கிராமத்து வாசற்கதவில் 'மகள்'களின் பெயர் பலகை- பாலின பாகுப்பாட்டை உடைக்க 'மேஜிக் பஸ் புதிய முயற்சி!

02:00 PM Apr 09, 2025 | YS TEAM TAMIL

கல்விவாய்ப்பு தொடங்கி எதிர்கால கனவு வரை இந்தியாவில் நீடித்துவரும் பாலினபாகுபாட்டை உடைப்பதற்கான சிறுதுருப்பாக, மகளின் பெயரை ஒரு வீட்டின் வாசற்கதவு தாங்கி நிற்பதன் மூலம், அப்பெண்ணின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், வீட்டுக்குள்ளும், வெளியும் அவளது அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியை எடுத்துள்ளது 'மேஜிக் பஸ்' என்ற இந்திய அறக்கட்டளை.

முதல் பார்வையில், மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள கல்மேஷ்வர், நாட்டிலுள்ள பல கிராமங்களை போன்றே தெரிகிறது - ஆனால், ஒரு தனித்துவமான நடைமுறை இப்பகுதியை தனித்து நிற்கிறது.

ஆம், இந்தப் பகுதியின் 18 கிராமங்களில் உள்ள, ஒவ்வொரு வீட்டு வாசல் கதவும் அக்குடும்பத்தின் மகள்களின் பெயரைக் தாங்கி நிற்கின்றன. கல்விவாய்ப்பு தொடங்கி எதிர்கால கனவு வரை இந்தியாவில் நீடித்துவரும் பாலினபாகுபாட்டை உடைப்பதற்கான சிறுதுருப்பாக, மகளின் பெயரை அவ்வீடு தாங்கி நிற்பதன் மூலம், ஒரு பெண்ணின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், வீட்டுக்குள்ளும், வெளியும் அவளது அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியை எடுத்துள்ளது மேஜிக் பஸ் இந்திய அறக்கட்டளை.

தனது பெயரின் பலகையை கொண்ட அவரது வீட்டு வாசலின் முன் அசாவரி பட்டீல்.

மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை என்பது பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் 1999ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்கள் மற்றும் கல்வியை வழங்குகிறது. அதன் வாழ்வாதாரத் திட்டங்கள் இன்றுவரை கிட்டத்தட்ட 35 லட்சம் இளைஞர்களை சென்றடைந்துள்ளன.

இன்று, இந்த அமைப்பு நேபாளம் மற்றும் பங்களாதேஷுடன் சேர்த்து இந்தியா முழுவதும் 23 மாநிலங்களில் 80க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுகிறது. இந்நிலையிலே, 2023 ஆம் ஆண்டில் JSW அறக்கட்டளையின் JSW ஆஸ்பயருடன் இணைந்து மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட "நேம்ஸ் ஆன் டோர்ஸ்" என்ற தனித்துவமான முயற்சியின் மூலம், இந்தப் பெண்களின் பெயர்கள் அவர்களது வீட்டு வாசற்கதவை அலங்கரிக்கத் தொடங்கின.

பெண் குழந்தைகளுக்கு அடையாளத்தையும், அதிகாரத்தையும் வழங்கும் பெயர்பலகை!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்திலுள்ள கல்மேஷ்வர் நகரம் 108 கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், குடும்பங்களுக்கு நிரந்தர வருமான ஆதாரங்கள் இல்லை. மேலும், மக்கள் பெரும்பாலும் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். ஆனால், பள்ளிக்கு வழக்கமாக செல்வதில்லை. பாதியிலே பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகின்றனர்.

கல்மேஷ்வர் போன்ற இடங்களில் இன்றும் பெண்களுக்கு இளம் வயதிலே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதனால், கிராமங்களில் உள்ள பெண்கள், குறைந்த நம்பிக்கையுடனும் பெரிய கனவுகளை காண்பதற்கான தயக்கத்துடனே இருக்கின்றன. இவ்வச்சங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழியாக, வீட்டு வாசலில் பெண்களின் பெயர்களை வைப்பது என்ற யோசனை பிறந்தது.

இதற்காக, 12 முதல் 16 வயது வரையிலான உள்ள இளம் பருவப் பெண்கள் இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது, இந்த திட்டம் கலம்பி, போர்கான், அடாசா மற்றும் வரோடா போன்ற 18 கிராமங்களில் செயலில் உள்ளது.

"உலகம் முழுவதுமே ஆண், பெண்களுக்கு வெவ்வேறு விதமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பெண்களுக்கு அவர்கள் அவர்களாகவே இருப்பதற்கான தெரிவுநிலையை வழங்குவது முக்கியம். வீட்டிற்குள் பெண்களுக்கு அவர்களின் அடையாளத்தை வழங்குவதன்மூலம், அவர்களை வாழ்க்கைக்கு வெளியேயும் அதிக நம்பிக்கையுடன் உணர வைக்கிறது." என்று கூறினார் மேஜிக் பஸ் அறக்கட்டளையின் திட்ட தலைவர் தனாஸ்ரீ பிராஹ்மே.

