இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Perplexity ai-இன் நிறுவனர் மற்றும் சி.இ.ஒ. அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 34.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு கூகுள் குரோமை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்தது இணைய உலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆன ’பிரெப்ளெக்சிட்டி’ தனது சொந்த சந்தை மதிப்பீட்டை விட பல மடங்கு மதிப்பீடு கொண்ட நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் டென்னிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி உள்ளிட்டோரை துணை நிறுவனர்களாக கொண்டு பிரெப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனம் துவங்கப்பட்டது.
ஏஐ துணை கொண்டு நிகழ் நேரத்தில் உரையாடல் சார்ந்த தேடல் சேவையை வழங்கி வரும் பிரெப்ளெக்சிட்டி , ஏஐ தேடியந்திரமாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிறுவனம் அண்மையில் காமெட் எனும் பெயரில் ஏஐ திறன் கொண்ட பிரவுசரை அறிமுகம் செய்தது.
இந்நிலையில்,
இணைய உலகின் முன்னணி பிரவுசரான கூகுள் க்ரோமை 34.5 பில்லியன் டாலருக்கு கையக்கப்படுத்துவதற்கான கோரிக்கையை நிறுவனம் தானாக முன்வைத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராய்டர்ஸ் முதலில் செய்தி வெளியிட்டது. இந்திய மதிப்பின் படி, இது ரூ.3,02,152 கோடிக்கு மேலானது.
அண்மையில் என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டிய பிரெப்ளெக்சிட்டி ஏஐ, 14 பில்லியன் டாலர் மதிப்பீடு கொண்டதாக கருதப்படுகிறது. நிறுவனம் தனது மதிப்பீட்டை விட பல மடங்கு மதிப்பீடு கொண்ட க்ரோமை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது.
பல முதலீடு நிறுவனங்கள் இதற்கான நிதியை அளிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருந்தது. இணைய தேடலில் கூகுள் சட்டவிரோதமான முறையில் ஏகபோகம் கொண்டுள்ளது என போட்டித்தன்மைக்கு எதிரான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளிதத்தை அடுத்து, ஏகபோகத்திற்கு தீர்வு காணும் நடவடிக்கையை அமெரிக்க நீதித்துறை பரிசீலித்து வருவதால் கூகுள் கடும் கட்டுப்பாட்டு நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள சூழலில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனம் க்ரோமை பங்கு விலக்கல் செய்ய வேண்டும் எனும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. கூகுள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது, க்ரோமை விற்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தது.
கூகுளை க்ரோமை வாங்கினால் அதன் திறவு மூலத்தன்மையை தொடர்வோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை பிரெப்ளெக்சிட்டி அளித்துள்ளது.
ஓபன் ஏஐ, யாஹு உள்ளிட்ட பல போட்டி நிறுவனங்கள் கூகுள் க்ரோமை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. கூகுள் க்ரோமை வாங்குவது அதன் 3 கோடி வாடிக்கையாளர்களை அளித்து தனது ஏஐ தேடல் சேவைக்கு வலு சேர்க்கும் என்று பிரெப்ளெக்சிட்டி தெரிவித்துள்ளது.
பிரெப்ளெக்சிட்டி சி.இ.ஓ. அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சென்னையில் பிறந்து வளர்ந்து, ஐஐடி மெட்ராசில் படித்து பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயின் ஐஐடி கனவை பில்லியன் டாலர் ஏஐ நிறுவனமாக்கிய தமிழர் - யார் இந்த Perplexity AI அரவிந்த் ஸ்ரீனிவாஸ்?
Edited by Induja Raghunathan