
வட்டபாதையில் சேவை அளித்தல் மற்றும் எரிபொருள் நிரப்புதல் (OOSR) பிரிவில் இந்தியாவின் முதல் விண்வெளி நுட்ப ஸ்டார்ட் அப்பான ’ஆர்பிட்எய்ட்’ (OrbitAID) பெங்களூருவில் 6,500 சதுர அடியில் தனது முதல் அதி நவீன ஆய்வு மற்றும் மேம்பாடு வசதியை துவக்கியுள்ளது.
2 மில்லியன் டாலர் செலவிலான இந்த வசதி, தற்போதைய மற்றும் எதிர்கால செயற்கைகோள்களுக்கான வாழ்நாள் நீட்டிப்பு எரிபொருள் நிரப்பும் சேவையை அளிக்க உதவும்.
இந்த ஆய்வு மையத்தை இஸ்ரோ தலைவர் டாக்டர்.வி.நாராயணன் துவக்கி வைத்தார். 'ஆர்பிட் எய்ட்' நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் புதுமையாக்கத்தின் அடுத்த அத்தியாயமாக இது அமைகிறது. சேவை மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கான RPOD உள்கட்டமைப்பில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் உலகின் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக இது அமைகிறது.
இந்த மையம் RPOD வசதி, கிளாஸ் 10,000 கிளின்ரூம், செயற்கைகோள்களுக்கான எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.
துவக்க விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இந்த சாதனைக்காக ஆர்பிட் எய்ட் குழுவுக்கு பாராட்டு தெரிவித்ததோடு டாக்கிங் மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளிட்ட சேவைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை விளக்கினார். செயற்கைகோள்கள் வாழ்நாளை நீட்டிக்கும் சேவை இந்தியாவின் விண்வெளி பரப்பு சூழலின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும், என்று கூறினார்.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை இஸ்ரோ ஊக்குவிப்பது பற்றி குறிப்பிட்டவர், OOSR பிரிவில் செயல்படும் நிறுவனங்களுக்கும் தங்களுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.
“இந்த ஆய்வு மையம் OrbitAID பயணத்தில் புதிய கதையை துவக்குகிறது. இந்த மையம் மற்றும் டிஆர்.எல் டாக்கிங் வசதி மூலம் இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் செயற்கைகோள்களுக்கு வாழ்நாள் நீட்டிப்பு சேவை வழங்கும் நிலையில் இருக்கிறோம்,” என்று நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. சதிஷ்குமார் ராமசந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் யூனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து துவக்க நிதி திரட்டிய நிறுவனம் தமிழ்நாட்டிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி எரிபொருள் கையாளுதல் மற்றும் செயற்கைகோள் சேவை மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

நிறுவனம், உள்ளூர் பல்கலைக்கழகங்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் சர்வதேச பார்ட்னர்களுடன் தனது கூட்டு முயற்சியை வலுவக்க உள்ளது.
“ஆர்பிட்எய்ட் நிறுவனத்தின் ஆரம்ப ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பதில் பெருமை கொள்கிறோம். முதலீட்டை உறிஞ்சும் தன்மை இல்லாமலே மிகப்பெரிய இலக்குகளை அடைய முடியும், என நிறுவனம் உணர்த்தியுள்ளது,” என்று யூனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் நிர்வாக பாட்னர் பாஸ்கர் மஜும்தார் கூறினார்.
துவக்க விழாவில், ஜெர்மனி, இத்தாலி மற்றும், ஸ்விஸ் கூட்டமைப்பு தூதரக அதிகாரிகள் மற்றும், ஸ்டார்ட் அப் டிஎன் சி.இ.ஓ சிவராஜா ராமநாதன், யூனிகார்ன் இந்தியா வென்சர்சின் ஷ்ரேயா கணேஷ், இஸ்ரோ அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'விண்வெளியில் பெட்ரோல் பங்க்' - 1.5 மில்லியன் டாலர் நிதி பெற்ற சென்னை OrbitAid ஸ்டார்ட்-அப் கதை!
Edited by Induja Raghunathan