அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து பணியாற்றும் பணியாளர்களுக்கான H-1B விசா அனுமதிகளில், அமேசானுக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இந்திய நிறுவனமான TCS இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) படி, ஜூன் 2025 நிலவரப்படி, அமேசான் நிறுவனத்தில் 10,044 தொழிலாளர்கள் H-1B விசாக்களைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது இடத்தில் TCS 5,505 H-1B விசாக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அமைப்பான USCIS வெளியிட்ட தரவுகளின்படி, 2025ம் ஆண்டிற்கான H-1B வீசா அனுமதி விவரம்:
அமேசான் – 10,044 விசா அனுமதிகள்
டிசிஎஸ் (Tata Consultancy Services) – 5,505 வீசாக்கள்
மைக்ரோ சாஃப்ட் – 5,189
மெட்டா – 5,123
ஆப்பிள் – 4,202
கூகுள் – 4,181
டெலாய்ட் – 2,353
இன்போசிஸ்– 2,004
விப்ரோ – 1,523
டெக் மகிந்திரா Americas – 951
இந்திய ஐடி நிறுவனங்கள், குறிப்பாக TCS, Infosys, Wipro மற்றும் Tech Mahindra ஆகியவை, அமெரிக்க H-1B வேலைவாய்ப்பு வீசா திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக உருவெடுத்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செப்டம்பர் 21, 2025 அன்று வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவின்படி, இனிமேல் H-1B விசாவுக்கு , ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் $100,000 (இந்திய ரூபாயில் சுமார் 88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வுக்குக் காரணமாக டிரம்ப் அரசு கூறுவதென்னவெனில்,
“H-1B திட்டம் முறையாக பயன்படுத்தப்படவில்லை. இந்த விசா திட்டத்தின் கீழ் அதிகமாக வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து, அமெரிக்கர்களை வேலையில் இருந்து நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளது.
2000ம் ஆண்டில் 1.2 மில்லியனாக இருந்த வெளிநாட்டு STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) தொழிலாளர்கள், 2019ம் ஆண்டளவில் 2.5 மில்லியனாக உயர்ந்துள்ளனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஐடி துறை:
2003ல் IT துறையில் H-1B விசா பெற்றவர்கள் – 32%; கடந்த 5 ஆண்டுகளில் சராசரி – 65%.
ஒரு கணக்கெடுப்பில், H-1B “Entry-level” பணியாளர்கள், முழுநேர அமெரிக்க ஊழியர்களை விட 36% குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. அதாவது, இந்த H-1B விசா சார்ந்த IT அவுட்சோர்சிங் நிறுவனங்களைப் பயன்படுத்துவது நிறுவன உரிமையாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க லாபத்தை வழங்குகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தொழில்நுட்பத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வை மேற்கோள் காட்டி, முழுநேர, அமெரிக்க ஊழியர்களை ஒப்பிடும்போது H-1B நுழைவு நிலை விசா பணியாளர்கள் 36% சம்பளம் குறைவாக வாங்குவதும் தெரியவந்தது.
பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் சொந்த IT துறையை மூடி, H-1B வாயிலாக குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதாகவும் தெரியவந்துள்ளது.
யுஎஸ்ஐசிஎஸ் தரவுகளின் படி, ஒரு ஐடி கம்பெனி 5,000த்திற்குமான விசா அனுமதிகளைப் பெற்றுள்ளது, ஆனால், அதே நேரத்தில் 15,000 அமெரிக்கர்களைப் பணியை விட்டு நீக்கியுள்ளது. மற்றொரு நிறுவனத்திற்கு 1,700 H-1B விசா, ஆனால் 2,400 அமெரிக்கர்கள் பணி நீக்கம்.
மூன்றாவது நிறுவனம் – 2022 முதல் 27,000 அமெரிக்கர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது, ஆனால் 25,000+ H-1B விசா பெற்றுள்ளது.
நான்காவது நிறுவனம் – 1,000 அமெரிக்கர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு 1,100 H-1B விசா அனுமதிகளை பெற்றுள்ளது.
அமெரிக்க பணியாளர்களுக்கு நலம் பயக்கும் என்று அமெரிக்கா கூறும் இந்த விசா கட்டண உயர்வினால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், இந்திய ஊழியர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் H-1B விசா முறைக்கு எதிராக அமெரிக்க அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள், நாளைய தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கும் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதி.