+

100வது ராக்கெட்டை ஏவி இஸ்ரோ சாதனை - புவிவட்டப் பாதையை அடைந்தது NIC-2 செயற்கைகோள்!

இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கற்களை ஏற்படுத்தி வரும் இஸ்ரோ 2025ம் ஆண்டில் 100வது ராக்கெட்டை ஏவி சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோ தளத்தில் இருந்து ஏவப்பட்ட 2025ம் ஆண்டின் முதல் ராக்கெட்டும் இந்தியாவின் 100வது ராக்கெட்டுமான ஜிஎஸ்எல்வி – எஃப் 15 (GSLV F-15 ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த என்விஎஸ் -02 (NVS – 2) நேவிகேஷன் செயற்கைகோள் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 100வது ராக்கெட் என்கிற புதிய வரலாற்றை நாட்டிற்கு இஸ்ரோ வழங்கியுள்ளதாகவும் அவர் பெருமையோடு கூறியுள்ளார்.

" align="center">ஜிஎஸ்எல்வி

விண்ணில் சீறிப் பாய்ந்த ஜிஎஸ்எல்வி - எஃப் 15

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜனவரி 29 அன்று காலை 06.23 மணியளவில் இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டான GSLV F-15 மூலம் என்.வி.எஸ். - 02 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.

இந்த செயற்கைக்கோள் தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களைத் தெரிவிக்கும், என இஸ்ரோ கூறியுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததையடுத்து இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஜனவரி 16ம்தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட வி. நாராயணன் தலைமையில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும்.

“இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து 2025ல் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட முதல் செயற்கைகோள் வெற்றியடைந்துள்ளது, GSLV-F15 ராக்கெட் சுமந்து சென்ற NVS-02 செயற்கைகோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்று புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக, வி. நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்தார். நம்முடைய ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் 100வது ராக்கெட் இது என்பது இந்திய வரலாற்றில் முக்கிய மைல்கல்,“ என்றும் அவர் தெரிவித்தார்.

மிஷன் மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை கண்காணித்தவர் ராக்கெட் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்ததையடுத்து அருகில் இருந்த சக விஞ்ஞானிகளை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திட்டமிட்டபடியே இன்று செலுத்தப்பட்ட செயற்கைகோள் செயல்படத் தொடங்கி இருக்கிறது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் முடிந்த உடன் 50.9 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்டமான ஜிஎஸ்எல்வி (Geosynchronous Satellite Launch Vehicle) மேலெழும்பி அடிப்பகுதியில் நெருப்பை கக்கிக் கொண்டு இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து சரியாக காலை 6.23 மணியளவில் விண்ணை பிளக்கும் சத்தத்துடன் கிளம்பியது. கருமேகங்களுக்கு மத்தியில் பயணிக்கத் தொடங்கிய, 19 நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைகோள் பிரிந்து சென்று புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்தியா மற்றும் நிலப்பரப்பில் இருந்து 1500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் துல்லியமாக வழிகாட்டுவதே இந்த செயற்கைகோளின் நோக்கமாகும். இதன் முதல் செயற்கைகோளான NVS-01 2023, மே 29ம்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. NavIC செயற்கைகோள் பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்களின் தொகுப்பில் இருந்து சிக்னல்களை அனுப்புகிறது. அதனால் பூமியில் இருப்பவர்கள் சரியான வழியை கண்டறிய இந்த சிக்னல்கள் உதவக் கூடும். இந்த தொழில்நுட்பம் நவீன வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது, ஸ்மார்ட்போன்களில் மேப்பிங் செயலிகள் முதல் விமானம் மற்றும் கப்பல்களை துல்லியமாக வழிநடத்துவது வரை அனைத்தையும் இயக்குகிறது.

#100thLaunch:
Congratulations @isro for achieving the landmark milestone of #100thLaunch from #Sriharikota.
It’s a privilege to be associated with the Department of Space at the historic moment of this record feat.
Team #ISRO, you have once again made India proud with… pic.twitter.com/lZp1eV4mmL

— Dr Jitendra Singh (@DrJitendraSingh) January 29, 2025 " data-type="tweet" align="center">

