இந்த ஆண்டு ஜூலை மாதம் எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, மும்பையில் தனது முதல் ஷோரூமைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, ஐனாக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனரான சித்தார்த் ஜெயின் டெஸ்லா மாடல் ஒய் காரை தற்போது வாங்கியுள்ளார். இதன்மூலம், இந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் தொழிலதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் டெஸ்லா காருடன் அவர் நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில்,
‘இந்தியா இங்கின் (India Inc) முதல் டெஸ்லா காரை வாங்கியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில் உள்ள, "இந்தியா இன்க்" என்ற வார்த்தையானது, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட கார்ப்பரேட் துறையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சுருக்கெழுத்து ஆகும். இது இந்தியாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் வணிகங்களின் சமூகத்தைக் குறிக்கிறது.
டெஸ்லா வாங்கிய முதல் இந்தியர்
சித்தார்த் ஜெயின் மேலும் தனது பதிவில், டெஸ்லாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கையும் டேக் செய்துள்ளார். கூடவே,
“இது உங்களுக்கானது @ElonMusk!!! இந்தியா இங்க்-ன் முதல் டெஸ்லா காரைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2017ம் ஆண்டு கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலைக்குச் சென்றதில் இருந்து, எனது சொந்த டெஸ்லாவுக்காகக் காத்திருந்தேன். கனவுகள் நிச்சயம் நனவாகும்...” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சித்தார்த் ஜெயின் இந்தப் பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைக் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.
ஷௌர்யா கார்க் என்ற பயனர்,
“எனக்கு தனித்து நிற்கும் விஷயமாக டெஸ்லாவைவிட, உங்களது அந்தக் குழந்தைத்தனமான சிரிப்பு பிடித்துள்ளது. இது தனிப்பட்ட மைல்கல். எந்த வயதிலும் மாயாஜாலமாக இருக்கும் ஒரு மனநிறைவு உணர்வு. வாழ்த்துக்கள்," எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “அழகான கார்.. வாழ்த்துக்கள் சித்தார்த்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
டெஸ்லா காரை வாங்கும் முதல் இந்திய தொழிலதிபர் என்ற பெருமையை சித்தார்த் ஜெயின் பெற்றுள்ள போதும், இந்தியாவில் டெஸ்லா காரை முதன்முதலில் வாங்கியவர் என்ற பெருமை மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கையே சேரும்.
இம்மாதத் தொடக்கத்தில் மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில், பிரதாப் தனது டெஸ்லா மாடல் Y காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.