
சுகாதார சேவைகளை பாலினம் சார்ந்த நுண்ணறிவுடன் அணுகவேண்டும், என்கிறார் இந்தியாவில் சுகாதார சேவைகளில் முன்னோடியாகத் திகழும் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி.
”எல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை பொருந்தாது,” என்று ஹெர்ஸ்டோரி நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ குழுமம் 140 நாடுகளைச் சேர்ந்த 120 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு 9,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் மருத்துவ சேவை வழங்கியுள்ளது.
நோயாளிகள் மனநிறைவடையும் வகையில் மிகச்சிறப்பான, தரமான சேவையை இந்தக் குழுமம் வழங்கி வருவதில் ப்ரீத்தா ரெட்டியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதுமட்டுமில்லாது, இந்தியாவில் சுகாதார கொள்கைள் வகுக்கப்படுவதில் அவர் முக்கிய பங்களிக்கிறார்.
இந்திய தர கவுன்சில் (QCI) நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர். மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABH) அமைக்கப்படுவதில் பங்களித்திருக்கிறார். சமூக நலனில், குறிப்பாக நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உயிர் காக்கும் சிகிச்சைகளுக்காக SACHi (Save a Child’s Heart Initiative) போன்ற முயற்சிகளையும் ஊக்குவித்து வருகிறார் ப்ரீத்தா ரெட்டி.

ப்ரீத்தா ரெட்டி
மகப்பேறு என்கிற பிரிவைத் தாண்டி பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் முக்கிய கவனம் செலுத்தவேண்டும், என்கிறார் ப்ரீத்தா ரெட்டி. அவருடன் நடந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
ஹெர்ஸ்டோரி: இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியம் என்பது எப்படி முன்னேறியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
ப்ரீத்தா ரெட்டி: இந்தியாவில் சுகாதார சேவை என்பது மிகப்பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. உலகளவில் புற்றுநோய் சிகிச்சையில் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை அதிகளவில், வெற்றிகரமாக செய்திருக்கிறோம்.
பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பாலினம் சார்ந்த நுண்ணறிவுடன் அணுகவேண்டும். இதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம். எல்லாவற்றிலும் முன்னோடிகளாகத் திகழும் நாம், இந்த விஷயத்திலும் உலக நாடுகளுக்கு வழிகாட்டவேண்டும்.
சமீபத்தில் பிரதமர் தனது பிறந்த நாளன்று, பெண்களின் மேம்பாட்டிற்காக அரசு நலத்திட்டங்களை அறிவித்திருந்தார். பெண்களின் ஆரோக்கியத்தை அணுகும் விதத்தில் அறிவியலும் தகவல் தொடர்பும் கவனம் செலுத்தவேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை பொருந்தாது என்பதை கருத்தில் கொண்டு பாலினம் சார்ந்த குறிப்பிட்ட அம்சங்களை கூர்ந்து கவனிக்கவேண்டும்.
பெண்களின் ஆரோக்கியம், பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் என்றதுமே நாம் மகப்பேறு பற்றியே பேசுகிறோம். அப்படியானால் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொடுக்கும் இயந்திரமா? எனவேதான் பாலினம் சார்ந்த நுண்ணறிவு அவசியமாகிறது. உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமானது அல்ல, என்னைப் போன்ற பெண்களுக்கும் அது பொருந்தும். குடும்பம், குழந்தைகளின் நலன் மட்டுமே முக்கியம் என்கிற பிற்போக்குத்தனமான சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டவேண்டும்.
ஹெர்ஸ்டோரி: இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இதை எப்படி சமாளிப்பது?
ப்ரீத்தா ரெட்டி: தகவல்கள் முறையாக சென்றடைந்தாலே ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். கிராமப்புறப் பெண்களுக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
ஆந்திராவின் சித்தூரில் என் அப்பா வாழ்ந்த கிராமம் இருக்கிறது. ’டோட்டல் ஹெல்த்’ என்கிற திட்டத்தை அங்கே தொடங்கி கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் போன்றோரின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க ஒரு மையத்தை அமைத்தோம். மதுப்பழக்கம், புகையிலை, புகைப்பிடித்தல், நுரையீரல் புற்றுநோய், தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய் போன்றவை இங்கு பரவலாக இருந்தது தெரியவந்தது.
மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றிகான ஸ்கிரீனிங் செய்து ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளித்தோம். அத்துடன் இவர்களுக்கு திறன் பயிற்சியும் வழங்கப்பட்டது. மருத்துவமனைக்கு தேவையான படுக்கை, சீருடை போன்றவற்றை இவர்கள் தயாரித்துக் கொடுத்தனர். இதனால் இவர்களுக்கு வருமானம் கிடைத்தது மட்டுமல்லாமல் கெட்ட பழக்கங்களும் குறைந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஹெர்ஸ்டோரி: எனவேதான் தனியார் சுகாதாரத் துறையும் அரசும் ஒன்றிணைந்து முழுமையான பராமரிப்பு அளிப்பது முக்கியமாகிறது…?
