+

ஆன்லைன் மூலம் சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் பெறுவது எப்படி? - Step-by-Step Guide!

பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற சொத்துகளை வாங்கும் போது பத்திர பதிவுத்துறையில் அதை ஆவணமாக முத்திரைத்தாள்களை பயன்படுத்தி பதிவு செய்வது வழக்கம்.  அதில் சொத்தின் முந்தைய உரிமையாளர் விவரம் (விற்றவர்) மற்றும் தற்போதைய உரிமையாளர் விவரம் (வாங்கியவர்), சொத்து விவரம், சொத்தி

பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற சொத்துகளை வாங்கும் போது பத்திர பதிவுத்துறையில் அதை ஆவணமாக முத்திரைத்தாள்களை பயன்படுத்தி பதிவு செய்வது வழக்கம். 

அதில் சொத்தின் முந்தைய உரிமையாளர் விவரம் (விற்றவர்) மற்றும் தற்போதைய உரிமையாளர் விவரம் (வாங்கியவர்), சொத்து விவரம், சொத்தின் அமைவிடம், லே-அவுட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இந்த ஆவண பத்திரத்தை கொண்டு சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமையாளர் பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக உள்ளாட்சி அமைப்புகளில் சம்பந்தப்பட்ட சொத்து சார்ந்து சேவைகளை பெற, வருவாய் துறை சேவைகள், வங்கி சார்ந்த சேவைகள் என பல்வேறு பணிகளுக்கு இந்த ஆவணத்தின் பத்திர நகலை பயன்படுத்துவது உண்டு. இதன் மூலம் அந்த சொத்தின் உரிமை தன்னிடம் உள்ளதை என்பதை தெரிவிக்கலாம். 

சில சமயங்களில் பயனாளர் சமர்ப்பிக்கும் சொத்து ஆவண பத்திர நகலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவது உண்டு. அதே நேரத்தில், எல்லா இடங்களுக்கும் பயனாளர் பதிவு செய்யப்பட்ட அசல் ஆவண பத்திரத்தை கொண்டு செல்வதில் எதார்த்த சிக்கல்கள் உள்ளன. ஏனெனில், அதை தவறவிட்டால் மீண்டும் அசல் பத்திரத்தை பெறுவதில் அலைச்சல் அதிகம் இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் சான்றளிக்கப்பட்ட பத்திர நகலை பத்திர பதிவுத்துறை வழங்கி வருகிறது. அதை இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெறுவது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம். 

tn

சொத்து பத்திரம் என்றால் என்ன?

எந்தவொரு சொத்தை வாங்கும் போதும் அதை பத்திர பதிவுத்துறை மூலம் விற்பவர், வாங்குபவருக்கு முத்திரைத்தாள் பத்திரத்தில் கிரையம் செய்வதுண்டு. அதில் விற்பவர் மற்றும் வாங்குபவரின் டிஜிட்டல் படம், ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றின் விவரம், சொத்து விவரம், சொத்தின் அமைவிடம், அதன் ஜிபிஎஸ் விவரம், சொத்து பதிவு செய்யப்பட்ட நாள், சொத்தின் மதிப்பு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதை அடிப்படையாக கொண்டு பட்டா முதல் வங்கியில் கடன் பெறுவது வரையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். 

இதில் சில இடங்களில் சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் வேண்டுமென கேட்பதுண்டு. உதாரணமாக சம்பந்தப்பட்ட சொத்து வீட்டு மனையாக இருந்து, அந்த இடத்தில் வீடு கட்ட வங்கிக்கடன் வேண்டுமென்றால் பயனரின் வருவாய், சிபில் ஸ்கோர், கடனை திரும்ப செலுத்தும் தகுதியை பகுப்பாய்வு செய்த பின்னர் சொத்து குறித்து வழக்கறிஞரின் ‘Legal Opinion’ வேண்டுமென வங்கி அல்லது நிதி நிறுவன அதிகாரிகள் சொல்வதுண்டு.

