1 மில்லியன் டாலர் நிதி திரட்டிய ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட் அப் Wankel Energy Systems

12:43 PM Sep 24, 2025 | cyber simman

ஐஐடி மெட்ராஸ், தொழில் ஊக்குவிப்பு ஆழ் தொழில்நுட்ப நிறுவனமான வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ், (Wankel Energy Systems) அறிவியல்சார் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முதலீடு செய்யும் சாஸ்த்ரா விசி தலைமையிலான முன்தொடக்க நிதிச் சுற்றில் ஒரு மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. வியூக நோக்கிலான தேவதை முதலீட்டாளர்களும் இந்த சுற்றில் பங்கேற்றனர்.


மூன்று அமெரிக்க மற்றும் இந்தியக் காப்புரிமைகள், வர்த்தக ரகசியங்களாகப் பாதுகாக்கப்படும் 20க்கும் மேற்பட்ட புத்தாக்கங்களுடன், வான்கெல் நிறுவனம் பொருட்களை உருவாக்குவதோடு, தொழில்நுட்ப மேடையாகவும் விளங்குகிறது.

அழுத்தம் குறைக்கும் வால்வுகளில் ஆற்றல் இழப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த புத்தொழில் நிறுவனம் உலகளவில் செயல்பட இந்த நிதி உதவும். அடுத்த பத்தாண்டுகளில், இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளவில் 1,000-க்கும் மேற்பட்ட யூனிட்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும், 45,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை நீராவி கொதிகலன்கள் ஆண்டுதோறும் 1.26 பில்லியன் டன்னுக்கும் அதிகமான நீராவியை உற்பத்தி செய்து உணவு, பால், ஜவுளி, காகிதம், ரசாயனங்கள், மருந்துகள் போன்ற முக்கிய துறைகளில் முதுகெலும்பாக அமைந்துள்ளன.

அழுத்தம் குறைக்கும் வால்வுகள் (PRVs) வழியே இந்த நீராவியின் பெரும்பகுதி செலுத்தப்படுகிறது, இவை நீராவி ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் சாதனங்களாக இருந்தபோதும், செயல்பாட்டின் போது நீராவியில் இருக்கும் ஆற்றலை இழந்துவிடுகிறது.

'வெப்ப இயக்கவியல் ஆற்றல்' (exergy) என்று அழைக்கப்படும் இந்த ஆற்றல் இழப்பு, பெரும்பாலும் வால்வு ஒன்றுக்கு 160 கிலோவாட் உடனடி சக்தியைக் கொண்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.66,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.

வான்கெல் எனர்ஜியின் 'பீனிக்ஸ் எக்ஸ்பாண்டர்' ரோட்டரி சாதனம், அழுத்தம் குறைக்கும் வால்வுகளால் வீணாக்கப்படும் ஆற்றலைக் கைப்பற்றுகிறது. ஏற்கனவே உள்ள ஆலை உள்கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், தூய மின்சாரமாக மாற்றுவதன் மூலம் இந்த ஆற்றல் இழப்பை சரிசெய்கிறது.

ஒவ்வொரு ‘பீனிக்ஸ்’ யூனிட்டும் ((நீராவி விரிவாக்கி) பொதுவாக 6–24 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தும் திறனை அடைகிறது, அதன்பிறகு, வால்வு ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வரை தொடர்ச்சியான வருடாந்திர சேமிப்பை அளிக்கிறது. நிதி சார்ந்த நன்மைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு யூனிட் நிறுவும்போதும் ஆண்டுக்கு 180 டன்களுக்கும் அதிகமான கரியமிலவாயு உமிழ்வைக் குறைக்கிறது, ஒரு சதுரமீட்டருக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் காலநிலை தொழில்நுட்பங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

