விவசாயக் கழிவுகளில் இருந்து பேக்கேஜிங் பொருட்களை உருவாக்கியுள்ள ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள்!

12:23 PM Aug 02, 2025 | cyber simman

ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள், விவசாயக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்ட பேக்கேஜிங் பொருட்களை உருவாக்கியுள்ளனர். இது பேக்கேஜிங்கில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நுரைகளுக்கு நிலையான மாற்றாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய மற்றும் காகிதக் கழிவுகளில் வளர்க்கப்படும் மைசீலியம் அடிப்படையிலான உயிர்ச்சேர்க்கைகள், மக்கும் தன்மை கொண்டவை, பேக்கேஜிங்கில் தரத்தை வழங்கக் கூடியவை என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் விவசாயக் கழிவுகளை அகற்றுதல் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வை வழங்குவதன் மூலம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயக் கழிவுகளை அதிக வலிமை கொண்ட, மக்கும் பேக்கேஜிங் பொருட்களாக மாற்றுவதன் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் தற்போது உற்பத்தியாகும் 4 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க நேரடியாக உதவுகிறது. ஆண்டுதோறும் உருவாக்கப்படும் 350 மில்லியன் டன் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தவும் முடியும்.

புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி வணிகமயமாக்குவதற்காக, ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே 'நேச்சர்வொர்க்ஸ் டெக்னாலஜிஸ்' (NatureWrks Technologies) என்ற ஸ்டார்ட்-அப்பை நிறுவியுள்ளனர். இது ஐஐடி மெட்ராஸ் ஆசிரியரான முன்னணி ஆய்வாளர் டாக்டர் லட்சுமிநாத் குந்தனாட்டியால் இணைந்து நிறுவப்பட்டது.

புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி வணிகமயமாக்குதல், தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றத்தைத் தொடர்தல் மற்றும் எங்கள் தீர்வுகளை பரவலாக ஏற்றுக்கொள்ள உரிம ஒப்பந்தங்களை ஆராய்தல் ஆகியவற்றிற்காக இது நிறுவப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற, மதிப்பாய்வு செய்யப்பட்ட பயோ ரிசோர்ஸ் டெக்னாலஜி ரிப்போர்ட்ஸ் ஜூன் 2025 இதழில், இக்கண்டுபிடிப்புகள் தொடர்பான வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை ஐஐடி மெட்ராஸை சேர்ந்த ஆய்வாளர்கள் சாண்ட்ரா ரோஸ் பிபி மற்றும் விவேக் சுரேந்திரன் மற்றும் டாக்டர். லட்சுமிநாத் குந்தனாட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஐஐடி மெட்ராஸின் NFIG (புதிய ஆசிரிய துவக்க மானியம்) மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவியை வழங்கின.

“இந்தியாவில், ஆண்டுதோறும் 350 மில்லியன் டன்களுக்கும் அதிகமான விவசாயக் கழிவுகள் உருவாகின்றன, அவற்றில் பெரும்பாலானவை எரிக்கப்படுகின்றன அல்லது சிதைவடைகின்றன, இதனால் காற்று மாசுபடுவதுடன் மதிப்புமிக்க இயற்கை வளங்கள் வீணாகின்றன. மைசீலியம் அடிப்படையிலான உயிரிக் கலவைகளை நிலையான, மக்கும் பேக்கேஜிங் பொருட்களாக உருவாக்குவதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சனை மற்றும் விவசாயக் கழிவுகள் ஆகிய இரண்டு சவால்களையும் நிவர்த்தி செய்வதை எங்கள் ஆராய்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது,” இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் லட்சுமிநாத் குந்தனாட்டி கூறியுள்ளார்.

“தற்போது ஆய்வக அளவிலான சாத்தியக்கூறுகளை இந்த ஆராய்ச்சி நிரூபித்துள்ளது, இயந்திரப் பண்புகள், நீர் எதிர்ப்பு, மக்கும் தன்மை ஆகியவற்றுடன் மூலக்கூறு கலவைகளை மேம்படுத்துதல், இயற்கை பூச்சுகள் மூலம் அடுக்கு ஆயுளை நீட்டித்தல் ஆகியவையும் அடங்கும். சந்தைக்கு இந்தத் தீர்வை கொண்டுவருவதன் மூலம், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளை மாற்றக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் பொருட்களை உருவாக்குவதையும், மேம்பட்ட சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மூலம் சமூகத்திற்கு பயனளிப்பதையும் ஆராய்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெப்பம்- ஒலி காப்புப் பொருட்கள் போன்ற பிற பொறியியல் பயன்பாடுகளுக்கு ஏற்ப இக்கலவைகளை மேலும் மாற்றியமைக்கலாம். புதிதாகச் சேர்ந்த முனைவர் பட்ட மாணவி செல்வி ஸ்ம்ருதி பட் இப்பணியை மேற்கொண்டு வருகிறார், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Edited by Induja Raghunathan