ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை சீரமைக்க மத்திய அரசு முடிவெடுத்தாலும் ஒற்றை விகித ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு இன்னும் நாடு தயாராகவில்லை என்று கொல்கத்தாவில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தற்போதுள்ள 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்னும் ஜிஎஸ்டி விகிதம் ஆராயாமல் ஏனோதானோவென்று நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் அல்ல. மாறாக பலதரப்பட்ட மாநில வரி அடுக்குகளை தீவிரமாக ஆராய்ந்த பிறகே அவற்றுக்கு நெருக்கமான அடுக்குகளை நிர்ணயித்தோம், என்றார்.
"ஜிஎஸ்டி மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அடையாளம் காணப்பட்ட தேவைகளில் ஒன்று, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் நான்கு விகிதங்களை விரும்பவில்லை என்பதுதான். இருப்பினும், ஒரே வரிவிகிதச் சூழ்நிலைக்குள் நாடு நுழையத் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு இன்னும் கவுன்சில் உறுப்பினர்கள் பதிலளிக்கவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் எப்போதாவது (பதிலளிக்கலாம்)," என்று சீதாராமன் கூறினார்.
Credit: Nihar Apte
தற்போதைய சீர்திருத்த செயல்முறையை "புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின்" ஒரு பகுதி என நிதியமைச்சர் விவரித்தார், குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிவிகிதத்தை எளிமையாகவும் நியாயமாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு முயற்சியை நினைவு கூர்ந்த நிர்மலா சீதாராமன் இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஜிஎஸ்டி வரி அமைப்பை வலுப்படுத்த "ஜிஎஸ்டி பற்றி ஏதாவது செய்ய வேண்டும்" எனப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கேட்டதாக கூறினார் - பல மத்திய மற்றும் மாநில வரிகளை இணைத்து ஒற்றை தேசிய சந்தையை உருவாக்குதல் மற்றும் சுங்கச்சாவடிகள் மற்றும் எல்லை செக்போஸ்ட் போன்ற தடைகளை நீக்குதல் என்று ஜிஎஸ்டியை வலுவாக்குவது பற்றி நிர்மலா சீதாராமன் பேசினார்.
தற்போதைய என்டிஏ அரசாங்கத்திற்கும் முந்தைய யுபிஏ ஆட்சிக்கும் இடையிலான வரிப் பகிர்வை ஒப்பிடும் ஆவணங்கள் மேற்கு வங்காளத்தில் உள்ள திட்டங்களின் விவரங்களுடன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சீதாராமன் கூறினார். ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட பொதுவான பயன்பாட்டு பொருட்கள் பற்றிப் பட்டியலிடும் கூடுதல் ஆவணங்கள் விரைவில் பகிரப்படும், என்றும் அவர் கூறினார்.