
முன்பணம் செலுத்தல் அடிப்படையிலான பணப்பரிமாற்ற (Prepaid Payment Instruments – PPI) ஒழுங்குமுறைகளை மீறியதாக, மத்திய ரிசர்வ் வங்கி, 'ஃபோன்பே' (PhonePe) மீது ரூ.21 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அக்டோபர் 2023 முதல் டிசம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் PhonePe-யின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில், நிறுவனத்தின் எஸ்க்ரோ கணக்கு இருப்பில், குறிப்பிட்ட நாட்களில் வணிகர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையின் மதிப்பை விடக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது, என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் குறைவுகள் உடனடியாக ஆர்பிஐ கவனத்திற்குக் கொண்டு வரவும் படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை உறுதிப்படுத்திய ஆர்.பி.ஐ, Payment and Settlement Systems Act, 2007 சட்டத்தின் கீழ் ஃபோன்பே மீது ரூ. 21 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
“நிறுவனத்தின் எஸ்க்ரோ கணக்கில் நாள் இறுதி இருப்பு, குறிப்பிட்ட நாட்களில் நிலுவையில் உள்ள PPl-களுக்கான தொகை மற்றும் வணிகர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை மதிப்பை விடக் குறைவாக இருந்தது, மேலும் அந்த எஸ்க்ரோ கணக்கில் பற்றாக்குறையை நிறுவனம் உடனடியாக RBIக்கு தெரிவிக்கவில்லை," என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இந்த அபராதம் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளின் சட்டபூர்வத்தன்மையை பாதிக்காது என்றும், இது ஒழுங்குமுறை மீறலுக்கான நடவடிக்கையே எனவும், தேவையானால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதற்கிடையில், ஃபோன்பே நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டை (IPO) தொடங்க, கோடக் மகிந்திரா கேப்பிட்டல், ஜே.பி.மோர்கன் சேஸ், சிடிகிரூப் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகிய முதலீட்டு வங்கிகளை பணிக்கு அமர்த்தியுள்ளது.
ஃபோன்பே கடந்த நிதியாண்டில் ரூ.7,021 கோடி (சுமார் $850 மில்லியன்) முதலீட்டை பெற்றது. இதன் முன் மதிப்பீடு சுமார் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. வால்மார்ட் தலைமையிலான முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை இந்தியாவுக்கு மாற்றும் போது, இந்திய அரசுக்கு ரூ. 8,000 கோடி வரி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: முத்துகுமார்