‘One District One Product ’ - இந்திய கைவினைக் கலைஞர்கள் பற்றிய தொகுப்பு புத்தகம் 'India handpicked' வெளியீடு!

03:00 PM Sep 18, 2025 | YS TEAM TAMIL

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், யுவர்‍ஸ்டோரி நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷ்ரத்தா ஷர்மா, தி பாரத் ப்ராஜெக்ட், மற்றும் சாவி மகாஜன்னுடன் இணைந்து எழுதிய "இந்தியா ஹாண்ட்பிக்ட்" (India handpicked) என்ற புத்தகம் மும்பையில் வெளியிடப்பட்டது. DPIIT இயக்குனர் சுமித் ஜரங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த “இந்தியா ஹாண்ட்பிக்ட்” புத்தகம் One District One Product (ODOP) முயற்சியின் பயணத்தையும் இந்தியாவின் பன்முகத் தன்மை வாய்ந்த கைவினைக் கலைத்திறன்களையும் விளக்குகிறது.

இந்திய கைவினைஞர்களும் அவர்கள் தயாரிக்கும் கைத்திறன் கலைப் பொருட்களும் நாட்டின் கலாச்சார அடையாளத்தையும் பொருளாதார வலிமையையும் நாட்டின் முதுகெலும்பு என்று பறைசாற்றுகிறது இந்தப் புத்தகம். ODOP மூலம் கைவினைத் தொழில் சமுதாயங்களுக்கு சந்தை ஏற்படுத்தித் தருதல் மற்றும் சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதைப் உறுதி செய்கிறது இந்தப் புத்தகம்.

இந்த நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது,

“ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு - One District One Product என்ற திட்டம் தனித்துவமானது. நம்மில் பலர் கோலாப்பூர் காலணிகள் போன்றவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம். இதன் முக்கியத்துவம், அடையாளம் அல்லது வாய்ப்புகளை யாரும் உணர்ந்ததில்லை—முதல் முறை பிரதமர் நரேந்திர மோடி இதன் மீது கவனம் செலுத்தினார். நம் நாடு பரந்தது, செழிப்பானது; ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்துவமான அடையாளம் உண்டு. சில மாவட்டங்களுக்கும் ஒரே தயாரிப்பு இருக்கலாம்; சிலவற்றிற்கு பலத் தயாரிப்புகள் உள்ளன,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில் பாஷ்மினா ஷால்கள், அரக்கு காபி, சிக்கமகளூர் காபி, டார்ஜிலிங் தேயிலை, அசாம் தேயிலை போன்றவற்றை அவர் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முக்கியஸ்தர்களுக்குத் தான் பரிசளித்து வந்ததாக குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி இந்த தயாரிப்புகள் உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் ஹைகமிஷன்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளார். வெளிநாட்டு அலுவலகங்கள் அவற்றை விளம்பரப்படுத்த உதவுகின்றன, மேலும், ஒரு அரசியல்வாதி அல்லது பிரமுகர் வருகை தரும் போதெல்லாம், அவர்களுக்கு ODOP தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன, என்றார்.

அதே நேரத்தில், விளம்பரம் மட்டும் போதாது என்றும், அது வணிகமயமாக்கலுடன் இணைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார் பியூஷ் கோயல். புத்தக வெளியீட்டுக்கு முன்னதாக மும்பையில் உள்ள கோரா கேந்திரா மைதானத்தில் ODOP கைவினைஞர்கள் மற்றும் கண்காட்சியாளர்களுக்கான கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர்,

"இன்று நாம் பார்த்தது போன்ற கண்காட்சிகள் மக்கள் இந்த தயாரிப்புகளைப் பார்க்கவும் அனுபவிக்கவும் அனுமதிக்கின்றன. நாங்கள் அவற்றை பெரிய ஹோட்டல்கள் மற்றும் ஐந்து நட்சத்திர நிறுவனங்களுக்கு வழங்குகிறோம். அடுத்த இரண்டு நாட்களில், இந்த ODOP தயாரிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்," என்று கூறினார்.

