பாவிஷ் அகர்வாலின் ஏஐ ஸ்டார்ட் அப் 'ஓலா க்ருத்ரிம்' 100 ஊழியர்களுக்கு மேல் பணி நீக்கம் செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நிறுவனம் வேலைநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது மற்றும் மூன்று உயர் அதிகாரிகள் விலகிய சில மாதங்களுக்கு பின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஏஐ யூனிகார்ன் நிறுவனம், மொழியியல் குழுவின் பெரும் பகுதியை விலக அனுமதித்துள்ளதாக தெரிகிறது.
“வியூக நோக்கிலான மாற்றம், மூலதனத்தை செயல்திறன் மிக்க வகையில் பயன்படுத்தும் உத்தி காரணமாக, மேலும் மெலிதான, துடிப்பான குழுக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். மாறிவரும் வர்த்தக முன்னுரிமைகள் மற்றும் இந்தியாவின் சொந்த முழுமையான ஏஐ மேடையை உருவாக்கும் நீண்ட கால இலக்குடன் இவை பொருத்தமாக அமைகின்றன,” என க்ருட்ரிம் செய்தி தொடர்பாளர் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஒடியா உள்ளிட்ட 10 இந்திய மொழிகளில் ஏஐ பயிற்சி மற்றும் பரிசீலனை பணிகளுக்காக மொழியியல் குழு பணியாளர்களை நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தீவிரமாக நியமித்து வந்ததாக எகனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
ஜூன் மாதம் க்ருத்ரிம் தனது ஏஜெண்டிக் ஏஐ உதவியளர் சேவை 'க்ருதி'யை அறிமுகம் செய்தது என்றும் இதன் பிறகு பணிநீக்கம் துவங்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன முன்னுரிமைகளில் மாற்றம், வெளிப்புற காரணிகளால் இந்த நடவடிக்கைகள் அமைவதாக இந்த நாளிதழ் பார்வையிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. நிதி பெறுவதில் தாமதம் மற்றும் சேவைக்கான வரவேற்பின்மை காரணம், என பிற தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டாளர்கள் ஆர்வமின்மை காரணமாக பாவிஷ் அகர்வால் தலையிலான இந்நிறுவனம் நிதி திரட்டலை 500 மில்லியன் டாலரில் இருந்து 300 மில்லியன் டாலராக குறைத்துள்ளது, என மிண்ட் நாளிதழ் தெரிவிக்கிறது. நிறுவனம் கடைசியாக Z47 Partners மூலம் 50 மில்லியன் டாலர் நிதி பெற்று யூனிகார்ன் ஆனது.
“சரியான தகவல்கள் இல்லாத உறுதி செய்யப்படாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். செய்தி வெளியிடும் முன் சரி பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோருகிறோம்,” என செய்தி தொடர்பாளர் பணி நீக்கம் பற்றி கூறியுள்ளார்.
”மேலும் ஜூன் மாதம், கல்வி, விவசாயம், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் அரசு நோக்கிலான சேவைகளை உருவாக்கும் சமக்ரா உருவாக்கிய BharatSah’AI’yak ஏஐ மேடையை நிறுவனம் கையகப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக சமக்ராவின் ஏஐ மைய குழுவை பணிக்கு சேர்த்துக்கொண்டது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan