ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு புத்தொழில் நிறுவனமான 'ஜேஎஸ்பி என்விரோ' (JSP Enviro), அடுத்த தலைமுறை கழிவுநீர்த் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது.
நிலையான கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் களசெயல்பாடுகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா முழுவதும் தனது தயாரிப்பை விரிவுபடுத்தவும், அனைத்து துறைகளின் தொழில்களுக்கும் சேவை செய்யவும் தயார்நிலையில் உள்ளது.
‘பயோ-எலக்ட்ரோகெமிக்கல் அனெரோபிக் டைஜஸ்டர் சிஸ்டம்’ (BEADS™) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, கழிவுநீரை நிர்வகித்தல், கார்பன் தடயத்தைக் குறைத்தல் ஆகிய இரட்டைச் சவால்களை எதிர்கொள்வதுடன், இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு செலவு சேமிப்பு, ஆற்றல் மீட்பு, கார்பன் குறைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
"பாரம்பரிய ஏரோபிக் அமைப்புகள் கழிவுநீரில் ஆக்ஸிஜனை செலுத்த அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தநிலையில், BEADS™ ஆக்ஸிஜன் இல்லாமலேயே இயங்குகிறது. நுண்ணுயிரி சிகிச்சையுடன் மின்முனைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், கழிவுகளிலிருந்து இந்த அமைப்பு மின்சாரத்தை மீட்டெடுக்கும் அதே வேளையில் ஆர்கானிக் கழிவுகளின் சிதைவு விகிதத்தை அதிகரிக்கிறது. மின்னாற்பகுப்பு அமைப்புகளைப் போலன்றி, BEADS™-க்கு அடிக்கடி எலக்ட்ரோடுகளை மாற்றவோ, ரசாயனங்களால் சுத்தகரிக்கவோ அவசியமில்லை. மின்சாரம், ரசாயனங்களைப் பயன்படுத்தாமலேயே ‘பீட்ஸ்’ கழிவுநீரை சுத்தம் செய்து குறைந்தபட்ச கழிவை உற்பத்தி செய்ய முடியும்," என்று புத்தொழில் நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவருமான டாக்டர் வி.டி.ஃபிடல் குமார் கூறினார்.
தமிழ்நாட்டில் ஈரோடு, பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள இரு தொழிற்சாலைகளில் வெற்றிகரமான நிறுவப்பட்டிருப்பதன் மூலம், நிலையான கழிவுநீர் மேலாண்மை என்பது சாத்தியமானது மட்டுமல்ல, லாபகரமானதும் கூட என்பதை ஜேஎஸ்பி என்விரோ நிறுவனம் தொழிற்சாலைகளுக்கு நிரூபித்துள்ளது.
2019-ம் ஆண்டின் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட ஜேஎஸ்பி என்விரோ, நிலையான கழிவுநீர் சுத்திகரிப்பில் கவனம் செலுத்துகிறது. 'கிளைமேட் லாஞ்ச்பேட்' எனப்படும் உலகின் மிகப்பெரிய பசுமை வணிகப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம் ஐரோப்பாவின் காலநிலை சார்ந்த ஆக்சிலரேட்டரிடமிருந்து நிதியுதவியைப் பெற்ற முதல் இந்திய புத்தொழில் நிறுவனமாக ஜேஎஸ்பி என்விரோ விளங்குகிறது.
"செயல்பாட்டு சேமிப்புகளுக்கு அப்பால், குறிப்பிடத்தக்க அளவில் காலநிலை நன்மைகளையும் BEADS™ வழங்குகிறது. நாளொன்றுக்கு 100 கனமீட்டர் அளவுக்கு கழிவுநீரை சுத்திகரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 80 டன் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைத் தவிர்க்கிறது,” என்று ஜேஎஸ்பி என்விரோ இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் பிரியதர்ஷினி மணி கூறினார்.
BEADS™-ஐ பயன்படுத்தும் தொழில்துறை நிறுவனங்கள் குறைந்தபட்ச மின்சாரம்- ரசாயன செலவுகள், குறைந்தபட்ச கசடு அகற்றுதல் ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் முதலீட்டுக்கான வருவாயை ஈட்ட முடியும் என்று இந்நிறுவனம் மதிப்பிடுகிறது. செலவை மிச்சப்படுத்த முயலும் உற்பத்தியாளர்களைக் கவரும் வகையில் இத்தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
Edited by Induja Raghunathan