இந்திய அளவில் 'செல்வ வளம் கொண்ட குடும்பங்கள்' எண்ணிக்கையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் வகிக்கிறது. செல்வ வளம் உருவாக்கத்தில் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முக்கிய அங்கம் வகிப்பதும், மாநில அளவிலான உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளதும் மெர்சிடிஸ்-ஹுருன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வர்த்தக வளர்சி மற்றும் வருமான வரி பங்களிப்பிலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதும், ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் ஐடி ஆகிய துறைகள் மாநில தொழில் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்துள்ளது.
Mercedes-Benz Hurun India Wealth Report 2025, உலகின் முன்னணி பொருளாதாரங்களில் செல்வ வளம் உருவாக்கம் மற்றும் செல்வ வளம் பரவலாக்கம் தொடர்பான புரிதலை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி, செல்வ வளம் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.
செல்வ வளம் அறிக்கை
இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் நிலையில், கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் செல்வ வளத்தை உருவாக்கும் பெரிய நாடுகளில் ஒன்றாகவும் உருவாகி இருப்பதாக ஹுருன் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த பின்னணியில் நாடுகளின் செல்வ வளத்தை அளவிடும் ஆயவறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அறிக்கையை வெளியிட்டுள்ளது ஹுருன். மெர்சிடிஸ் பென்ஸ்-ஹுருன் இந்தியா செல்வ வளம் அறிக்கை; ஆடம்பர நுகர்வோர் அறிக்கை மற்றும் பென்ஸ் ஹுருன் இந்தியா அட்டவணை ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
இதில், இந்தியா 8,71,700 லட்சாதிபதி இல்லங்களை கொண்டிருப்பதாக செல்வ வள அறிக்கை தெரிவிக்கிறது. ரூ.8.5 கோடிக்கு மேல் நிகர மதிப்பு கொண்ட குடும்பங்கள் இவ்வாறு கருதப்படுகின்றன. இத்தகைய செல்வ வள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 க்கு பிறகு 90 சதவீதம் அதிகரித்துள்ளன.
2017 முதல் 2025 வரையான காலத்தில் செல்வ செழிப்பான குடும்பங்கள் 445 சதவீதம் அதிகரித்தாலும், இவர்களில் 5 சதவீதம் மட்டுமே கோடீஸ்வர நிலைக்கு முன்னேறியுள்ளனர், என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முன்னிலை
இந்தியாவில் செல்வ வளம் கொண்ட குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாநில அளவில் மகாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது. தில்லி இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
நகரங்கள் பட்டியலில், மும்பை நகரம் செல்வ வளத்தினரின் தலைநகராக விளங்குகிறது. தமிழ்நாட்டின் சென்னை ஆறாவது இடம் வகிக்கிறது.
தமிழ்நாடு; தென்னிந்தியாவில் செல்வ வளத்தை உருவாக்கும் சக்தியாக இருக்கிறது, என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 72,600 லட்சாதிபதி இல்லங்களுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. 2021க்கு பிறகு இது 75 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. ஜிஎஸ்டிபி என குறிப்பிடப்படும் மாநில அளவிலான உள்நாடு மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 52 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு அடித்தளமாக செயல்பாடு கொண்ட நிறுவனங்களில் 36 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
2021ல் 17.9 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டிபி 2025ல் 27.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஃபின்லாந்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது. ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் ஐடி துறைகள் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
செல்வந்தர்கள் எண்ணிக்கை
செல்வந்தர்களை பட்டியலிடும் ஹுருன் செல்வந்தர்கள் பட்டியலில், தமிழ்நாடு 119 தனிநபர்களை கொண்டுள்ளது. மேலும், வருமான வரி பங்களிப்பிலும் தமிழ்நாடு முன்னிலை உள்ளது. ஜிஎஸ்டிபியில் வருமான வரி பங்களிப்பு விகிதத்தில் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது.
அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் அமைப்புமயமாகி வருவதை இது உணர்த்துகிறது.
சென்னை நகரம் 22,800 லட்சாதிபதி குடும்பங்களை கொண்டுள்ளது. இந்த வகையில்,
அதிக செல்வ செழிப்பான குடும்பங்கள் கொண்ட நகரங்களில் சென்னை ஆறாவது இடத்தில் உள்ளது. மகாரஷ்டிராவின் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளது. தில்லி இரண்டாவது இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தமிழக செல்வ செழிப்பான குடும்பங்களில் சென்னை 31 சதவீதம் கொண்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
- தமிழ்நாடு 72,600 செல்வ செழிப்பான குடும்பங்கள் கொண்டு 3வது இடத்தில் உள்ளது.
- நகரங்கள் பட்டியலில் சென்னை 22,800 செல்வ செழிப்பான குடும்பங்கள் கொண்டுள்ளது.
- செல்வ வளம் கொண்ட தனிநபர்கள் பட்டியலில் தமிழ்நாடு 119 தனிநபர்களை கொண்டுள்ளது. மகாராஷ்டிரா 471 மற்றும் தில்லி 215 தனிநபர்களை கொண்டுள்ளது.
- ஜிஎஸ்டிபியில் தமிழ்நாடு 52 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
Edited by Induja Raghunathan