அது தொடர்பாக வழக்கறிஞரை அணுகினால் சொத்தின் சான்றளிக்கப்பட்ட பத்திர நகல், 25+ ஆண்டுகளுக்கான வில்லங்க சான்று வேண்டுமென பொதுவாக கேட்பதுண்டு. ஏனெனில், வழக்கறிஞர் தரப்பில் வங்கிக்கு சொத்து குறித்து பரிந்துரை செய்யும் போது பின்வரும் ஆவணங்களை ஆராய்ந்ததின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறேன் என குறிப்பிடுவார். அதில் சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் குறித்தும் குறிப்பிடுவார். இது போல பல்வேறு இடங்களில் தமிழக பத்திர பதிவுத்துறை சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் வேண்டுமென கேட்பது உண்டு. 

இதற்கு எந்தவித லஞ்சமும் இடைத்தரகர் உட்பட யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை பதிவுத்துறையில் நேரடியாக விண்ணப்பித்தும், ஆன்லைன் வழியாக பயனரே விண்ணப்பித்தும், பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்தும் பெறலாம். 

ட்ன் ரேகி

ஆன்லைன் மூலம் சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் பெறுவது எப்படி?

  • இந்த சேவையை பத்திர பதிவுத்துறையின் https://tnreginet.gov.in/portal/ என்ற வலைதளத்தில் பயனர்களாக பதிவு (Registered Users) செய்யப்பட்டவர்கள் மட்டுமே பெற முடியும். 
  • மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவது போல பயனர்கள் எளிதாக இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 
  • இதில் பயனர்களின் பெயர், ஊர், வயது, அடையாள சான்று, பிறந்த ஆண்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வசிப்பிட முகவரி என அனைத்து விவரங்களும் கேட்கப்படும்.
  • அதை கொடுத்து புதிய பயனர்களாக இணைந்து கொள்ள முடியும். 
  • பதிவு செய்யப்பட்ட பயனர்கள் பதிவுத்துறையின் வலைதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும். 
  • தொடர்ந்து மின்னணு சேவைகள் > ‘சான்றளிக்கப்பட்ட நகல்’ என்பதை தெரிவு செய்ய வேண்டும். 
  • அதில் தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க என்பதை க்ளிக் செய்ய வேண்டும். 
  • அதில் ஆவண விவரம் தேடுதல், தனிப்பட்ட விவரகங்கள் மற்றும் கட்டண விவரங்கள் என மூன்று நிலைகள் இருக்கும். 
  • ஆவண விவரம் தேடுதலில் ஆவணத்தின் வகைப்பாட்டை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக தனிநபர்கள் என்றால் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம் என்பதை தேர்வு செய்யலாம். 
  • பின்னர், ஆவணத்தின் எண், சார்பதிவாளர் அலுவலகம், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, புத்தக எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். இது அனைத்தும் சம்பந்தப்பட்ட ஆவணத்தில் இருக்கும்.  
  • அந்த விவரங்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். 
  • அந்த ஆவண விவரம் தேடி எடுக்கப்பட்டு, அதில் ஆவண எண், சார்பதிவாளர் அலுவலகம், பதிவு செய்த நாள், ஆவணத்தின் தன்மை உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அது சரியாக இருந்தால் அதை தேர்வு செய்து இணையவழியில் விண்ணப்பித்து பெறுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். 
  • இதன் பின்னர் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவை தனிப்பட்ட விவரங்கள் பிரிவில் கேட்கப்படும். 
  • அதை கொடுத்ததும் விவரங்களை சரிபார்க்குமாறு தெரிவிக்கும். 
  • தொடர்ந்து மனு கட்டணம், தேடுதல் கட்டணம், நகல் கட்டணம், கணினிக் கட்டணம், முத்திரைத்தீர்வை உள்ளிட்ட கட்டணங்கள் என மொத்தமாக விண்ணப்பத்திற்கான கட்டணம் குறிப்பிடப்பட்டு இருக்கும். 
  • இணையவழியில் கட்டணம் செலுத்தியதும் அடுத்த சில நாட்களில் (குறைந்தபட்சம் 2 முதல் 3 நாட்கள்) பயனர்களுக்கு டிஜிட்டல் வடிவில் (pdf) சான்றளிக்கப்பட்ட பத்திர நகல் கிடைக்கும். 
  • அதை பதிவுத்துறையின் வலைதளத்தில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > கோரிக்கைப் பட்டியலில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்தியதற்கான ரசீதும் கிடைக்கும். 
  • இதில் Digitally Signed (மின் கையொப்பம்) வெரிபிகேஷனும் இருக்கும். 


Edited by Induja Raghunathan

facebook twitter