
ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் வரி 2017 ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டது. மாநில அரசும் மத்திய அரசும் தனித்தனியே வரிவசூலிப்பதை தவிர்த்து அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு 5% வரி, பொது பயன்பாட்டுப் பொருட்களுக்கு 12% வரி, அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18% வரி மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 28% வரி என விகிதங்கள் வகுக்கப்பட்டன.
அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடி பொருட்கள் மீதான வரிகளுக்கு தளர்வு கொடுத்து வந்தன. இந்நிலையில், 2025 ஆகஸ்ட் 3-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை மறுசீமைப்பதற்கு ஒப்புதல் தரப்பட்டது.
4 விகிதங்களாக இருந்த வரி அடுக்குகளில் 12 மற்றும் 28 சதவிகித வரி நீக்கப்பட்டு இரண்டே வரி முறையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் வரி 5% என குறைக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்களின் சுமை ஓரளவு குறையும் என்று நம்பப்படுகிறது.
செப்டம்பர் 22 முதல் எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது என கீழே காணலாம்:

விலை குறையும் அத்தியாவசியப் பொருட்கள்
- இதுவரை 18 % வரி விதிக்கப்பட்டிருந்த ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, சோப்பு, பல் துலக்கும் பிரஷ், ஷேவிங் கிரீம்களுக்கான வரி 5% ஆக குறையும்.
- இதுவரை 12% வரி வசூலிக்கப்பட்ட வெண்ணெய், நெய், சீஸ் மற்றும் பால் பொருட்கள், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள், மிக்சர்களுக்கான வரி 5% ஆக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறையும்.
- கான் பிளேக்ஸ், பிஸ்கட், சாக்லேட்டுகள் மற்றும் கோகோ பவுடர், பாஸ்தா உள்ளிட்டவற்றின் மீதான வரியும் 5%ஆக குறைய உள்ளது.
- சர்க்கரை பொருட்கள், தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான வரி 5%ஆக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- சுவை சேர்க்கப்படாத தண்ணீர் மற்றும் மினரல் வாட்டர் மீதான வரி 18%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- காலணிகள் மற்றும் ஆடைகள் மீதான வரியும் 5%ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறையும்.
- குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் மருத்துவ டயப்பர்கள் மீதான வரியும் 7% குறையப்போகிறது.
- அழிப்பான்கள்(Eraser), பென்சில்கள், கிரேயான்கள், பேஸ்டல்கள், வரைபடங்கள், விளக்கப்படங்கள் மற்றும் புவி கோளங்களுக்கு இனி வரி இல்லை.
- உடற்பயிற்சி புத்தகங்கள் மற்றும் அதன் குறிப்பேடுகளுக்கும் வரி இல்லை.
- 32 இன்சுகளுக்கு மேலான எல்இடி மற்றும் எல்சிடி டிவிகளுக்கான வரி 28%ல் இருந்து 18%ஆக குறைப்பு.
- ஏசி, மானிட்டர், டிஷ் வாஷர் மீதான வரி 18%ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் குறையும்.
சுகாதாரத் துறையில் விலை குறையும் பொருட்கள்
- தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு இனி வரி கிடையாது.
- தெர்மாமீட்டர், மருத்துவ தர ஆக்சிஜன், அனைத்து நோயறியும் கருவிக் ளமற்றும் வினைப் பொருட்கள் மீதான வரி 5%ஆக குறைத்து நிர்ணயம்.
- குளுக்கோமீட்டர், சோதனைப் பட்டைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் மீது விதிக்கப்பட்ட 12% வரி 5%ஆக குறைப்பு.
விலை குறையப் போகும் விவசாய உபகரணங்கள்
- டிராக்டர்கள் மீதான வரி 12%ல் இருந்து 5%ஆகவும் டிராக்டர் டயர்கள் மற்றும் பாகங்களுக்கான வரி 18%ல் இருந்து 5%மாகவும் குறைத்து நிர்ணயம்.
- குறிப்பிட்ட உயிரிகள், பூச்சிக்கொல்லிகள், நுண்ணிய நுண்ணூட்டச் சத்துக்கள், சொட்டு நீர் பாசன அமைப்பு மற்றும் தெளிப்பான்கள் மீதான வரி 5%மாக குறைக்கப்பட்டுள்ளது.
- மண்வள பராமரிப்பு, சாகுபடி, அறுவடை மற்றும் கதிரடிப்பதற்கான இயந்திரங்கள், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் இயந்திரங்கள் மீதான வரியும் 5%ஆக குறைய உள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் குறையும் பொருட்கள்
- 1200சிசி-க்கு மிகாமல் உள்ள பெட்ரோல் & பெட்ரோல் ஹைபிரிட் எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் வரி 10% குறைந்துள்ளது.
- 1500 சிசிக்கு மிகாத டீசல் &டீசல் ஹைபிரிட் கார்கள் மீதான வரியும் 10% குறைய உள்ளது.
- 3 சக்கர வாகனங்கள், 350 சிசிக்கு கீழே உள்ள மோட்டார் சைக்கிள்கள், சரக்கு போக்குவரத்துக்கான மோட்டார் வாகனங்களின் வரியும் 28 %ல் இருந்து 18% ஆகிறது.
- மின்சார வாகனங்களுக்கான வரி தற்போதுள்ள 5% வரி என்ற நிலையிலேயே தொடரும்.