ரூ.18,600 கோடி முதலீட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு L&T ஒப்பந்தம்!

06:48 PM Jun 04, 2026 | muthu kumar

ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக்.குழுமங்களில் ஒன்றான எல்&டி (Larsen Toubro) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.என்.சுப்ரமண்யன் சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில் துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும், தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளில் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதையும் தமிழ்நாடு முதலமைச்சர் தந்து பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார் விஜய்.

இந்த சந்திப்பின்போது, லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்.

2.கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்

3. திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம்.

2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் லட்சிய இலக்கினை எட்டுவதற்கான முயற்சியின் மைல் கல்லாக அமைந்துள்ள பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம், மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சி பெறுவதுடன், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும். மேலும், காட்டுப்பள்ளித் திட்டம், கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுவரும்.

இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும். ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் தொழில்துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.