
IITM Pravartak Technologies Foundation மற்றும் Maven Silicon இணைந்து, Semiconductor துறைக்கு தேவையான தொழில்நுட்பங்களில் பணியில் உள்ள நிபுணர்களுக்கான புதிய பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
“VLSI வடிவமைப்பு மற்றும் சரிபார்ப்பு” மற்றும் “Embedded Systems வடிவமைப்பு” எனும் இரண்டு தொழில்முறை சான்றிதழ் படிப்புகள் ஒன்பது மாத காலத்திற்கு ஆன்லைன் முறையில் வழங்கப்பட உள்ளன. இத்திட்டங்கள், பணியை விட்டு விலகாமல் திறன்களை மேம்படுத்த விரும்பும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, India Semiconductor Mission 2.0 நோக்கத்துடன் வலுவாக இணைந்ததாகும். இது இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்நுட்பப் பணியாளர்களை வலுப்படுத்துவதோடு, உலகளவில் போட்டியிடும் திறன் கொண்ட பொறியாளர்களை உருவாக்கும் தேசிய முயற்சியிலும் பங்களிக்கும்.
இந்த இரண்டு படிப்புகளும் கட்டமைக்கப்பட்ட ஆன்லைன் கற்றல், நடைமுறை ஆய்வக பயிற்சிகள் மற்றும் தொழில்துறை சார்ந்த capstone திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு IITM Pravartak மற்றும் Maven Silicon இணைந்து வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதல் கட்ட சேர்க்கைகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை தற்போது சுமார் 52 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ளது (FY2024–25), மேலும் 2030ஆம் ஆண்டிற்குள் 100–110 பில்லியன் டாலராக அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் செமிகண்டக்டர் வடிவமைப்புத் திறனில் இந்தியா ஏற்கனவே சுமார் 20% பங்கைக் கொண்டுள்ளது.
“ஐஐடிஎம் பிரவர்த்தக்கில், Cyber-Physical Systems மற்றும் தொடர்புடைய துறைகளில் புதுமை மற்றும் தரமான திறன் மேம்பாட்டை முன்னெடுக்கிறோம். இந்தப் படிப்புகள், பணியில் உள்ள நிபுணர்களுக்கு முக்கியமான செமிகண்டக்டர் மற்றும் Embedded தொழில்நுட்பங்களில் திறன் மேம்படுத்துவதற்கான விரிவான, அணுகத்தக்க வாய்ப்பை உருவாக்குகின்றன,” என்று டாக்டர் சங்கர் ராமன் தெரிவித்தார்.
“இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கு இது ஒரு முக்கிய திருப்புமுனை காலம். உலகளவில் போட்டியிடும் திறன் கொண்ட, உடனடியாக தொழில்துறையில் செயல்படக்கூடிய நிபுணர்களை உருவாக்குவது அவசியம். இந்த கூட்டாண்மை மூலம், பணியில் உள்ள நிபுணர்களுக்கு நடைமுறை சார்ந்த கற்றல் பாதையை வழங்குகிறோம்,” என்று பிஆர்.சிவக்குமார் தெரிவித்தார்.
IITM Pravartak என்பது Indian Institute of Technology Madras வளாகத்தில் இயங்கும் Section 8 நிறுவனம் ஆகும். இது தேசிய அளவிலான Interdisciplinary Cyber-Physical Systems திட்டத்தின் கீழ் Sensors, Networking, Actuators மற்றும் Control Systems தொடர்பான தொழில்நுட்ப புத்தாக்க மையமாக செயல்படுகிறது.
17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட Maven Silicon, 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் பல்வேறு உலகளாவிய செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
“VLSI Design and Verification” பாடநெறி மேம்பட்ட டிஜிட்டல் வடிவமைப்பு, SystemVerilog, UVM அடிப்படையிலான சரிபார்ப்பு முறைமைகள் மற்றும் தொழில்துறை EDA கருவிகளை உள்ளடக்கும். “Embedded Systems Design” பாடநெறி processor architecture, real-time systems, embedded C, device drivers மற்றும் system-level design ஆகியவற்றை கற்பிக்கும்.
27 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட செமிகண்டக்டர் துறை நிபுணரான பி.ஆர். சிவகுமார், Synopsys, Cadence மற்றும் Mentor Graphics போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்றியவர் என்றும், இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.