
இந்தியாவின் முன்னணி இணைய நிறுவனம் Info Edge (India) Ltd, நாட்டின் ஆரம்ப கட்ட டீப்-டெக் (Deep-Tech) ஸ்டார்ட்அப்'களை ஆதரிக்கும் நோக்கில், அதிகபட்சம் ₹250 கோடி வரை ஒரு மாற்று முதலீட்டு நிதியில் (AIF) முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை அறிக்கையின் படி, A88 Trust அறிமுகப்படுத்திய A88 Fund I என்ற திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிதி திட்டம் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி-யில் பதிவு செய்யப்பட்ட ‘இரண்டாம் வகை மாற்று முதலீட்டு நிதி’ (Category II Alternative Investment Fund) ஆகும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வளர்ச்சியை உருவாக்குவதுடன், இந்தியாவில் உள்ள அல்லது இந்தியாவை மையமாகக் கொண்ட டீப்-டெக் ஸ்டார்ட்அப்'களில் முதலீடு செய்து தொழில் முனைவோர் சூழலை வலுப்படுத்துவது ஆகும்.

இந்த நிதியின் ஸ்பான்சர் மற்றும் முதலீட்டு மேலாளராக, இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் துணை நிறுவனம் Smartweb Internet Services Ltd செயல்படும்.
இதற்கிடையில், மற்றொரு முக்கிய முடிவாக, இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் தனது இணை நிறுவனமான Shopkirana E Trading Pvt Ltd-இல் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட Trustroot Internet Pvt Ltd (TIPL) உடன் செய்யப்பட்ட பங்கு பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் நடைபெறுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இன்ஃபோ எட்ஜின் துணை நிறுவனம் Startup Investments (Holding) Limited (SIHL), Shopkirana-வில் தன்னுடைய முழு 26.14% பங்கையும் TIPL-க்கு மாற்றுகிறது. இந்த பங்கு பரிமாற்றத்தின் மதிப்பு சுமார் $32.97 மில்லியன், என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, TIPL நிறுவனம் SIHL-க்கு 1,04,868 முன்னுரிமை பங்குகளை வழங்கும். இதன் மூலம் SIHL, அந்த சிங்கப்பூர் நிறுவனத்தில் 2.021% பங்கு பெறுகிறது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, SIHL நிறுவனம் TIPL-இல் கூடுதல் முதலீடாக $1.72 மில்லியன் செலுத்தி, 5,484 முன்னுரிமை பங்குகளை வாங்க உள்ளது. இந்த இரண்டு பரிவர்த்தனைகளும் 2026 ஜூன் 30க்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.