றை இலக்கமாகக் குறைக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்,“ என்றார்.
இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவு, இந்தக் கனவை அடைவதில் தளவாடத் துறை முக்கிய பங்கு வகிக்கும்,” எனவும் இந்த நிகழ்வில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாராட்டு
விரைவுச் சாலை மற்றும் பொருளாதார வழித்தடங்களில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதே, லாஜிஸ்டிக்ஸ் செலவில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் எனவும் இந்நிகழ்வில் நிதின் கட்கரி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
'இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வணிகம் மற்றும் சந்தைகளை இணைத்தல்' என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, எக்ஸ்பிரஸ் துறை ஆண்டுதோறும் 1 பில்லியன் - 1.5 பில்லியன் டாலர் ஜிஎஸ்டி மற்றும் சுங்க வருவாயில் 650 மில்லியன் டாலர் பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“விரைவுத் துறையின் அளவு 2025ம் நிதியாண்டில் 9 பில்லியன் டாலர்களிலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 18 பில்லியன் டாலர்கள் முதல் 22 பில்லியன் டாலர்கள் வரை, என இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 6.5 மில்லியன் முதல் 7.5 மில்லியன் வரை வேலைவாய்ப்புகள் உருவாகும்,” என்றும் நிதின் கட்கரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவை
எக்ஸ்பிரஸ் துறையானது ஒரு தளவாட வசதியிலிருந்து அத்தியாவசிய சேவை வழங்குநராக மாறியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த சந்தையில் உள்நாட்டு எக்ஸ்பிரஸ் துறை சுமார் 70 சதவீதத்தைக் கொண்டுள்ளதாகவும், அதன் மதிப்பு 6.3 பில்லியன் - 6.5 பில்லியன் டாலர் என்றும், இதில் மேற்பரப்பு எக்ஸ்பிரஸ் (surface express) துறை மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 சதவீத பங்கைக் கொண்ட சர்வதேச எக்ஸ்பிரஸ் துறை, 2024ம் நிதியாண்டில் 19.5 மில்லியன் ஏற்றுமதியைக் கையாண்டதாகவும், சுமார் 1,52,300 டன் எடையுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.