அமெரிக்க அதிபர் தொடங்கி வைத்த வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கத்தால், திங்கள்கிழமை ஒரே நாளில் சென்செக்ஸ் 2,200 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட நிலையில், தற்போது இந்திய பங்குச் சந்தைகள் மீண்டெழத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன. அமெரிக்காவின் வரிவிதிப்பை மட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.8) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் உயர்ந்து 74,421.65 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் உயர்ந்து 22,577.55 ஆக இருந்தது.
இந்தியப் பங்குச் சந்தையின் ‘கறுப்பு திங்கள்’ என கூறும் அளவுக்கு ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய மறுநாளிலேயே வர்த்தகம் வெகுவாக மீண்டுள்ளது முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.
இன்று முற்பகல் 11.55 மணியளவில் சென்செக்ஸ் 797.77 புள்ளிகள் (1.09%) உயர்ந்து 73,935.67 ஆகவும், நிஃப்டி 266.95 புள்ளிகள் (1.20%) உயர்ந்து 22,428.55 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தாலும் கூட ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் என அனைத்துப் பங்குச் சந்தைகளும் மீண்டெழுந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளும் இப்போது வெகுவாக மீண்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் தொடங்கி வைத்த வரிவிதிப்பு போரின் தாக்கமும், உலகப் பொருளாதார மந்தநிலை அச்சமும் நேற்று ஒரே நாளில் பங்குச் சந்தையை புரட்டி போட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் மீதான எதிர்பார்ப்பு, இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் எதிர்பார்க்கப்படும் சாதக தன்மைகள் முதலான காரணங்களால் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பது சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் மீண்டெழ உறுதுணைபுரிந்துள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
டைட்டன் கம்பெனி
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
விப்ரோ
இன்போசிஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
எல் அண்ட் டி
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து ரூ.85.83 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan