
ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளார்கள் புதுமையான, விலைகுறைந்த மைக்ரோஃப்ளூய்டிக் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். பாக்டீரியாக்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவையா அல்லது எளிதில் பாதிக்கப்படுகின்றனவா என்பதை இதனால் விரைவாகக் கண்டறிய முடியும்.
மதிப்புமிக்க உலோகங்கள், சிக்கலான உற்பத்தி செயல்முறைகள் அல்லது மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை சார்ந்துள்ள நவீன நுட்பங்களைப் போலன்றி, 'ε-µD' என்றழைக்கப்படும் இந்த ஆய்வகம் சார்ந்த சிப் சாதனம், எளிய மைக்ரோஃப்ளூய்டிக் சிப்பில் பதிக்கப்பட்ட திரை-அச்சிடப்பட்ட கார்பன் மின்முனைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்த சாதனத்தின் விலை குறைவாக இருப்பதுடன், சிறிய மருத்துவமனைகள், கிராமப்புற சுகாதார மையங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வேகம், உணர்திறன் கொண்டதாகவும் பயன்படுத்த இலகுவாகவும் வடிவமைக்கப்பட்ட இந்த சாதனம், மேம்பட்ட ஆய்வக உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில், பாக்டீரியா தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது. ‘மின்வேதியியல் மின்மறுப்பு நிறமாலையை’ அடிப்படையாகக் கொண்ட இந்த சாதனத்தால் 3 மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்க முடியும்.
நுண்ணுயிர் எதிர்ப்பி (AMR) என்பது உலக சுகாதார அமைப்புகள் தற்போது எதிர்கொள்ளும் மிக முக்கிய சவால்களில் ஒன்றாகும். நோய் கண்டறியும் வசதி குறைந்த, தொற்றுக்கு சிகிச்சை கிடைக்காத, சரியாக நிர்வகிக்கப்படாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த சுமை அதிகமாக இருந்து வருகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பி உணர்திறன் சோதனை (AST) என்பது குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செயல்படும் என்பதை அடையாளம் காண பயன்படுத்தப்படும் முக்கிய செயல்முறையாகும்.
இருப்பினும், பாக்டீரியா வளர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு அவற்றின் எதிர்வினையைக் கவனிப்பது உள்ளிட்ட பாரம்பரிய நுண்ணுயிர் எதிர்ப்பி உணர்திறன் சோதனைக்கு அதிக நபர்கள் தேவைப்படுவதுடன் 48 முதல் 72 மணிநேரம் வரை ஆகக்கூடும். பரந்த-ஸ்பெக்ட்ரம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நிறுத்திவைக்க வழிவகுக்கும் என்பதால் இதனால் தடுப்புமுறை சிக்கல் அதிகரிக்கிறது.
இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், ஐஐடி மெட்ராஸ் குழுவினர் ε-µD-ஐ உருவாக்கியுள்ளனர். பாக்டீரியா வளர்ச்சி மற்றும் ஆண்டிபயாடிக் உணர்திறனை மதிப்பிடுவதற்கு மின்வேதியியல் சமிக்ஞைகளைப் பயன்படுத்தும் செலவு குறைந்த பினோடைபிக் சோதனை சாதனமாகும். உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள பல்வேறு அளவுகோல்களை இந்த சாதனம் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை, வேகம், பயன்பாட்டின் எளிமை, நம்பகத்தன்மை ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக குறைந்த வள அமைப்புகளில், நுண்ணுயிர் எதிர்ப்பி உணர்திறன் சோதனையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ε-µD முக்கிய படியாகும்.
இயற்கை அறிவியலின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய, இலவசமாக காணக்கூடிய மிகப்பெரிய அறிவியல் இதழான நேச்சர் போர்ட்ஃபோலியோவில் (ஸ்பிரிங்கர் நேச்சரின் ஒரு பகுதி) மதிப்புமிக்க நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை சரண்யா கோபாலகிருஷ்ணன் (இயக்குநர், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, காப்போன் அனலிட்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஐஐடிஎம் ஆராய்ச்சிப் பூங்காவில் தொழில் ஊக்குவிப்பு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனம், தீக்சா மால், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களான பேராசிரியர் சுப்ரமணியம் புஷ்பவனம், டாக்டர் ரிச்சா கர்மாகர் ஆகியோர் இணைந்து இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளனர்.
Edited by Induja Raghunathan