எல்லாத் துறைகளிலும் மாற்றத்தை நிகழ்த்தி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு இயங்கும் புதிய யுகத்தை எதிர் கொண்டு வருகிறோம். கல்வித் துறை புரட்சியில் துவங்கி, சுகாதார நலன் அணுகல், தரவுகள் சார்ந்த ஆளுகை, நகரங்களை ஸ்மார்ட் ஆக்குதல், என ஏஐ இந்தியாவில் முன்னேற்றத்தை வடிவமைத்து வருகிறது.
கடந்த ஆண்டு அரசு தரவுகள் படி, இந்திய ஏஐ மிஷன் கீழ் ரூ.10,300 கோடி ஒதுக்கப்பட்டு 38,000 ஜிபியூக்கள் இயங்குகின்றன. தொழில்நுட்பம் மற்று ஏஐ சூழலில் ஆறு மில்லியன் பேர் பணியாற்றுகின்றனர். 2035ல் ஏஐ பொருளாதாரத்திற்கு 1.7 டிரில்லியன் டாலர் பங்களிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புரட்சிக்கு மத்தியில் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் அமைப்புகள் ஏஐ சமூக நலனுக்காக பயன்படுத்துகின்றன. சமூகங்களை மேம்படுத்தி, அமைப்பு சார்ந்த இடைவெளியை நீக்குதல், விளிம்பு நிலை மக்களுக்கு தொழில்நுட்பத்தை மேலும் அணுகல் மிக்கதாக்குதல் உள்ளிட்டவற்றில் அவை கவனம் செலுத்தி வருகின்றன.
ஏஐ நுட்பத்தை சமூக நலனுக்காக பயன்படுத்தும் ஸ்டார்ட் அப் முயற்சிகள் சில வருமாறு:
சிஷு மாப்பன் – வாத்வானி ஏஐ (Shishu Maapan - Wadhwani AI)
சமூக தாக்கத்திற்கான ஏஐ நுட்பத்தில் கவனம் செலுத்தும் வாத்வானி ஏஐ, பெரிய அளவிலான சமத்துவம் மிக்க மனிதர்கள் சார்ந்த தாகத்திற்கான கருவியாக அமைகிறது. இதன் புதுமையாக்கங்களில் ஒன்று 'சிஷு மாப்பன்' கருவி.
நாட்டின், இல்லம் தேடி சிசு நலன் (HBNC) திட்டம் கீழ், ஆஷா ஊழியர்கள் பிறந்த குழந்தைகளை 21 மற்றும் 42 ம் நாளில் வந்து வளர்ச்சியை கண்காணிப்பார்கள். வழக்கமான முறையில் இதற்கான சாதனத்தை கையில் கொண்டு வருவது சிக்கலானது.
சிஷு மாப்பன் ஏஐ கருவியை வழக்கமான ஆஷா செயலியுடன் எளிதாக ஒருங்கிணைகலாம். அல்லது தனி செயலி வாயிலாகவும் அணுகலாம். ஸ்மார்ட்போன் மூலம், களப்பணியாளர்கள், பிறந்த குழந்தையின் வீடியோவை பதிவு செய்து, ஏஐ மூலம் நிகழ் நேரத்தில் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. எடை மற்றும் உயரம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக செயலியில் பதிவாகின்றன.
இணைய வசதி இல்லை எனில், தரவுகள் சேமிக்கப்பட்டு, இணைப்பு வந்தவுடன் தானாக ஒருங்கிணைக்கப்படும். தனியுரிமை பாதுகாப்பிற்காக, தரவுகள் பெறப்பட்டவுடன் வீடியோ நீக்கப்பட்டு விடுகிறது. தற்போது, தத்ரா அண்ட நகர் ஹவேலி, டாமன் அண்டு டையூ பகுதியில் செயலாக்கம் பெறுகிறது.
கார்யா - Karya
2016ல், விவேக் சேஷாத்ரி மற்றும் மனு சோப்ரா, மைரோசாப்ட் ரிசர்ச்சில் கார்யா திட்டத்தை துவக்கினர்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்த நிலையிலும் கிராமப்புற தொழிலாளர்கள் பருவ நிலை சார்ந்த உடல் உழைப்பு பணிகளை சார்ந்திருப்பதை நிறுவனர்கள் கவனித்தனர். எனவே, நல்ல ஊதியம், கொண்ட டிஜிட்டல் பணிகளை, குறிப்பாக மொழி சார்ந்த பணிகளை கிராமப்புற இந்தியர்களுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்தனர்.
இதன் பயனாக, 2019ல் வெளியிடப்பட்ட முதல் ஆய்வுக்கட்டுரை முதல் முறை ஸ்மார்ட்போன் பயனாளிகள் கூட, எழுத்து வடிவ மாற்று சேவையை வழங்க முடியும், என தெரிந்தது. நான்கு ஆண்டு ஆய்வுக்குப்பிறகு, கார்யாவை தனியே லாப நோக்கில்லாத நிறுவனமாக உருவாக்கினர்.
மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னோட்ட திட்டங்கள் நல்ல வரவேற்பு பெற்றன. பணி எளிதாகக் கற்க கூடியதாக இருந்தது. ஊதியமும் உடல் உழைப்பு பணிகளை விட அதிகம் இருந்தது.