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் ஒரு பகுதியாக பணியாற்றிய அவர் அதன் பிறகு, பாலின பாகுபாட்டிற்கு எதிரான அடிமட்ட நடவடிக்கையைத் தொடர விரும்பினார்.

மேஜிக் பஸ் அறக்கட்டளையின் திட்ட தலைவர் தனாஸ்ரீ பிராஹ்மே

"நேம்ஸ் ஆன் டோர்ஸ்" சிறு முயற்சியாக தோன்றிடினும் அதன் தாக்கம் பெரியது மற்றும் உறுதியானது. மாண்ட்வி மற்றும் கோண்ட்கைரி கிராமங்களைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளான அசாவரி பாட்டீல் மற்றும் சம்போதி வால்கே ஆகியோருக்கு, அவர்களின் பெயர்களை வாசற்கதவில் பார்ப்பது நம்பிக்கை மற்றும் பெருமையின் அடையாளமாக இருக்கிறது. அவர்களது வீடுகளை கடக்கும், ​​மற்ற கிராமவாசிகள் பெயர்ப் பலகைகளில் அவர்களின் பெயர்களைப் பார்க்கிறார்கள்.

"முன்பெல்லாம் பிறரிடம் பேசுவதிலும், கருத்துகளை முன்வைப்பதிலும் எனக்கு தைரியம் இருந்ததில்லை. இப்போது, ​என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். பெண்களாக, எங்களுக்கு வீட்டில் பொறுப்புகள் உள்ளன, ஆனால் எங்களுக்கு கனவுகளும் இருக்கின்றன! என் சகோதரர் அவனது பெயர் வீட்டிற்கு வெளியே ஏன் இல்லை என்று கேட்கும்போது, ​​அவனிடம் நான், 'நீ வளர்ந்த பின், மற்ற ஆண்களை போலவே நீயும் இத்தகைய பெயர் பலகையை வைத்திருப்பாய். ஆனால், எங்களுக்கு இப்படிப்பட்ட முயற்சிகள் இல்லையென்றால் எனக்கு அவ்வாய்ப்பு கிடைக்காது," என்று சம்போதி தெரிவித்தார்.

"வீடுகள் ஒரு ஆணின் சொத்தாகக் கருதப்படுகின்றன..."

மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை குழு இந்த திட்டத்தைத் தொடங்கும்போது எதிர்ப்பை எதிர்பார்த்தது. 'நாம் ஏன் இதைச் செய்ய வேண்டும்?' என்பது தனாஸ்ரீ குழு எதிர்கொண்ட மிகவும் பொதுவான கேள்வி, ஏனெனில், வீடுகள் ஒரு ஆணின் சொத்தாகக் கருதப்படுகின்றன.

"இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் துணைவியர் என்ற அடிப்படையில் மனைவியின் உரிமைகளை தான் முன்னிறுத்துவர். நாங்கள் ஒரு படி மேலே சென்று வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்தியுள்ளோம். பெண்கள் பள்ளிக்குச் சென்றாலும் அல்லது கல்வியறிவு பெற்றாலும், அது அவர்களை நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் ஆக்குவதில்லை. “Names on Doors" முயற்சி படிப்படியாக அதிகமான மக்களை உரையாடலில் ஈடுபடுத்துகிறது மற்றும் இப்பகுதியில் உள்ள பெண்கள் மீதான மக்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களும்கூட அவர்களது மகள்கள் பள்ளியிலும் வீட்டிலும் அதிக முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்று அறக்கட்டளைக்கு கருத்து தெரிவித்தனர்," என்றார்.

இன்று, கல்மேஷ்வரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் இதுபோன்ற 2,100 பெயர்ப்பலகைகள் உள்ளன. உடனடி தாக்கமாக, இந்த வீடுகளில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கம் என்று நம்பிக்கையுடன் உணர தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், ஒரு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு கலாச்சார மற்றும் நிறுவன மட்டத்திலும் மாற்றறம் வர வேண்டும். மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை, கல்மேஷ்வரில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் இந்த முயற்சியை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்ற பிராந்தியங்களுக்கு, அணுகுமுறையில் மாற்றத்தினை கொண்டு அணுகவேண்டும்.

"கல்மேஷ்வரில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள் பள்ளிகள் மற்றும் முதியவர்கள் இந்த முயற்சியைப் பற்றி கேட்க தயாராக இருந்தனர். ஏனெனில் அவர்கள் தங்கள் மகள்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த திட்டம் இங்கே நன்றாக வேலை செய்தது. ஆனால் மாநிலத்தின் அல்லது நாட்டின் பிற பகுதிகளுக்கு நாம் வேறுபட்ட அணுகுமுறையைத் திட்டமிட வேண்டும்."

நாட்டில் வெற்றியை கண்ட பல பெண்டீரும், விளையாட்டு வீராங்கனைகள் முன்னுதாரணமாக இருந்தாலும், உள்ளூரில் உள்ள ஒரு பெண் அடையும் வெற்றி, அவர் கால் தடத்தை பற்றி நடக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கும்," என்று கூறி முடித்தார்.

தமிழில்: ஜெயஸ்ரீ