"இத்தகைய தொழிற்சாலைகளுக்கு நீராவி இன்றியமையாதது, அதே நேரத்தில் அதன் ஆற்றல் கணிசமாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. வீணான நீராவி அழுத்தத்தை நம்பகமான, தூய ஆற்றலாக மாற்றுவதன் மூலம், பீனிக்ஸ் எக்ஸ்பாண்டர் தொழில்துறையில் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான புதிய அளவுகோலை நிறுவியுள்ளது," என்று வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ் இணை நிறுவனரும், ஆலோசகரும், ஐஐடி மெட்ராஸ் தி எனர்ஜி கன்சோர்டியத்தின் ஆசிரியத் தலைவருமான பேராசிரியர் சத்தியநாராயணன் சேஷாத்ரி கூறியுள்ளார்.

"வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்பது நாம் பார்த்த அளவில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த, தாக்கத்தை ஏற்படுத்தும் ஆழ்ந்த தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களில் ஒன்றாகும். சுத்தமான, அளவிடக்கூடிய வணிக மாதிரியுடன் நடைமுறைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் அடிப்படையான, மேம்பட்ட பொறியியலைக் கொண்டு வந்திருக்கின்றனர்," என்று சாஸ்த்ரா விசியின் நிறுவன பங்குதாரரான ஆஷிஸ் நாயக் கூறியுள்ளார்.

"எங்களது உடனடி இலக்கு 6க்கும் மேற்பட்ட பீனிக்ஸ் எக்ஸ்பாண்டர்களை பல்வேறு தொழில்துறை நிறுவனங்களில் ஈடுபடுத்தி, வரவிருக்கும் மாதங்களில் நடைமுறையில் அவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதாகும். ஒவ்வொரு துறையும் தனித்துவமாக செயல்படுவதால், விரிவாக்கத்திற்கான நம்பிக்கையை வளர்க்கத் தேவையான தகவல்கள் கிடைப்பதுடன், வாடிக்கையாளர் நுண்ணறிவுகளை உருவாக்க வரிசைப்படுத்தல்கள் எங்களுக்கு உதவும்,” என்று வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான பாலச்சந்திரன் ராஜு கூறியுள்ளார்.

நீராவியைத் தாண்டி, குளிர்பதனப் பொருட்கள், அமோனியா, ஹைட்ரஜன், காற்று அமைப்புகள் வரை இந்த புத்தொழிலின் தொலைநோக்குப் பார்வை நீண்டுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள தொழில்கள் வீணாகும் திறனைப் பயன்படுத்த முடியும் என்பதை இத்தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. மேலும், இந்த புத்தொழில் நிறுவனம் அடுத்த தலைமுறை காம்பாக்ட் கம்ப்ரசர்களை அறிமுகப்படுத்தவும், பல்வேறு மட்டத்தில் செயல்படும் திறன் கொண்டதாகவும், உலகளவில் உயர் திறன் கொண்ட எரிசக்தி அமைப்புகளின் எதிர்காலத்தை இயக்கும் தளமாகவும் வான்கெல் நிறுவனத்தை நிலைநிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இரண்டு மானிய சுழற்சிகளில், மூன்று ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பேராசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர், பத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பு மறுசெயல்பாட்டை மேற்கொண்டு, மூன்று தலைமுறைகளுக்கான விரிவாக்கத்தை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு செயல்பாடும் இயந்திரத்தை கூர்மையாகவும், நம்பகமானதாகவும், அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியதாகவும் மாற்றியது, தற்போது உலகின் மிகத் திறமையான நீராவி விரிவாக்கியான பீனிக்ஸ் எக்ஸ்பாண்டராக உருவெடுத்துள்ளது.

எம்ஐடி காலநிலை- எரிசக்தி பிரிவில் பரிசுக்கான பட்டியலில் வான்கெல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மதிப்புமிக்க போட்டி வரலாற்றில் இறுதிப் போட்டியை எட்டிய முதல் மற்றும் ஒரே இந்திய புத்தொழில் நிறுவனம் என்ற பெருமையை வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ் பெற்றுள்ளது.


Edited by Induja Raghunathan