முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

10:58 AM Sep 02, 2025 | cyber simman

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,200 கோடி அளவிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையாழுத்தாகியுள்ளது. இவற்றின் மூலம், 6,250 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதல்வரின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முனிச் நகரில் தலைமையகம் கொண்டுள்ள பிரேக்கிங் அமைப்புகளில் சர்வதேச அளவில் முன்னணிலையில் உள்ள நார்-பிரெம்ஸ் (Knorr-Bremse) நிறுவனம் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம், ரூ.2,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் முதல் முதலீடாக இது அமைகிறது.

இந்நிறுவனம் ரயில்வே துறைக்கான அதிநவீன வசதி கொண்ட, கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளை தமிழக ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை மூலம் 3,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ரயில்வே பாகங்கள் உற்பத்தி துறையில் தமிழகத்தின் நிலையை இது மேலும் வலுவாக்கும்.

இதே போல, காற்றாலை முன்னணி உற்பத்தி நிறுவனமான ’நார்டக்ஸ் குழுமம்’, தமிழ்நாட்டில் ரு.1,000 கோடியில் விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 2,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

மேலும், எரிசக்தி திறன் வாய்ந்த மின் மோட்டர்கள் மற்றும் காற்று இயக்க தீர்வுகள் உற்பத்தி நிறுவனம் ebm-papst தமிழ்நாட்டில் தனது குளோபல் திறன் மையம் மற்றும் உற்பத்தி ஆலையை விரிவாக்க உள்ளது.

இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.201 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 250 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும் இந்த பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பிஎம்டபிள்யூ நிறுவன உயரதிகார்களை சந்தித்துப்பேசினார். இந்நிறுவனம் தமிழ்நாட்டில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

’பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்,’ என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது எஸ்க் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Induja Raghunathan