திருநங்கை என ஒதுக்கிய சமூகம்; கல்வியின் துணையால் HR பிரிவில் ஜெயித்து காட்டிய ராணி!

06:29 PM Jun 30, 2025 | Chitra Ramaraj

ஆண்,பெண் என இந்த இருபாலினத்தைப் போலவே தங்களுக்கான அங்கீகாரத்தையும் நிலை நிறுத்த நீண்ட காலமாகவே போராடி வருகின்றனர் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை மாறி வருகிறது.

யாசகம் கேட்பவர்கள், பாலினத் தொழில் செய்பவர்கள் என்ற அடையாளத்தை மாற்ற, ரொம்பவே போராடி வருகின்றனர் திருநங்கைகள். பல்வேறு போராட்டங்களைத் தாண்டி, உதாசீனங்களையும், புறக்கணிப்புகளையும் சகித்துக் கொண்டு, இன்று பல துறைகளிலும், தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

ராணியும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான். தான் பிறந்து வளர்ந்த வீடே, தன் மனப்போராட்டத்தைப் புரிந்து கொள்ளாமல், வெறுத்து ஒதுக்கிய போது, சமூகத்தை குறைபட்டு என்ன செய்ய என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, கல்வியால் மட்டுமே தனது அங்கீகாரத்தை மீட்டெடுக்க முடியும் எனப் போராடி, இன்று Publicis Sapient நிறுவனத்தில் Human Resource Generalist ஆக பணிபுரிந்து வருகிறார்.

எங்கெல்லாம் சமூகம் தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்ததோ, அங்கெல்லாம் கல்வியின் துணை கொண்டு, கௌரவாக, மரியாதையோடு பார்க்க வைத்திருக்கிறார் ராணி.  

தேவதையை சந்தித்த ராணி

வேலூர்தான் ராணியின் சொந்த ஊர். ஐந்து சகோதர, சகோதரிகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டியாக பிறந்து வளர்ந்தவர்தான் ராணி. சிறுவயதிலேயே பெற்றோர் இறந்துவிட, மூத்த சகோதரர்தான் ராணியை வளர்த்து, படிக்க வைத்துள்ளார்.

என்னதான் ஆண் குழந்தையாக மற்றவர்களது கண்களுக்குத் தெரிந்தாலும், விவரம் தெரிய தெரிய கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் பெண்மையை உணர ஆரம்பித்துள்ளார் ராணி. அக்காக்கள், அவர்களின் பெண் தோழிகள் என எப்போதும் தன்னைச் சுற்றி பெண்களே இருக்கும்படி ஆசைப்பட்டுள்ளார். ஆனால், தன் மாற்றத்தை வெளியில் சொன்னால் குடும்பத்திற்கு கெட்டப் பெயர் வந்து விடுமோ எனப் பயந்துள்ளார்.

“எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை அப்போது என்னால் வெளிப்படையாக மற்றவர்களிடம் சொல்ல முடியவில்லை. ஆனாலும், பள்ளியில் உடன்படித்த நண்பர்கள் என் பெண்மையை புரிந்து கொண்டு, என்னைக் கேலி செய்ய ஆரம்பித்தனர். கெட்ட கெட்ட வார்த்தைகளில் என்னைக் கிண்டல் செய்தனர். அதனால் படிப்பிலும் முழு ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு ஆளானேன், என்கிறார் ராணி.

ஒரு கட்டத்தில் இது போன்ற ஆண் தோற்றத்தில் பெண்மையுடன் வாழ முடியாது, என முடிவெடுத்தேன். அப்போது கடைத் தெருவில் யாசகம் கேட்கும் திருநங்கை அக்கா ஒருவரின் ஞாபகம் வந்தது. அவரிடம் சென்று என் நிலையை விளக்கினேன். நானும் உங்களுடனேயே வந்து விடுகிறேன் எனக் கூறினேன்.

ஆனால், அவரோ, ‘நீ படிப்பைத் தொடர்ந்து, உனக்கான அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றால், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கவில்லை என்றால், எங்களைப் போலவே யாசகம் கேட்பதற்கோ அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கோத்தான் செல்ல வேண்டும். இந்த நிலை உனக்கும் வர வேண்டாம்,’ என அறிவுரை கூறியுள்ளார். இந்த வார்த்தைகள்தான் ராணியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனக் கூற வேண்டும்,” என தனது வாழ்க்கையை மாற்றிய அந்த தேவதையைப் பற்றி கூறுகிறார் ராணி.

கை கொடுத்த படிப்பு

படிப்புதான் நம்மைக் காப்பாற்றும் என அந்தக் கட்டத்தில் உணர்ந்த ராணி, தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்தார். ஆனால், மேற்கொண்டு படிக்க அவரது குடும்ப பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்கவில்லை. எனவே சென்னை சென்று, அங்கு என்ஜிஓ உதவியுடன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். படிப்பை முடித்ததும் தனியார் ஹோட்டல் ஒன்றில் நல்ல வேலையும் கிடைத்துள்ளது.

