நியூஇயரை செமத்தியாக செலிபிரேட் செய்வதற்காக ஜோமாட்டோவில், பீட்சா, பிரியாணியை ஆர்டர் செய்ய தேடிய மக்கள், அத்துடன் அந்த ஆப்'பில், கேர்ள் ஃப்ரெண்ட்' மற்றும் மணப்பெண்'-யும் தேடி, ஜோமாட்டோ நிறுவனத்தினை ஷாக்காக்கியுள்ளார்.
டிஜிட்டல் யுகத்தில், மளிகை சாமான்கள் முதல் மாத்திரைகள் வரை சகலமும், காலிங் பெல் அடித்து வீட்டு வாசலிலே டெலிவரி செய்யப்படுகிறது. இந்த ட்ரெண்டின் உச்சத்தில் புத்தாண்டு அன்று ஒரு அசாதாரண சம்பவத்தை செய்துள்ளனர் ஜோமாட்டோ பயனர்கள்.
ஆம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆயிரக்கணக்கான பயனர்கள் ஸ்பெஷல் உணவைச் சாப்பிடுவதற்காக மட்டுமல்லாமல், ஒரு காதலியைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன், ஜோமாட்டோ பக்கம் திரும்பியுள்ளனர். பிரபலமான உணவு விநியோக செயலியான Zomato நிறுவனம், வெளியிட்ட தரவுகளின்படி,
4,940 பேர் அதன் செயலியில் பீட்சா, பிரியாணியை தேடுவது போல் 'கேர்ள் ப்ரெண்ட்டை' தேடியுள்ளனர். இதில், 40 பேர் அடுத்த லெவலுக்கு சென்று மணப்பெண்ணைத் தேடியுள்ளனர்.
ஜோமாட்டோ வெளியிட்ட இந்த அறிக்கை இணையத்தில் வைரலாக, அதற்கு எக்ஸ் தளத்தில் நக்கலும், நையாண்டியுமாக கமெண்ட் அடித்து வருகின்றனர். ஜோமாட்டோவாசிகளின் இவ்விசித்திர செயலுக்கு விளக்கம் அளித்த X பயனர்,
"மக்கள் முட்டாள்கள் இல்லை, என்ற பதிவுடன் இரண்டு உணவகங்களின் பெயர்களைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு உணவகத்தின் பெயர் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் அமைந்துள்ள கேர்ள் பிரெண்ட் ஃபுட் கோர்ட், மற்றொன்று கேர்ள் பிரெண்ட் அரேபியன் மண்டி உணவகம் என்றிருந்தது. மக்கள் இந்த ரெஸ்ட்ரென்ட்களை தேடியதாக," அவர் கூறியிருந்தார்.
இன்னும் பல பயனர்கள், இந்த செய்தியைப் பற்றி X இல் நகைச்சுவையான கருத்துக்களைப் பதிவு செய்தனர். அவர்களில் ஒருவர், "இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்" என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர்,
"Zomato மேட்ரிமோனி துறையிலும் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு உள்ளது. விரைவு மேட்ச் திருமணம்," என்றும் மற்றொரு நபர், "எத்தனை பேர் இதை ஆர்டர் செய்தார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்..." என்று பதிவு செய்திருந்தார்.
2024 ஆம் ஆண்டில், அதிக ஆர்டர் செய்து டெல்லி-என்சிஆர் முன்னிலை வகிக்கிறது. கடந்தாண்டு டெல்லி-என்சிஆர் 12.4 கோடி ஆர்டர்களைப் பதிவுசெய்துள்ளது. இது பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஒட்டுமொத்தமாக பதிவாகிய 10 கோடி ஆர்டர்களை விட அதிகம்.
மும்பையை விட பெங்களூரு 30 லட்சம் கூடுதல் ஆர்டர்களை வழங்கியது. ஆனால், பெங்களூருவை விட மும்பை ரூ.3 கோடிக்கு அதிகமாக டிப்ஸ் கொடுத்துள்ளது. 34.8 லட்சம் ஆர்டர்களுடன், ஜோமாட்டோவின் பரபரப்பான நாள் மே12ம் தேதியாகும். மாறாக, ஜனவரி 29ம் தேதி 16.8 லட்சம் ஆர்டர்களுடன் மிகக் குறைந்த அளவைக் கண்டது. ஜோமாட்டோவின் இவ்வறிக்கை விரைவான வர்த்தகம் மற்றும் உணவு விநியோக தளங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2024 புத்தாண்டு ஈவ்னிங் அன்று Zomato, Blinkit, Swiggy Instamart மற்றும் Zepto உள்ளிட்டவிரைவான வர்த்தக தளங்களின் தேவை உயர்ந்தது. Blinkit CEO Albinder Dhindsa, X இல் குறிப்பிடுகையில்,
"நாங்கள் NYE 2023 இல் செய்த மொத்த ஆர்டர்களின் எண்ணிக்கையை நாங்கள் இன்று மாலை சுமார் 5 மணிக்கே கடந்துவிட்டோம்!. Blinkit-இன் அதிகபட்ச தினசரி ஆர்டர்கள், நிமிடத்திற்கு பெறும் ஆர்டர்கள் மற்றும் டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்கப்படும் டிப்ஸ்களின் மதிப்பு என அனதை்து ரெக்கார்டுகளையும் ஒரே நாளில் ப்ரெக் செய்துள்ளோம்," என்று பதிவு செய்திருந்தார்.
இத்தரவுகளின் மூலம், பல்வேறு தேவைகளுக்காக விரைவான வர்த்தகத்தினை அணுகும் நுகர்வோர்களின் நம்பிக்கை வளர்ந்துள்ளது என்பது பிரதிபலிப்பாகி உள்ளது.