
‘அதிக சொத்துகள் வைத்திருக்கும் இந்திய பணக்காரர்கள், மிகைப் பணக்காரர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம், ஆடம்பர கார்களோ, வைர நகைகளோ, பெரிய பெரிய பங்களாக்களோ அல்ல... மாறாக அனுபவங்கள் மட்டுமே!’ என்கிறது ஓர் ஆய்வறிக்கை.
Mercedes-Benz Hurun India Wealth Report 2025 என்ற புகழ்பெற்ற அறிக்கையின்படி, இந்திய பணக்காரர்களில் 60%-க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்க்கை மகிழ்ச்சியை 10 புள்ளிகள் கொண்ட அளவுகோலில் 8 அல்லது அதற்கும் அதிகமாக மதிப்பீடு செய்கிறார்கள்.
ஆடம்பரப் பொருட்களை வாங்கும் அளவில் குறைவாகவே செலவழிக்கிறார்கள் என்றாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது. இந்த அறிக்கையின் சுவாரஸ்யமான தகவல்கள் சில:
பயணமே முதன்மையான விருப்பம்: 45% பேர் பயணத்தை தங்களது ஹாபியாக கூறியுள்ளனர். அதன்பிறகு வாசிப்பும் சமையலும்தான் முக்கிய இடம்பிடிக்கின்றன.
விருப்பப்படியான செலவுகள்: Discretionary spending-ல் பயணம் (32%), கல்வி (27%), மற்றும் பொழுதுபோக்கு (22%) ஆகியவை மேலோங்கியுள்ளன.
விலை உயர்ந்த ஆடம்பரக் கார்கள், வைர நகைகள், வாட்ச்கள் போன்றவை பின்தங்கியுள்ளன. இது மேனா மினுக்கி ஷோக்கு என்று அழைக்கப்படும் 'show-off' கலாச்சாரத்திலிருந்து ‘அர்த்தமுள்ள அனுபவங்களுக்கு’ மாறும் ஒரு மனோபாவத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
27% பேர் யோகாவை தங்களது முக்கிய உடற்பயிற்சி என தெரிவிக்கின்றனர். இது பணக்காரர்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது.
2021-ஐ ஒப்பிடுகையில் 2025-ல் மில்லியனர் குடும்பங்கள் 90% வளர்ச்சி அடைந்து 8.71 லட்சமாகியுள்ளது. 2017-இல் இருந்து பார்த்தால் இது 445% வளர்ச்சி அடைந்துள்ளது.
அதிக செல்வம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குவிக்கப்பட்டாலும் பெரும்பாலான மில்லியனர்கள் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் குறைவாகவே குடும்பச் செலவாக செலவழிக்கிறார்கள் என்கிறது இந்த அறிக்கை.

படம்: மெட்டா ஏஐ
குறைந்தது ரூ.50 கோடி வருவாய் ஈட்டுவதை நிதி சுதந்திரத்தின் குறியாகப் பார்க்கின்றனர். இது ‘entry-level’ கோடீஸ்வரர்கள் நிலையைவிட (ரூ.8.5 கோடி) மேலும் உயர்ந்த இலக்கை காட்டுகிறது.
தனியார்களிடையே கல்வி நன்கொடைகளுக்கு 42% செலவாகும் நிலையில், சுகாதாரத்திற்கு 7%, சுற்றுச்சூழல் காரணங்களுக்கு 5% மட்டுமே செலவாகிறது. 30% பேர் தங்களது முக்கிய குடிமை கடமையாக வரி செலுத்துதலைக் குறிப்பிடுகின்றனர். அதன் பிறகு சுற்றுச்சூழல் மற்றும் நன்கொடைகளே முக்கியம்.
சாதாரண மில்லியனர் நிலையைத் தாண்டி, அதிக செல்வந்தர்கள் குழுவிற்கு (Ultra High Net Worth) உயர்வோர் விகிதம் மிகவும் குறைவானது. 2017-இல் இருந்து 2025 வரை வெறும் 5% மில்லியனர்களே இந்த நிலையை அடைந்துள்ளனர். பில்லியனர் ஆகியவர்கள் 0.01% மட்டுமே. தற்போது இந்தியாவில் பில்லியனர் குடும்பங்கள் 360 மட்டுமே உள்ளன.
பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நேரடி தொடர்பில்லை என்று கூறவருகிறதா இந்த அறிக்கை? அல்லது பணக்காரர்கள் ஆடம்பரத்தை விட வாழ்க்கை அனுபவங்களை அதிகம் நேசிக்கிறார்கள் என்று கூற வருகிறதா? இந்த அறிக்கை கூறும் புதிய சமூக உளவியல்தான் என்ன?
அவர்கள் கூறும் அந்த ‘மகிழ்ச்சி’, ‘அனுபவம்’ போன்றவை அவர்கள் சம்பாதித்ததிலிருந்து வருவதா அல்லது அத்தகைய சம்பாத்தியம், வருவாய், பணக்காரராகும் உந்துதல் போன்ற அனுபவமே அவர்களுக்குச் சந்தோஷம் அளித்து விடுகிறதா?
இல்லை... இவையெல்லாம் இல்லாவிட்டாலும் கிடைக்கும் வாழ்வனுபவமே பெரிது என்கின்றனரா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த கருத்தறிக்கையில் விடையில்லை.