“ஓராண்டு அந்த உணவகத்தில் வேலை பார்த்துவிட்டு, அதில் சேமிக்கும் பணத்தில் எனது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலாம், என நினைத்தேன். ஆனால் என்னை வளர்த்த என் அண்ணனிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது கடன்களை அடைக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. திரும்பவும் எனது ஹோட்டல் வேலையைத் தொடர்ந்தேன்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன்களை எல்லாம் அடைத்து, என் குடும்பத்தின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு முன்னேற்றி விட்டேன் என நிம்மதிப் பெருமூச்சுடன், நான் இனி எனக்கான வாழ்க்கையை வாழ முடிவு செய்தேன். ஆனால் குடும்பமும், என்னைச் சுற்றி இருந்தவர்களும் என் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை,” என்கிறார் ராணி.

ஹெச்.ஆர். வேலை

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் முகமூடியைக் கழட்டி, தன் சுயத்தை தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் ராணி வெளிப்படுத்தியபோது, அதுநாள் வரை அவரிடம் மரியாதையாக பழகி வந்தவர்களும் அவர்களது முகமூடிகளைக் கழட்ட ஆரம்பித்தனர். இது அவர் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. சக ஊழியர்கள் மற்றும் சுற்றி இருந்தவர்கள் எல்லாம், அவரை வேறு கோணத்தில் பார்த்ததை, ராணியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

இந்த நிராகரிப்பு அவரது சொந்தக் குடும்பம் வரை நீண்டதுதான் வேதனை. ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தாரும், அவரை நிராகரித்தனர். இதனால் உடைந்து நொறுங்கிப் போனார் ராணி. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவரைத் துரத்தத் தொடங்கியது.

சாலையில் சென்றால் துரத்துவது, பொது இடங்களில் தனிக்கழிப்பறைகள் இல்லாதது, சமூகத்தின் கொடூரப் பார்வைகள், குடும்பத்தில் ஆதரவு கிடைக்காதது என அவருக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் சவால்கள் நெருக்கியது. ஆனால், இந்தக் கஷ்டங்கள் தனக்கானவை மட்டுமல்ல, தன்னைப் போல் தனது சமூகமும் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ராணி உணர்ந்தார். எனவே, தன்னைப் போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தால்தான், எதிர்காலத்தில் தன் சமூகத்திற்கு ஒரு விடியல் வரும், என உறுதியாக நம்பினார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

அப்போதுதான் PeriFerry அமைப்பின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அங்கு அவர் எடுத்துக் கொண்ட இரண்டு மாத கார்ப்பரேட் பயிற்சியிலேயே, பல நல்ல நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அவற்றில் ஒன்றான, Publicis Sapientநிறுவனத்தில் அவர் வேலைக்குச் சேர்ந்தார்.  

“ஒருமுறை அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், நான் திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக அந்தப் பேருந்தில் என்னைப் பயணிக்க அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இது போன்ற பல அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன். நன்றாக உடை அணிந்திருந்தாலும், நாங்களே கேட்காவிட்டாலும் மக்களே தேடி வந்து எங்களுக்கு யாசகம் கொடுப்பார்கள், எங்களை ஆசிர்வாதம் செய்யச் சொல்வார்கள். இதெல்லாம் வருத்தமாக இருக்கும்.

ஆனால், நான் Publis Sapientல் வேலைக்குச் சேர்ந்தபின் என் வாழ்க்கை மாறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டைவிட இங்கேதான் பாதுக்காப்பாக உணர்கிறேன்,” என்கிறார் ராணி.

படிப்புதான் கேடகம்


LGBTQ+ சமூக உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காகவே  வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் தான், இந்த Publicis Sapient. இதில், ரெயின்போ இன்டர்ன்ஷிப் (Publicis Sapient's Rainbow Internship program) திட்டத்தில் சேர்ந்தபோது, ராணி தன் வாழ்க்கைப் பயணம் நல்ல வழியில் முன்னேறி வருவதை உணர்ந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, Publicis Sapient நிறுவனத்தில் Human Resource Generalist ஆக ராணி பணி புரிந்து வருகிறார்.

“படிப்புதான் என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் சமூகத்தில் கௌரவத்தைப் பெற்றுத் தரும். யாசகம் கேட்பதும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் தவறு என்று நான் குறை சொல்லவில்லை. ஆனால், படிக்கவோ, தன் திறமையை வெளிப்படுத்தவோ வாய்ப்பு இருப்பவர்கள் சமூகத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் என் ஆசை. எதிர்காலத்தில் என் சமூகத்தினருக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். அதுதான் என் ஆசை,” என வார்த்தைகளில் நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் ராணி.

சரியான நேரத்தில் கிடைக்கும் அறிவுரையும், உதவிக்கரமும் பாதிக்கப்பட்டவர்களின் விதியை மீண்டும் மாற்றி எழுதும் என்பதற்கு ராணியின் வாழ்க்கையே நல்லதொரு உதாரணம். தன்றாக படித்து, பொருளாதார ரீதியாக சுயமாக தனக்கான இடத்தை நிலை நிறுத்திக் கொண்டால், நிச்சயம் இந்த சமூகத்தில் ஜெயிக்க முடியும் என்பதை ராணி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.