NavIC செயற்கைகோளில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மிகத் துல்லியமான ரூபிடியம் அணுக்கடிகாரமும் வைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமான நேரக் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. NVS-02 இரண்டு முக்கிய பேலோடுகளைக் கொண்டுள்ளது - இது L1, L5 மற்றும் S பேண்டுகளில் சிக்னல்களை அனுப்பும். செயற்கைக்கோள் மற்றும் கட்டுப்பாட்டு நிலையங்களுக்கு இடையே துல்லியமான தூர அளவீடுகளை எளிதாக்குவதற்கு ஒரு டிரான்ஸ்பாண்டரையும் கொண்டுள்ளது. குறைந்தது 10 முதல் 12 ஆண்டுகள் செயல்படும் வகையில் இந்த செயற்கைகோளானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

NavIC என்பது ஒரு வழிகாட்டி என்பதை விட இந்தியாவிற்கு ஒரு சொத்து. வழிகாட்டுவதற்கு தற்போது நாம் பயன்படுத்தும் GPS போன்ற வெளிநாட்டு வழிசெலுத்தல்களை இந்தியா சார்ந்திருப்பதை இந்தச் செயற்கைகோள் குறைக்கிறது. அதே நேரத்தில், பாதுகாப்பு சார்ந்த பயன்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இராணுவ நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான மற்றும் துல்லியமான வழிகாட்டுவதில் தொடங்கி போக்குவரத்து, விவசாயம், பேரிடர் மேலாண்மை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு NavIC வலு சேர்க்கும். NVS-02 செயற்கைகோளானது பெங்களூரைச் சேர்ந்த யு ஆர் ராவ் சாட்டிலைட் மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டதாகும்.

“பேராசிரியர் விக்ரம் சாராபாயின் முயற்சியால் நம்முடைய விண்வெளி திட்டமானது தொடங்கப்பட்டு பல தலைமுறை தலைவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது -அவர்களில் இஸ்ரோவின் தலைவர்கள் எஸ். சோமநாத் மற்றும் ஏஎஸ் கிரண்குமார் முக்கியமானவர்கள். 100வது ராக்கெட் ஏவப்படுவதை அவர்கள் விஐபி கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது வரையில் 6 தலைமுறை ராக்கெட்டுகளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. பேராசிரியர் சதீஷ் தவானின் வழிகாட்டுதலுடனும், திட்ட இயக்குனராக இருந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம் முயற்சியாலும் முதல் ராக்கெட்டான எஸ்எல்வி-3(SLV-3 E1) 1979ல் வடிவம் பெற்றது. அன்று தொடங்கிய நமது விண்வெளி பயணமானது இன்று 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த 100 ஏவுதல்களிலும், இந்தியா 548 செயற்கைகோள்களை புவிவட்டப்பாதையில் நிறுத்தியுள்ளது, 23 டன் எடை கொண்ட 433 வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 120 டன் செயற்கைகோள்களை ராக்கெட்டுகள் விண்ணுக்கு சுமந்து சென்றுள்ளன,” என்றார் நாராயணன்.

“சந்திரயான், ஆதித்யா எல்1, 104 செயற்கைகோள்களை புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்திய ஒற்றை ராக்கெட், பூமியை கண்காணித்தல், வழிகாட்டும் செயற்கைகோள்கள் என இந்த ஏவுளதளத்தில் இருந்து எண்ணிலடங்கா மைல்கற்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்கள் செய்துள்ளன. நம்முடைய இலக்கை அடைய உறுதுணையாக இருந்த முன்னாள் ஊழியர்கள், தலைவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறையினர் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட்டவர்கள், என அனைவரின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியை தற்போது இஸ்ரோவில் அங்கம் வகிப்பவர்கள் சார்பாக பாராட்டுவதாக,” நாராயணன் தெரிவித்துள்ளார்.

isro chairman V Narayanan

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

விண்வெளித் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து வரும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், NavIC இந்தியாவிற்கு சிறந்த வழிகாட்டி செயற்கைகோளாக இருக்கும் என்றார். NVS-2ல் இடம்பெற்றுள்ள அணுக் கடிகாரம், இந்திய தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரும்காலத்தில் நாசாவுடன் இணைந்து NISAR என்கிற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

“விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் G1 மிஷனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கான கூடுதல் பரிசோதனைகள் இந்த ஆண்டில் நடைபெறும். அடுத்த 20 ஆண்டில் இஸ்ரோ மற்றும் விண்வெளித்துறை இந்திய நாட்டை வல்லரசு நாடாக்கும், என்கிற நம்பிக்கையோடு பிரதமர் நரேந்திர மோடி அளித்து வரும் ஊக்கத்திற்கும் இஸ்ரோ தலைவர் நாராயணன் நன்றி தெரிவித்தார். இஸ்ரோவின் சாதனைக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

facebook twitter