
2025 கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலந்தாய்வின் போது மீடியாக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார் 49 வயது அமுதவல்லி மணிவண்ணன்.
பிள்ளைகளின் கலந்தாய்வுக்காக பெற்றோர் வந்திருப்பார்கள், ஆனால் அமுதவல்லி தன்னோட சேர்க்கைக்காக கலந்தாய்வில் பங்கேற்றிருந்தார். நீட் தேர்வில் 147 மதிப்பெண் பெற்ற அமுதவல்லி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை பெற்றிருக்கிறார்.

மருத்துவராகும் ஒரு தாயின் கனவு
தென்காசி மண்ணின் மகளான அமுதவல்லிக்கு சிறுவயதில் ஒரு கனவு இருந்தது. மருத்துவராக வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ஆனால், வாழ்க்கை சில சமயங்களில் நாம் நினைத்தபடி செல்வதில்லை அல்லவா?
1994ல் பொது நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று மெரிட்டில் பிசியோதெரபி இடம் மட்டுமே கிடைத்ததால் பிசியோதெரபிஸ்டாகி இருக்கிறார் அமுதவல்லி. MBBS படிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் நிறைவேறாத ஆசையாகவே அவருக்குள் இருந்தது. பிசியோதெரபி படித்து, சொந்தமாக கிளினிக் வைத்து, குடும்பம், மகள் என அமுதவல்லியின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. அந்த மருத்துவக் கனவு மட்டும் மனதின் ஏதோ ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்தது.
அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு நீட் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். மகள் படிக்கும்போது, தான் படித்த பாடங்களை அம்மாவிடம் சொல்லிப் பார்க்கும் பழக்கத்தை வைத்திருந்திருக்கிறார் சம்யுக்தா. அப்போதுதான் அமுதவல்லிக்குள் மறைந்து கிடந்த மருத்துவ கனவு மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.
'நாமும் ஏன் நீட் தேர்வு எழுதக்கூடாது?' என மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அதுவும் மாற்றுத்திறனாளியான தனக்கு முடியுமா என்ற தயக்கம் ஒருபுறம் இருந்தாலும், அந்த ஆசை மிக வலிமையானதாக இருந்தது.

மகள் சம்யுக்தாவுடன் அமுதவல்லி
புதிய முயற்சியும் பயிற்சியும்
உடனடியாக மகள் சம்யுக்தா படித்த பயிற்சிப் புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தார் அமுதவல்லி. 32 வருடங்களுக்கு முன்பு படித்த பாடங்களுக்கும், இப்போதுள்ள நீட் தேர்வு பாடங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. கடினமாகத்தான் இருந்தது. ஆனால், மனம் தளராமல் தினமும் ஆர்வத்துடன் படித்தார். சந்தேகம் வரும்போதெல்லாம் மகள் சம்யுக்தாவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார். மகள் ஒரு தோழியாக, குருவாக இருந்து தன்னுடைய தாயை வழிநடத்தி உள்ளார்.
6 மாத இடைவெளியில் நீட் தேர்வுக்குத் தயாராகி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் அமுதவல்லி! இது சாதாரண சாதனையல்ல. ஒரு தாயின் விடாமுயற்சிக்கும், மகளின் தோழமைக்கும் கிடைத்த வெற்றி.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியை அமுதவல்லி தேர்ந்தெடுத்தார். அன்று அவருடைய மகள் சம்யுக்தா கிருபாளினியும் ஒரு பாதுகாவலராக உடன் இருந்தார். விண்ணப்பத்தில் பாதுகாவலர் இடத்தில் மகளே கையெழுத்தும் போட்டுள்ளார். அந்த நொடி, தாய் மகளுக்கு இடையேயான பந்தத்தையும், ஒருவருக்கொருவர் துணை நிற்கும் மனப்பான்மையையும் உணர்த்தியது.
"நீட் தேர்வில் நான் 147 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறேன். கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்ததும் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். என் மகள் நீட் தேர்வில் 460 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. நான் பிசியோதெரபி படிப்பதற்கு முன்பே எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அது 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறி இருக்கு. என்னோட இந்த வெற்றிக்கு என்னோட மகள் தான் முழுக் காரணம். எப்படி தேர்வுக்கு தயாராவது என்று அவர் எனக்கு வழிகாட்டினார்," என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அமுதவல்லி.

மகள் சம்யுக்தா உடன் தாய் அமுதவல்லி
"எந்தெந்த பாடப்பிரிவுகளில் கவனம் செலுத்தினால் எளிதில் தேர்வில் வெற்றி பெறலாம் என்று அம்மாவுக்கு சொன்னேன். அவர் நேரம் செலவிட்டு தேர்வுக்கு தயாரானார் அதனால் வெற்றியும் பெற்றிருக்கிறார். நீட் தேர்வில் உதவியது போல் எனது அம்மாவுக்கு எம்பிபிஎஸ் படிப்பிலும் உதவி செய்வேன். பாடங்களில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பேன். அவரையும் படிக்க ஊக்குவிப்பேன்," என்று உறுதியுடன் கூறுகிறார் சம்யுக்தா.
இந்த சாதனை யாருக்கானது?
இந்த வெற்றி அமுதவல்லியின் தனிப்பட்ட வெற்றியல்ல. அவரைப் போன்ற ஆயிரக் கணக்கான தாய்மார்களுக்கான வெற்றி. வயது ஒரு தடையல்ல, மனநிலைதான் மிக முக்கியம் என்பதை நிரூபிக்க இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. உங்கள் கனவுகளை விட்டுக் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை, ஒழுங்கான திட்டமிடல், தினசரி முயற்சி – வெற்றிக்கு வழிவகுக்கும்.
“புதிய முயற்சியில் குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியம், என்னுடைய கணவர் வழக்கறிஞராக இருக்கிறார், அவரும் என் மகளும் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். அதனால் எனக்கு குடும்பச் சிக்கல் என்று எதுவும் இல்லை. காலையில் கல்லூரி சென்று எம்பிபிஎஸ் படித்து விட்டு, மாலையில் பிசியோதெரபி பணியைச் செய்யலாம் என திட்டமிட்டு இருக்கிறேன்,” என்கிறார் அமுதவல்லி.
“வாழ்க்கை ஒரு புத்தகம் என்றால், இன்று அதன் முதல் பக்கம் தான் முடிந்தது. இனி MBBS பயணத்தின் புத்தம் புதிய அத்தியாயம் தொடங்குகிறது” என்று சொல்கிறார் அமுதவல்லி.
வழக்கமாக அம்மாக்கள் மகள்களின் இன்ஸ்பிரேஷனாக இருப்பார்கள், இங்கு ஒரு மகள் அம்மாவின் இன்ஸ்பிரேஷன் ஆகி இருக்கிறார். வயது ஒரு தடையல்ல, கனவுகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும், முயற்சி செய்தால் நிச்சயம் அதை அடையலாம் என்பதை அமுதவல்லி நிரூபித்துள்ளார். மகளின் தோள் நின்று ஒரு தாய் தன் மருத்துவக் கனவை நனவாக்கிய இந்த கதை, நம்பிக்கை விதைகளை விதைக்கிறது.