ப்ரீத்தா ரெட்டி: திறன் பயிற்சி வழங்குவதில் தனியார் துறை எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 40,000 சுகாதார பணியாளர்களுக்கு திறன் பயிற்சியளிக்கிறோம். முன்பைக் காட்டிலும் அரசாங்கம் தனியார் துறையுடன் இணக்கமாகவே செயல்படுகிறது.
காசநோய், புற்றுநோய் ஸ்கிரீனிங், நீரிழிவு போன்றவற்றில் இந்த கூட்டு முயற்சி கைகொடுத்தாலும் உடல் பருமன், மன நலம் போன்ற பகுதிகளில் வெகு தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
ஹெர்ஸ்டோரி: பெண்களுக்கான புற்றுநோய் மையமான Athenaa பற்றி சொல்லுங்கள்.
ப்ரீத்தா ரெட்டி: செப்டம்பர் மாதம் டெல்லியில் பெண்களுக்கான புற்றுநோய் மையமாக Athenaa என்கிற மையத்தை அப்போலோ தொடங்கியது. பெண்கள், எந்த வகையான புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும் எங்களைத் தொடர்புகொள்ளலாம். தற்போது புற்றுநோயில் மட்டுமே கவனம் செலுத்தினாலும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஹெர்ஸ்டோரி: இந்தியாவில் மார்பக புற்றுநோய் அதிகம் பரவியுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?
ப்ரீத்தா ரெட்டி: மாதவிடாய் நிற்பதற்கு முன்பான பெரிமெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களைக் கண்டறிந்து மார்பக புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்யத் தொடங்கவேண்டும். பெண்கள் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அரசாங்கம் ஸ்கிரீனிங் திட்டங்களை அதிகப்படுத்தவேண்டும்.
ஹெர்ஸ்டோரி: உடல் ஆரோக்கியத்தில் நோய் தடுப்பு பராமரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறதே…?
ப்ரீத்தா ரெட்டி: நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஸ்கிரீனிங் செய்ய ஊக்குவிக்கிறோம். இதுபற்றி விவரமாக எடுத்து சொல்லி இந்த செயல்முறையை கட்டாயமாக்கினால் அதிக பலன் கிடைக்கும்.
அப்போலோ குழுமத்திலும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்யாவிட்டால் ஊதிய உயர்வை நிலுவையில் வைக்கிறோம். இதனால் பலருக்கு நீரிழிவு, ஹைப்பர்டென்ஷன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முயற்சியினால் ஆண்கள் உடல் எடையைக் குறைத்திருக்கின்றனர், பெண்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களும் அரசு ஏஜென்சிக்களும் இப்படிப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை கட்டாயமாக்கினால் எப்பேர்பட்ட மாற்றம் வரும், என நினைத்துப்பாருங்கள்.
அதேபோல், மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் தினமும் ஒரு ரூபாய் தொகையை தங்கள் ஆரோக்கியத்திற்காக ஒதுக்கினால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதை சிந்துத்து செயல்படவேண்டும்.
ஹெர்ஸ்டோரி: தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் நோய் கண்டறியும் விதத்தை மாற்றி சிறப்பாக முடிவெடுக்க உதவினாலும் மனிதர்கள் பரிவுடன் நோயாளியை அணுகுவதும் அவசியமாகிறது. இயந்திரத்தையும் இரக்க உணர்வையும் எப்படி கையாளலாம் என்று நினைக்கிறீர்கள்?
ப்ரீத்தா ரெட்டி: உயர்தர தொழில்நுட்பத்தை நாம் ஒதுக்கிவிடமுடியாது. அதேசமயம், மனிதர்களின் ஸ்பரிசமும் சிந்திக்கும் திறனும் சிகிச்சையில் முக்கியமானது என்பேன். இந்த இரண்டையும் சரியானபடி ஒன்றிணைத்திருப்பதால் எங்கள் சேவை சிறப்பாக அமைந்துள்ளது.
ஹெர்ஸ்டோரி: சுகாதாரத் துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீங்கள், பாலினம், தலைமைத்துவம், பராமரிப்பு ஆகியவை தொடர்பாக தெரிந்துகொண்ட படிப்பினைகள் என்ன?
ப்ரீத்தா ரெட்டி: பாலினம் எந்த முயற்சிக்கும் தடையாக இருக்கக்கூடாது. பலர் என்னிடம் வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாள்வார்கள் என்பதால் இது அர்த்தமற்ற கேள்வி. குடும்பமாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் எந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டால், அனைத்தையும் முறையாக திட்டமிட்டு செயல்படுத்தமுடியும்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஸ்ரீவித்யா