ODOP-திட்டம் பிரதமர் மோடியின் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கைவினைப் பொருட்களை ஊக்குவித்து, அவற்றை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது. அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, ODOP-ற்கு இதுவரை 761 மாவட்டங்களில் 1,102 தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன; பல GI-டேக் செய்யப்பட்டு ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் உள்ளன. கோயல், ODOP-இன் பரவலான பயன்பாடு வாழ்வாதாரத்தை மாற்றி பல கோடி வேலைவாய்ப்புக்களையும் வருமானத்தையும் உருவாக்கும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு சுதேசி (Made in India) பொருளின் பயன்பாட்டிலும் ஒன்று கைவினையாளருக்கு வாழ்நாள் வருமானம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“நமது சமுதாயத்தில், கடைகளிலும், வீடுகளிலும் சுதேசி பொருட்களை வலியுறுத்துவோம் — கட்டாயமெனச் செய்யாமல், அன்புடன் செய்யுங்கள். சுதேசிப் பொருட்களை அடையாளம் காட்ட ஸ்டிக்கர்கள் அல்லது சின்னங்களை பயன்படுத்துங்கள், பிரதமரின் கனவுக்கு ஆதரவாக செயல்படுங்கள்,” என்றார்.

மதுபனி ஓவியங்கள் முதல் படான் பட்டோலா நெசவுகள், காஷ்மீர் கம்பளங்கள், வெள்ளி ஃபிலிக்ரி மற்றும் இயற்கையாகவே சாயம் பூசப்பட்ட புடவைகள் வரை இந்திய பாரம்பரியம் மற்றும் கைவினைப்பொருட்களின் உலகளாவிய ஈர்ப்பையும் அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்திய கைவினைஞர்களின் பணி நாட்டின் பாரம்பரியத்தின் நம்பமுடியாத சக்தியை நிரூபிக்கிறது, என்றார்.

ODOP பயணத்தை ஆவணப்படுத்தும் India Handpicked புத்தகத்தை இணைந்து எழுதியதற்காக யுவர்ஸ்டோரி சிஇஒ ஷ்ரத்தா ஷர்மாவுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார். யுவர்ஸ்டோரி ஊடக சி.இ.ஓ. ஷ்ரத்தா சர்மா கூறும்போது,

“அமைச்சர் பியூஷ் கோயல் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் போன்றே பணியாற்றக்கூடியவர். 24 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்பவர். இதை பல ஆண்டுகளாகச் செய்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் அனைவரையும் ஊக்குவிப்பவர். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி என் புத்தக அறிமுகத்திற்கு உதவினார். இது மிகப்பெரிய விஷயம். அவர் சொல்வதைச் செய்து காட்டுபவர். நமது பிரதமர் உலகத் தலைவர்களுக்கு பல பரிசுகளை வழங்கியுள்ளார்; அவை இந்தியாவின் ODOP தயாரிப்புகள். India Handpicked; அவர்களின் கதைகளை - அவர்கள் எங்கு தொடங்கினார்கள், அவர்களின் வரலாறு என்ன என்பதை சலிப்பு ஏற்படுத்தாவண்ணம் இந்தப் புத்தகம் கூறுகிறது,” என்றார்.

DPIIT இயக்குனர் சுமித் ஜரங்கல், மகாராஷ்டிர அரசினையும் DPIIT-ஐயும் ODOP கலைஞர்களையும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கும் நன்றி தெரிவித்தார்; அவர் மேலும் கூறிய போது,

“பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் ஒரு உறுதிமொழி எடுப்போம்: 2047க்குள் இந்தியா வளர்ச்சியடைவதைக் காணும் கனவு, பிரதமரால் காணப்பட்டதும், ஒவ்வொரு இந்தியராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டதுமான கனவு நனவாகும். ODOP மூலம், நமது நாடு நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய மதிப்புகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்,” என்றார்.