
மத்திய அரசு 2017-ல் ஜிஎஸ்டி (Goods and Services Tax) அறிமுகப்படுத்தியதிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த புதிய நடைமுறைகள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வருகிறது.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு குறைந்த ஜிஎஸ்டி:
இனிமேல் பெரும்பாலான மருத்துவ உபகரணங்கள் 5% ஜிஎஸ்டி விகிதத்தில் வர உள்ளன. உயிர் காக்கும் மருந்துகள் — Agalsidase Beta, Imiglucerase, Onasemnogene, Eptacog alfa போன்றவை — முழுமையாக ஜிஎஸ்டியிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.
புற்றுநோய், சுவாச கோளாறுகள், ஆட்டோ இம்யூன் நோய்கள் (autoimmune diseases) போன்ற பலவகை நோய்களுக்கு தேவையான மருந்துகள் மீதான ஜிஎஸ்டி 12% இருந்து 5% ஜிஎஸ்டியாக குறைக்கப்படுகிறது.
5% ஜிஎஸ்டி வரப்போகும் முக்கிய மருத்துவப் பொருட்கள்:
- மருந்துப் பொருட்கள்: அனஸ்தீஷியா மருந்துகள், மருத்துவ தரம் கொண்ட ஆக்ஸிஜன், மருத்துவ ஹைட்ரஜன் பெராக்சைடு, அயோடின், டயக்னோஸ்டிக் கிட்கள்
- மருத்துவ உபகரணங்கள்: சர்ஜிகல் க்ளவ்ஸ், பாண்டேஜ்கள், கட்டுகளுக்குத்தேவையான மென்மையான துணிவகை, ரேடியோலாஜி கருவிகள், இருதயக் குறைபாடுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், எக்ஸ்-ரே, ரேடியோகிராபி, கதிர்விச்சுச் சிகிச்சைக் கருவிகள். தெர்மாமீட்டர்கள், பிற மருத்துவ ஆய்வுக் கருவிகள்
- கண் பராமரிப்பு: மூக்குக் கண்ணாடிகள், லென்ஸ், பார்வைச் சரிப்படுத்தலுக்கான ஃபிரேம்கள்
- இரத்த சர்க்கரை பரிசோதனை கருவிகள்
- சிறுநீரக கசிவு தடுக்கும் கருவிகள்
மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் சேவைகள், மருந்துத் துறையின் ஜாப் வேலைகள் ஆகியவற்றுக்கும் 5% ஜிஎஸ்டி.
"இந்த மாற்றம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது. ஏனெனில், அவர்களது உள்ளீட்டு பொருட்களுக்கு 18% வரி இருந்த நிலையில், இறுதி தயாரிப்புகள் குறைந்த ஜிஎஸ்டியில் வந்ததால் inverted duty structure ஏற்பட்டது," என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஆரோக்கிய மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி நீக்கம்:
இப்போது வரை காப்பீட்டு பிரீமியம் 18% ஜிஎஸ்டியுடன் வந்தது. இது, இந்தியாவில் காப்பீட்டு உள்செலுத்தல் மிகக் குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இப்போது, தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த ஆரோக்கிய மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் — குடும்பக் காப்பீட்டுத் திட்டங்கள், டெர்ம் லைஃப், யூனிட்-லிங்க்டு, எண்டோவ்மெண்ட், ரீ-இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட அனைத்துக்கும் ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
"காப்பீட்டுச்செலவுகள் குறைவதற்கான வழியை இது அமைக்கும். பொதுமக்களுக்கு பாதுகாப்புத் தயாரிப்புக்கள் எளிதாக கிடைக்கச் செய்யும். இதன் மூலம் காப்பீட்டுக்குள் வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்," என நிர்மலா சீதாராமன் கூறினார்.
எனினும், "ஜிஎஸ்டி இல்லாமல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு உள்ளீட்டு வரி சலுகை (input tax credit) கிடைக்காது. இது விலை குறைப்பை பாதிக்குமா என்பதே கேள்வி," என Somerset Indus Capital Partners நிறுவனத்தின் பங்குதாரர் ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
"புதிய திட்டம் சரியாக செயல்பட்டால், இந்தியாவின் காப்பீட்டு சந்தையில் வளர்ச்சி, சர்வதேச முதலீடு, மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும்," என அவர் கூறினார்.