இன்று, கார்யா 28 மாநிலங்களில் செயல்படுகிறது. 35,000 பேருக்கு பலன் அளிக்கிறது. தனது தொழிலாளர்களுக்கு 8,00,000 டாலர்களை நேர ஊதியமாக வழங்கியுள்ளது. இதன் பயனாளிகள், ஸ்மார்ட்போன் வாயிலாக 35 மில்லியன் டிஜிட்டல் செயல்பாடுகளை நிறைவேற்றியுள்ளனர்.
அபூர்வா ஏஐ.- Apurva.AI
ஆனந்த ராஜனால் துவக்கப்பட்ட அபூர்வா ஏஐ, வளர்ச்சித்துறை சிக்கலான பிரச்சனைகளை எதிர்கொள்வதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது. வர்த்தக பணியில் இருந்து விவசாய பணிகளுக்கு வந்த ராஜனின் அனுபவம் கொண்டு உருவான நிறுவனம் மேலிருந்து செயல்படுத்தப்படும் தீர்வுகள் சரியான பலன் தருவதில்லை எனும் புரிதல் அடிப்படையில் செயல்படுகிறது. ஏனெனில், அவை சவால்களின் புரிதலை கொண்டிருப்பதில்லை.
நந்தன் நிலேகனி மற்றும் ரோகினி நிலேகனி வழிகாட்டுதல் கொண்ட நிறுவனம், வல்லுனர்கள் கருத்துக்களை மட்டும் சார்ந்திருக்காமல் சமூகம் மற்றும் சூழலின் பொதுவான அறிவை சார்ந்து இயங்குகிறது.
அடிப்படையில் ஆபூர்வா ஏஐ, எளிமையான ஆனால் செயல்திறன் மிக்க, கவனித்தல், கற்றல், செயல்படுத்தல் எனும் முறையை கொண்டுள்ளது. நிறுவனம் சார்ந்த அறிவுடன் சமூக அறிவை இதன் மூலம் ஒருங்கிணைக்கிறது. அனுபவங்களை சேகரித்தல், இந்த புரிதலை தரவுகளுடன் ஒருங்கிணைத்தால், பொருத்தமான செயல்களை பரிந்துரைத்தல், என இதன் செயல்பாடு அமைகிறது.
அபூர்வா லென்ஸ், அபூர்வா காம்பஸ் மற்றும் அபூர்வால் திரெட்ஸ் உள்ளிட்ட சேவைகள் வாயிலாக பொதுத்தன்மைகளை கவனித்து, உள்ளூர் சூழலுக்கு ஏற்ற தீர்வுகளை பரிந்துரைக்கிறது.
அர்மான் - ARMANN
மும்பையைச் சேர்ந்த லாப நோக்கில்லா நிறுவனம் அர்மான், தொழில்நுட்பம் மற்றும் பொது சுகாதாரம் இணைந்து, தாய், சேய் மரணங்களை குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளது. மகப்பேரு மருத்துவர் டாக்டர்.அபர்னா ஹெக்டேவால் துவங்கப்பட்ட நிறுவனம், விளிம்பு நிலை மற்றும் கிராமப்புற பெண்களில் கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனம், கர்ப மற்றும் குழந்தை பிறப்பு காலத்தில் உரிய தகவல்களை அளிக்கும் நோக்கம் கொண்டது.
mMitra மற்றும் அரசின் கில்காரி சேவைகளை அடிப்படையாகக் கொண்டு அர்மான், பெண்களுக்கு பிராந்திய மொழிகளில் குரல் வழித்தகவல்களை வழங்குகிறது. ஊட்டச்சத்து, தடுப்பூசி, தாய்ப்பால், சிசு நலன் உள்ளிட்டவை சார்ந்ததாக இந்த தகவல்கள் அமைகின்றன. இதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு முக்கிய தகவல்கள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து, அர்மான் கணிப்பு திறன் ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம், சேவைகளில் இருந்து விலக கூடிய பெண்களை கண்டறிந்து செயல்படுகிறது. குரல்வழிச் சேவையில் கவனம் செலுத்துவதன் மூலம், பயனாளிகள் ஈடுபாட்டை தக்க வைக்கிறது. சுகாதார நலனில் ஏஐ பயன்பாட்டிற்கான உதாரணமாக அமைகிறது.
அதாலத் ஏஐ - Adalat AI
2023ல் உதகர்ஷ் சக்சோனா மற்றும் அர்க்யா பட்டசார்யாவால் துவங்கப்பட்ட அதலாத் ஏஐ, இந்திய நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறது. நீதி வழங்கல் செயல்முறைக்குள் செயல்படும் அதாலத் ஏஐ, நீதிமன்ற செயல்முறையை மேம்படுத்தும் ஏஐ கருவிகளை உருவாக்குகிறது.
இந்திய நீதிமன்றங்களுக்கான பிரத்யேக பேச்சு எழுத்தாக்க சேவையை வழங்குகிறது. பிராந்திய மொழி உச்சரிப்புகளையும் புரிந்து கொள்கிறது. பேச்சு செயல்முறையை எழுத்து வடிவமாக்குவதன் மூலம், ஆவணமாக்கலுக்கான நேரத்தை குறைக்கிறது.
மேலும், இதன் மேடை நீதிமன்ற செயல்முறைக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆவண நிர்வாகம், பட்டியலிடல் போன்றவற்றை சீராக்குகிறது. நீதிமன்ற அமைப்பின் கொள்திறனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan