
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ரு.2 லட்சம் கோடி அளவு ஊக்கம் அளித்து, மக்கள் கைகளில் அதிக ரொக்கத்தை கொண்டு வரும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து, 12 சதவீத வரி பிரிவில் இருக்கும் 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி பிரிவில் வரும் என்றார். மேலும், 28 சதவீத வரி பிரிவில் இருக்கும் 90 சதவீத பொருட்கள் 18 சதவீத பிரிவில் வரும் என்றார்.

பெரிய நுகர்வோர் நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், புதிய வரி விதிப்பு அறிமுகம் ஆகும் 22ம் தேதிக்கு முன்னதாகவே வரிகுறைப்பிற்கான பலனை நுகர்வோருக்கு அளிக்க முன்வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
"இரண்டு அடுக்கள் மட்டும் கொண்டுள்ள (5%, 18%), இந்த புதிய வரி விதிப்பு முறையில், ரூ.2 லட்சம் கோடி பொருளாதாரத்தில் செலுத்தப்படும். மக்கள் கைகளில் ரொக்கம் இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
இந்த சீர்திருத்தங்களுக்கு முன்னர், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏழைகள், மத்திய தர வர்கத்தினருக்கான குறைந்த விகிதம், மத்திய தர மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றம், வேளாண் சமூகத்திற்கான பலன், சிறு மற்றும் குறும் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாக்கம் எனும் ஐந்து அம்சங்களை கொண்டிருந்தது, என்று அமைச்சர் கூறினார்.
ஜிஎஸ்டி வருவாய் 2018ல் ரூ.7.19 லட்சம் கோடியில் இருந்து 2025ல் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார். வரி செலுத்துபவர் எண்ணிக்கை முந்தைய 65 லட்சத்தில் இருந்து 1.51 கோடியாக அதிகரித்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவு கூட்டாட்சிக்கான உதாரணமாக ஜிஎஸ்டி கவுன்சில் திகழ்கிறது என்று கூறியவர், சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் சாசன அமைப்பு அது என்றும் குறிப்பிட்டார்.
முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வரி அமைப்பு முறை வரி தீவிரமாதமாக இருந்தது என்று கூறியவர், ஒரு நாடு ஒரு வரி என்ற வகையில் ஜிஎஸ்டி செயலாக்கத்தில் நிறைய உழைப்பு இருக்கிறது, என்றார்.
“ஐமுகூ அரசு பத்து ஆண்டுகள் இருந்தது. உங்களால் ஜிஎஸ்டி கொண்டு வர முடியவில்லை. ஜிஎஸ்டி குறித்து மாநிலங்களை சம்மதிக்க வைக்க முடியவில்லை. என்னால் கடுமையான அரசியல் பதிலை அளித்திருக்க முடியும். ஆனால் இன்று அல்ல,” என்றும அமைச்சர் கூறினார்.
மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி முறை செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. நான்கு அடுக்கு வரி விதிப்பு, (5, 12, 18, 28%) இரண்டு அடுக்குகளாக (5 ,18%) குறைக்கப்பட்டுள்ளன.
யுவர்ஸ்டோரி குழு, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan