
பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், ஈரானை 75-21 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கம் வென்றுள்ளது இந்திய மகளிர் கபடி அணி. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இந்திய அணியின் துணை கேப்டனான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா.
அம்மா ஆட்டோ டிரைவர், அப்பா கூலி வேலை என பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தாலும், தன் திறமையை வைத்து இன்று தனக்கான அடையாளத்தை மட்டுமல்ல, தனது ஏரியாவின் பெயரையும் சர்வதேச அளவில் பிரபலமாக்கியுள்ளார் இவர்.
சென்னையின் புறநகர் பகுதியான இந்த கண்ணகி நகரை இன்று உலகமே அறிந்த இடமாக மாற்றியிருக்கிறார் கார்த்திகா. பெரும்பாலான வெற்றியாளர்கள் தங்கள் வெற்றிக்கான காரணத்தை தங்கள் பெயரோடு சேர்த்துக் கொள்வார்கள், ஆனால் கார்த்திகா தனது பெயரோடு ’கண்ணகி நகர்’ என தனது ஏரியாவின் பெயரையும் சேர்த்து, அதன் அடையாளத்தையும் மாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

யார் இந்த கண்ணகி நகர் கார்த்திகா?
சென்னைக்குத் தெற்கே புறநகர் பகுதியாக அமைந்துள்ளதுதான் கண்ணகி நகர். இந்தியாவின் மிகப்பெரிய மீள்குடியேற்றப் பகுதி இது. லட்சக்கணக்கான மக்கள் வாழும் இந்த கண்ணகி நகரை, நம் சினிமாக்கள் திரையில் காட்டும் பிம்பம் வேறு மாதிரியாகத்தான் உள்ளது. சினிமாவில் வருவது போலவே, நிஜத்திலும் அங்கு வாழும் மக்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று மக்களும் நினைக்கின்றனர். ஆனால், தன் வெற்றியின் மூலம் அந்த தவறான பிம்பத்தை உடைத்துள்ளார் கார்த்திகா.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடி மக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கென தனியாக கடந்த 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த கண்ணகி நகர். இந்த கண்ணகி நகரில் தன் பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் கார்த்திகா.
சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் இந்த கண்ணகி நகரில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளிகள்தான். கார்த்திகாவின் குடும்பமும் அவற்றில் ஒன்றுதான். அவரது தந்தை ரமேஷ் செண்ட்ரிங் வேலை செய்து வர, அவரது தாயார் சரண்யா முன்பு தூய்மைப் பணியாளராக இருந்து, தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் கார்த்திகா 12ம் வகுப்பும், அவரது தங்கை காவியா 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கார்த்திகாவைப் போலவே அவரது தங்கை காவியாவும் கபடி வீராங்கனை தான்.

பழைய ஷூவில் பந்தாடிய கார்த்திகா
வறுமையின் பிடியில் வளர்பவர்களுக்கு எதிர்காலத்திற்கான நம்பிக்கை தருவது கல்வியும், விளையாட்டும்தான். வாழ்க்கையில் ஜெயிக்க அவர்கள் பெரும்பாலும் நம்புவது அவர்களது திறமையைத் தான். கார்த்திகாவும் அதற்கு விதிவிலக்கல்ல... படிப்பில் ஒரு பக்கம் கவனமாக இருந்தாலும், சிறுவயது முதலே கபடி விளையாட்டிலும் ஆர்வமாக இருந்துள்ளார் அவர். கண்ணகி நகர் அருகிலுள்ள பொது மைதானங்களில், நண்பர்களுடன் கபடி விளையாடி, தன் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.
கார்த்திகாவிற்கு தனது பத்து வயதில் உள்ளூர் கபடி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 6ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் அளவிலான பல கபடி போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அப்போது கிடைத்த வெற்றிகள் மூலம், தான் பயின்ற கண்ணகி நகர் பள்ளிக்கும் பெருமை சேர்க்கத் தொடங்கினார்.
விளையாட்டாகத் தொடங்கிய கபடி பயிற்சி, ஒரு கட்டத்தில் தன் எதிர்கால வெற்றிக்கான அடித்தளம் என்பதை இந்தக் காலகட்டத்தில் உணரத் தொடங்கினார் கார்த்திகா. தினமும் அதிகாலை மணல் மைதானத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார். அணிந்து கொள்ள சரியான ஷூக்கள்கூட இல்லாத போதும், தனது தந்தையின் பழைய ஷூக்களை அணிந்து இந்தப் பயிற்சிகளை அவர் மேற்கொள்ளத் தொடங்கினார்.

கார்த்திகாவிற்கு கண்ணகி நகர் மக்கள் வரவேற்பு அளித்த தருணம்
தங்கமங்கையான கார்த்திகா
கபடி விளையாட்டின் மீது கார்த்திகாவிற்கு இருந்த ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் தெரிந்து கொண்ட அவரது பெற்றோர், குடும்பம் நடத்துவதற்கே வருமானம் போதவில்லை என்ற போதும் மகளின் கனவிற்கு துணை நிற்க முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, கபடி பயிற்சி மையம் ஒன்றில் அவரை சேர்த்து விட்டனர். அங்கு பயிற்சியாளரின் உதவியுடன் மேலும் பல கபடி விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார் கார்த்திகா.
ஒரு கட்டத்தில் படிப்பா, கபடியா என்ற சூழ்நிலை வந்தபோதுகூட, கபடிக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார் கார்த்திகா. உதாரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்த தேதிகளில்தான், பீஹாரில் அவருக்கு கபடிப் போட்டியும் நடக்க இருந்தது. கபடிப் போட்டிக்காக பொதுத்தேர்வை எழுதாத கார்த்திகா, பின்னர் மறுதேர்வு எழுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
இப்படியாக மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்ற வெற்றிகள் மூலம், இந்திய இளையோர் அணியில் இடம் பிடித்தார் கார்த்திகா. துணை கேப்டனாக அங்கும் தனது திறமையான ஆட்டத்தை வழங்கிய அவர், தற்போது பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியிலும், தனது அசத்தலான ஆட்டத்தால், இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைக்க முக்கியக் காரணமாக இருந்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கார்த்திகா
‘நா கண்ணகி நகர் பொண்ணு...’
இறுதிப் போட்டியில், ஈரானை 75-21 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கம் வென்றுள்ளது இந்திய மகளிர் கபடி அணி. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இந்திய அணியின் துணை கேப்டனான கார்த்திகாதான். பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பிய கார்த்திகா, செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில்,
‘தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னதோடு, மறக்காமல் கண்ணகி நகரின் அடையாளம் மாறி விட்டது...’ என்பதையும் உறுதி செய்தார்.
கண்ணகி நகரிலும் கார்த்திகாவிற்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மலர்களால் கிரீடம் வைத்து, மாலை மரியாதையோடு அழைத்து வரப்பட்ட அவருக்கு, அந்நகரைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், 20 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அணிவித்து மேலும் கௌரவப் படுத்தினார்.
தன்னால் இன்று தன் கண்ணகி நகரே பெருமை பெற்றிருப்பதைப் பார்த்து பூரித்துப் போன கார்த்திகா,
‘மக்களே இப்போ சத்தமா சொல்லுங்க... நான் கண்ணகி நகர் பொண்ணு’ எனக் கூறிய வார்த்தைகளில் பின்னால் இருந்த வெற்றிக் களிப்பும், கூடவே காயப்பட்ட வலியின் வேதனையும் நிச்சயம் அங்கிருந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

‘இரு பெண் பிள்ளைகளையும் கபடி போட்டிக்கு அனுப்புவதைப் பார்த்து எங்களைப் பலர் கிண்டல் செய்தனர். ஆனால் அப்போது கேலி பேசியவர்கள் இப்போது வியப்போடு கார்த்திகாவைப் பார்க்கின்றனர். கண்ணகி நகருக்கென தனி அடையாளமாக கார்த்திகா உருவாகி இருப்பதாக அவர்கள் பெருமையோடு பேசுகின்றனர்,’ என தன் மகளின் வெற்றியைக் கண்டு, பூரிப்போடு பேசுகின்றனர் கார்த்திகாவின் அம்மாவும், அப்பாவும்.
கண்ணகி நகரின் அடையாளம் ஆன கார்த்திகா
கார்த்திகாவின் இந்த வெற்றிக்கு பெரும் அடித்தளமாக இருந்தவர், 28 வயதான அவரது பயிற்சியாளர் ராஜிதான்.
கார்த்திகாவின் இந்த வெற்றி குறித்து ராஜி கூறுகையில்,
”கண்ணகி நகரின் மீதுள்ள இழுக்கை நீக்க வேண்டும் என நினைத்து தூவிய விதை கார்த்திகா என்ற வடிவில் மரமாக வளர்ந்துள்ளது. போதிய விளையாட்டு மைதானமோ, உடற்பயிற்சி கருவிகளோ ஏதுமில்லாமல் கார்த்திகா சாதித்துள்ளார். இது கண்ணகி நகரின் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரும் அடித்தளமாக அமையும்,” என்கிறார்.
தங்கமங்கை கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ரூ. 25 லட்சம் உதவித்தொகையும் அளித்துள்ளார். அதோடு, ‘கண்ணகி நகர் கபடி விளையாட்டு வீரர்களுக்கான தேவையைப் பற்றி முதல்வர் கேட்டறிந்ததாகவும், தனக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அரசு வேலை வழங்குவதாக உறுதி அளித்திருப்பதாகவும்’ முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு கார்த்திகா தெரிவித்துள்ளார்.
தனது வெற்றி மூலம் தனது ஏரியாவின் அடையாளத்தையே மாற்றியுள்ள கார்த்திகாவிற்கு சமூகவலைதளங்களிலும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. ஏழ்மையான சூழலில் இருந்து வந்து, தன் வாழ்க்கைத்தரம் மட்டும் மாறினால் போதும் என நினைக்காமல், தனது ஏரியாவின் அடையாளத்தையும் மாற்ற வேண்டும் என முயற்சி செய்து, இன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் கார்த்திகா.